முதுமையில் வருவது சகஜம் இல்லை
முதியவர்கள் என்றாலே தள்ளாடி நடப்பது சகஜம் என்று நினைக்கிறீர்களா..? இது சவாலானது என்றாலும், தீர்க்கக்கூடிய ஒன்று.
தாத்தா இப்போது நடக்க முடியாமல் தள்ளாடுகிறார், பாட்டியால் முன்பு போன்று எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கை, கால் நடுங்குகிறது என்றெல்லாம் சிலர் தெரிவிக்கும்போது, ‘இதெல்லாம் முதுமையில் வருவது சகஜம்’ என்று அசட்டை செய்கிறீர்களா..?
இந்த சிக்கல் வயது அதிகரிப்பதால் மட்டும் வருபவை அல்ல. மருத்துவ உலகில் இதனை ஃப்ராலிட்டி சிண்ட்ரோம் என்கிறார்கள். தமிழில் சொல்வது என்றால் முதுமைத் தளர்ச்சி. இது ஒரு சவாலான பிரச்னை என்றாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதே உண்மை.
ஆரோக்கியமாக, சிரித்துப் பேசி, வாக்கிங் போய்க்கொண்டிருந்த முதியவர்களை சத்தமில்லாமல் முடக்கிப் போட்டுவிடும் முதுமைத் தளர்ச்சி பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
முதுமைத் தளர்ச்சி
வயதாகும்போது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும், உறுப்புகளின் வலிமையும் குறைந்து, சிறிய நோய் அல்லது மன அழுத்தம் வந்தால்கூடத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உடல் மிகவும் பலவீனமடையும் நிலையே முதுமைத் தளர்ச்சி எனப்படுகிறது. இதன் காரணமாக முதியவர்கள் எளிதில் கீழே விழுவதற்கும், எலும்புகள் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உருவாகிறது.
ஒருவர் முதுமைத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்துகொள்வதற்கு சில அறிகுறிகள் தென்படுகின்றன.
- எந்தவொரு டயட்டும் இல்லாமல், கடந்த ஒரு வருடத்தில் திடீரென உடல் எடை கணிசமாகக் குறைவது முக்கிய அறிகுறி.
- எனக்கு எந்த வேலையும் செய்வதற்கு முடியவில்லை, உடலில் சத்து இல்லை என்ற எண்ணமே அதீத களைப்பை வெளிப்படுத்துவது.
- கைகளில் பிடிமானம் குறைந்து, ஒரு சிறிய தண்ணீர் டம்ளரைக் கூட பிடித்திருக்க முடியாமல் கஷ்டப்படுவது.
- முன்பு போல இயல்பாக நடக்க முடியாமல் சிறிய தூரத்தைக் கடக்கவே அதிக நேரமும், சிரமமும் எடுப்பது.
- வீட்டை விட்டு வெளியே செல்வது, சிறிய வேலைகளைச் செய்வது போன்றவைகளை முற்றிலும் தவிர்த்து எப்போதும் படுக்கையிலேயே இருக்கும் மனநிலை.
இதுபோன்ற அறிகுறிகள் இரண்டுக்கு மேல் இருந்தாலே அவருக்கு முதுமைத் தளர்ச்சி என்று அர்த்தம். எனவே, தளர்ச்சி வந்துவிட்டால் அவ்வளவுதான் என்று விட்டுவிடக் கூடாது. சரியான பராமரிப்பின் மூலம் இந்தத் தளர்ச்சியை முறியடிக்க முடியும். இதற்கு என்னவெல்லாம் தேவை என்று பார்க்கலாம்.
புரதச்சத்து உணவுகள் : முதியவர்களுக்குத் தசை இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அவர்களின் உணவில் முட்டை, மீன், பருப்பு வகைகள், மற்றும் பால் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எளிய உடற்பயிற்சிகள் : வயசான காலத்தில் நடக்கவே சிரமமாக இருக்கிறது, இந்த காலகட்டத்தில் எதற்கு உடற்பயிற்சி என்று அலட்சியப்படுத்தக்கூடாது. கைகளை நீட்டி மடக்குவது, நாற்காலியில் இருந்து எழுந்து உட்காருவது, மற்றும் வீட்டுக்குள்ளேயே நடப்பது போன்ற எளிய பயிற்சிகள் தசை வலிமையை அதிகரிக்கும்.
விழுவதைத் தடுத்தல் : தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கையில் இருந்து எழும்போது, குளித்து முடிக்கையில் எளிதில் வழுக்கி விழுந்துவிடுவார்கள். எனவே, முதியவர்கள் நடக்கும் பாதைகளில் போதுமான வெளிச்சம், பாத்ரூம்களில் பிடிமானங்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட, முதியவர்களை ஒதுக்கிவைக்காமல், தினமும் அவர்களுடன் பேசுவது முக்கியம். அவர்களுடைய ஆலோசனையும் தேவையும் குடும்பத்துக்கு முக்கியம் என்பதை புரியவைக்கும் வகையில் அக்கறை காட்ட வேண்டும். இந்த அன்பும் அக்கறையுமே நம்பிக்கையுடன் இந்த பிரச்னைகளில் இருந்து மீண்டுவர முதியவர்களுக்குக் கை கொடுக்கும்.
