பெற்றோருக்குப் பாடம்
பெண் குழந்தைகளின் பருவமடைதல், டீன் ஏஜ் காதல் போன்றவற்றை பற்றியெல்லாம் நாமெல்லாம் நிறைய டிஸ்கஸ் செய்திருக்கிறோம். அதே அளவுக்கு ஆண் குழந்தைகளின் பருவமடைதல், பள்ளிப்பருவத்தில் வருகிற காதல், அவர்கள் ஆபாசப்படம் பார்ப்பது போன்றவற்றைப் பற்றியெல்லாம் டிஸ்கஸ் செய்திருக்கிறோமா என்றால், சந்தேகம்தான்.
இது குறித்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் கார்த்திக் குணசேகரன், “ஆண் குழந்தைகளும் வயதுக்கு வருவார்கள் என்கிற விழிப்புணர்வு இன்றைக்கு பலருக்கும் வந்துவிட்டாலும், அது எந்த வயதிலிருந்து எந்த வயதுக்குள் வரும்; அதனால் சிறுவர்களுக்குள் நிகழ்கிற மாற்றங்கள்; அந்த நேரத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.
ஒரு சிறுவனுடைய 10 வயதில் இந்தப் பருவ மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். உடலளவில் ஆணுறுப்பு, விதைப்பைகள் பெரிதாக ஆரம்பிக்கும். இனப்பெருக்க உறுப்பைச் சுற்றியும், அக்குளிலும் ரோமங்கள் வளர ஆரம்பிக்கும். கை, கால்களின் தசைகள் இறுகி, மென்மையான குரல் உடைந்து கரகரப்பான ஆண் குரல் தலைகாட்ட ஆரம்பிக்கும். இவையெல்லாம் ஓர் அசெளகர்யத்தைக்கூட அந்தச் சிறுவனுக்குத் தர ஆரம்பிக்கும்.
குழந்தைகளுக்கு 9 வயதாகும்போதே, அம்மாவோ, அப்பாவோ… அவர்களைக் குளிப்பாட்டும்போது `நீ உச்சா போற இடம் சின்னதா இருக்கா… இனி நீ வளரப்போற, நெறையா தண்ணீர் குடிக்கணும். நிறைய உச்சா போகணும். ஸோ நீ உச்சா போற இடம் பெருசாகும். நம்ம உடம்புல முடி வளர்றதே உடம்பு சூடாகிறதைத் தணிக்கத்தான். உனக்கு உச்சா போற இடம், கைக்கு அடியில எல்லாம் முடி வளர ஆரம்பிக்கும். அப்படினா நீ கொஞ்சம் கொஞ்சமா பெரிய பையன் ஆகுறேனு அர்த்தம் என்று அவர்களுக்கு ஏற்ற பாஷையில் உடல் வளர்ச்சியை விளக்கிக் கூறுங்கள். நிச்சயம் பெற்றோரில் ஒருவராவது இதைச் சொல்ல வேண்டும்.
நம் நாட்டில் பெண் பிள்ளைகளுக்கு உடல் அளவில் கொடுக்கப்படுற அக்கறை ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆம், பெண் பிள்ளைகளுக்கு பீரியட்ஸ், சுத்தம், நாப்கின் உபயோகிப்பது பற்றி ஒவ்வோர் அம்மாவும் ஆழ யோசித்து அவர்களை மனதளவில் உடல் அளவில் தயார் செய்கிறார்கள். அதே அம்மாக்கள் தன் மகன்கள் வயதுக்கு வரும்போது எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்திருக்கிறார்களா என்றால் குறைவே.
ஆண் குழந்தைகள் வயதுக்கு வரும் நேரத்தில் மனதளவில், எதிர்பாலினமான பெண்கள் மேல் ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். அதனால், பெண்களைப் பற்றி நண்பர்களிடம் அதிகமாகப் பேச ஆரம்பிப்பார்கள். அடுத்தது, எதிர்பாலினம் பற்றி நெட்டில் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், நெட்டில் நல்ல விஷயங்கள் மட்டுமா இருக்கின்றன..? நெட்டில் டாய்ஸ் என்று தேடினால், அது செக்ஸ் டாய்ஸா என்றே கேட்கிறது. ஆண் குழந்தைகளுடைய உலகத்தின் பல பிரச்னைகள் இன்றைக்கு இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.
பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பின்பு, இதுதொடர்பான சந்தேகங்களை இயல்பாகத் தங்கடைய அம்மாவிடம் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆண் குழந்தைகளுக்கு இங்கேயும் சிக்கல் ஆரம்பிக்கிறது. பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில், சிறுவர்கள் பொதுவாக அம்மாக்களிடம்தான் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், எத்தனை அம்மாக்கள் தன் மகன்களிடம் வயதுக்கு வருதல் பற்றியோ, அந்த வயதில் வருகிற எதிர்பாலின கவர்ச்சி பற்றியோ, செக்ஸ் பற்றியோ பேசுகிறார்கள்?
பருவமடைகிற நேரத்தில் இதெல்லாம் சகஜம் என்பதைப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து எடுத்துச் சொல்லி, ஆண் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். பேரண்ட்ஸ் – டீச்சர் அஸோசியேஷன் என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுபோல ஒன்றிணைந்து எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்று டிஸ்கஸ் செய்து பதின்ம வயது சிறுவர்களை வழி நடத்த வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்..’’ என்கிறார்.
