தவறாக நினைக்கிறார்கள் என்று வேதனைப்படுவதை நிறுத்துங்கள். இவ்வளவுதான் புரிதல் என்று மென்மையாக விலகுங்கள்.

மந்திரச்சொல்

நல்ல செயலை ஒருவர் தவறாகப் புரிந்துகொள்ளலாம். அன்பான வார்த்தையை ஒருவர் அவமானமாக எடுத்துக்கொள்ளலாம். அமைதியாக இருப்பதை ஒருவர் அகங்காரம் என்று நினைக்கலாம். சாதாரணமாக விலகியதை ஒருவர் வெறுப்பு என்று கோபப்படலாம். உளப்பூர்வமான தியாகத்தை ஒருவர் பலவீனம் என்று நினைக்கலாம்.

இப்படிப்பட்ட தருணங்களில் நிஜமாகவே நல்லவராக இருந்தும், தவறாக நினைக்கிறார்கள் என்பது மிகப்பெரும் வருத்தம், வேதனையைக் கொடுக்கும். உடனடியாக அவருக்கு செயலின் உண்மையான அர்த்தத்தை, நியாயமான காரணத்தை எப்படியாவது புரியவைக்க வேண்டும் என்று சிந்திக்கும்போது, அமைதி குலையத் தொடங்குகிறது.

ஏனென்றால் ஒருவரது கண்ணோட்டத்தை, முடிவை மாற்றுவது அத்தனை எளிதான காரியமில்லை. தவறாக நினைப்பவர்களிடம் மீண்டும் மீண்டும் விளக்கம் கொடுக்கும்போது, மன அமைதியை இழக்கிறோம். புரிந்துகொள்ள விரும்பாதவரிடம் ஆயிரம் விளக்கங்கள் சொன்னாலும் அவை பயனற்றுப் போய்விடும்.

எல்லோரிடமும் நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நம்மை எல்லோரும் நல்லவராக நினைக்க வேண்டும் என்ற விருப்பத்தை விட்டுத்தள்ளுவதே உண்மையான பக்குவம். ஏனென்றால், நிஜமாக நேசிப்பவர்கள் நம்மை புரிந்துகொள்வார்கள். உண்மையாக அறிந்தவர்கள், ஒரு செயல் மூலம் நம்முடைய முழு குணத்தையும் தீர்மானிக்க மாட்டார்கள். ஆனாலும் ஒரு செயலை மட்டும் பார்த்து, நம்முடைய முழு வாழ்க்கைக்கும் தீர்ப்பளிக்கிறார் என்றால், அந்தத் தீர்ப்பை மாற்றுவதற்காக மெனக்கெட வேண்டியதில்லை.

ஏனென்றால், ஒவ்வொருவரும் அவர்களுடைய கண்ணோட்டத்தின் வழியே பிறரைப் பார்க்கிறார்கள். அவர்களை யாராவது நிஜமாக ஏமாற்றியிருக்கலாம். காயப்படுத்தியிருக்கலாம். அதனால், அவர்களுடைய அனுபவங்கள், காயங்கள், எதிர்பார்ப்புகள், பயங்கள், முன்முடிவுகள், மனநிலை வழியாகவே எல்லோரையும் பற்றி முடிவெடுக்கிறார்கள்.

நாம் நல்லவராகத் தெரிந்தால், அது அவருடைய பார்வை. தவறானவராகத் தெரிந்தால், அதுவும் அவருடைய பார்வை. அந்த இரண்டுமே நாம் அல்ல.

சில உறவுகளுக்கு விளக்கம் தேவை. சில உறவுகளுக்கு மன்னிப்பு தேவை. சில உறவுகளுக்கு எல்லை தேவை. சில உறவுகளுக்கு அமைதியான விலகல் தேவை என்பதை புரிவதே பக்குவம். புரிந்துகொள்ளாத நபரிடம் இருந்து விலகுவது வெறுப்பு அல்ல. ஒருவரை தண்டிப்பதற்காக விலக வேண்டியதில்லை. நம் மன அமைதியைப் பாதுகாப்பதற்கு எடுக்கும் நியாயமான முடிவு.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு தவறான புரிதலையும் திருத்த வேண்டியதில்லை. ஒவ்வொரு விமர்சனத்தையும் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால், நம் வாழ்க்கையின் மதிப்பு, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் இல்லை. நாம் உண்மையில் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

அதேநேரம், தவறு செய்திருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள். வார்த்தையால் ஒருவர் காயப்பட்டிருந்தால் மன்னிப்பு கேளுங்கள். நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதன் விளைவு தவறாக இருந்திருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்பிறகும் ஒருவர் நம்மைத் தவறாக நினைக்கும் இடத்தில் விலகல் நல்லது.

வாழ்க்கையில் சில கதைகளுக்கு முடிவு எழுத வேண்டியதில்லை. சிலருடைய கதையில் நாம் கெட்டவர்களாக இருக்கலாம். அது, அவர்களுடைய கதை. அதற்காக வருந்துவதில் அர்த்தமே இல்லை. நம் கதையில் நாம் யார் என்பதை அறிந்திருப்பதே போதும்.

மழை நல்லது என்றாலும் அதை திட்டுபவர்கள் உண்டு.  வெயில் நல்லது என்றாலும் எரிச்சல்படுபவர்கள் உண்டு. எனவே, எல்லோருக்கும் நல்லவராக இருப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை. ஒருவர் நம்மை தவறாக நினைப்பதால் நம் மதிப்பு குறைந்துவிடாது. ஒருவர் நம்மை புரிந்துகொள்ளவில்லை என்பதால் நம் அன்பு பொய்யாகிவிடாது. நல்ல நோக்கத்தைப் பார்க்கவில்லை என்பதால் நாம் செய்த நன்மை வீணாகிவிடாது.

அவர்களுடைய புரிதல் அவ்வளவுதான் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். தேவைப்பட்ட இடத்தில் விளக்குங்கள். தவறு இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள். மனதை காயப்படுத்துபவர்களுக்கு எல்லை வையுங்கள். புரிந்துகொள்ள முடியாதர்களிடமிருந்து நிதானமாக விலகுங்கள். இதுவே, இருவருக்கும் நல்லது. மகிச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment