வழக்கறிஞர் நிலா தெளிவான விளக்கம்
விஜய் ஆட்சி அமைப்பதற்கு அதிமுகவில் இருந்து பிரிந்துவந்த 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கட்சித்தாவல் தடை சட்டம் என்றால் என்னவென்று விளக்கம் அளிக்கிறார் வழக்கறிஞர் நிலா.
எதற்காக இந்த சட்டம்..?
ஒரு கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் தனிப்பட்ட ஆதாயத்துக்காக வேறு கட்சியில் தனியாக அல்லது குழுவாக சேர்வதை தடுப்பதற்காகவே கட்சித் தாவல் தடைச் சட்டம் எனப்படும் ஆன்ட்டி டெஃபிக்ஷன் லா கொண்டுவரப்பட்டது. இது 1985ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை எம்.எல்.ஏ.க்கள் உடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
பதவிப்பறிப்பு
கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஏதேனும் காரணத்தால் அந்த கட்சியில் இருந்து விலகினால், இந்த சட்டம் மூலம் அவரது பதவி பறிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். எனவே, கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் செயல்பட்டாலும் பதவி பறிக்கப்படும். இது கட்சியின் விரிப்பத்தைப் பொருத்தது. கட்சி நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப்போட்டு நிதானமாக நடவடிக்கை இருக்கலாம். அதேபோல், சுயேச்சை உறுப்பினர் வேறு ஒரு கட்சியில் சேர்ந்தால் பதவி இழப்பார்.
சபாநாயகர் முடிவு
உறுப்பினர்களின் பதவி தானாகவே பறிக்கப்படாது. குறிப்பிட்ட எம்.எல்.ஏ. அல்லது ஒரு குழு சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருக்கிறது என்பது குறித்து சபாநாயகரிடம் புகார் அளிக்க வேண்டும். இதுகுறித்து சபாநாயகர் விசாரணை நடத்தி விளக்கம் நடத்தி முடிவு எடுக்கவேண்டும். ஆனால், இதற்கு சபாநாயகருக்கு காலவரம்பு இல்லை. இந்த விஷயத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதி. சபாநாயகரால் உறுப்பினர் அல்லது குழு தகுதி நீக்கம் செய்யப்படலாம். அப்படி நடந்தால் அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
விதிவிலக்கு
உறுப்பினர் விலகுவதை தடுப்பதற்கு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இதில் ஜனநாயகத்துக்கு இடம் உண்டு. அதாவது, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினால், வேறு கட்சியுடன் இணைந்தால், கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஒரு கட்சியின் அதிகமான உறுப்பினர்களின் எண்ணத்துக்கு மதிப்பளிப்பதற்காகவே இந்த சட்டம் செயல்படுகிறது.
இப்போது விஜய்க்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி மன்னிக்கப்போகிறாரா அல்லது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்குப் பரிந்துரைக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட விவகாரம் நடைபெறும். சபாநாயகர் காலம் தாழ்த்துவதற்கு நீதிமன்றத்தில் முறையிட முடியும்.
நீதிமன்றத்தின் அதிகாரம்
சபாநாயகர் முடிவெடுக்கும் வரை நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் (கேசாம் மெகச்சந்திர சிங் வழக்கு, 2020) சபாநாயகர் தகுதி நீக்கப் புகார்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் சபாநாயகருக்கு “குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுங்கள்” என்று உத்தரவு பிறப்பிக்க முடியும்.
சபாநாயகர் செயல்படத் தவறினால் உச்ச நீதிமன்றமே சம்பந்தப்பட்ட உறுப்பினரைச் சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்கலாம். அவர் அமைச்சராக இருந்தால், அந்தப் பதவியிலிருந்து நீக்க உத்தரவிடலாம். அதிதீவிர சூழலில், நீதிமன்றமே அவரைத் தகுதி நீக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது.
