உண்மையான அன்பு வைத்திருப்பவர், காத்திருக்கச் செய்ய மாட்டார்.

மந்திரச்சொல்

உண்மையான அன்பு என்பது ஒருவரை மதிப்பதில் இருக்கிறது. உண்மையாக மதிப்பவர், தேவையில்லாமல் காத்திருக்கச் செய்ய மாட்டார். அப்படி சந்திப்புக்கு தாமதம் ஏற்பட்டாலும், நேரத்தையும் மனதையும் மதிக்கும் விதத்தில் நடந்து கொள்வார்.

ஒருவரின் நேரத்தை மதிப்பதும் அவரையே மதிப்பதும் ஒன்றுதான். அன்பு இருந்தால், நேரத்திற்கும் மதிப்பு இருக்கும். காத்திருப்பது என்பது வெறும் நேர இழப்பு மட்டுமல்ல, உணர்ச்சிபூர்வமான ஏமாற்றம். இதை உளவியலில் எமோஷனல் வேலிடேஷன் என்பார்கள். முக்கியமானவர் என்ற உணர்வை மற்றவர் கொடுக்கும்போது, மனதில் பாதுகாப்பு உணர்வும் மகிழ்ச்சியும் உருவாகிறது.

ஒரு நண்பர் மாலை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்லி, 4.55 மணிக்கே ஆர்வமாக வந்து காத்திருக்கிறார். இன்னொருவர் 5 மணி சந்திப்புக்கு 6 மணிக்கு வருகிறார். அவருக்கு உண்மையிலே முக்கியமான வேலை வந்திருக்கலாம். டிராஃபிக் ஜாமில் மாட்டியிருக்கலாம். வீட்டில் யாருக்கேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், தாமதம் ஆகும் என்பதை முன்கூட்டியே சொல்வதுதான் உண்மையான அன்பு.

என்னுடைய அன்பை அறிவார், தாமதம் ஏற்பட்டாலும் நியாயமான காரணம் இருக்கும் என்பதை அவராகவே புரிந்துகொள்வார் என்று நினைப்பது சரியல்ல. இது,  அவமதிப்பாகவே கருதப்படும்.

நான் உண்மையாக மதிக்கிறேன் என்று சொல்லுவது எளிது. ஆனால் அந்த மதிப்பு உண்மையா என்பது நடத்தையில்தான் தெரியும். நேரத்திற்கு வருவது, வர முடியாவிட்டால் முன்கூட்டியே தெரிவிப்பது, வருவதற்கு தாமதமானால் மன்னிப்பு கேட்பது போன்றவை, ’முக்கியமானவர்’ என்பதை அழுத்தமாகச் சொல்லும் அன்பு மொழிகள்.

சிலர் காத்திருக்கச் செய்வதன் மூலம் தங்களுடைய அதிகாரத்தை காட்ட முயற்சிக்கலாம். இது நேர்மறை விளைவு உருவாக்குவதில்லை. உறவு நீண்ட காலம் நிலைக்க வேண்டுமெனில், பெரிய பரிசு அல்லது பாராட்டு தேவையில்லை. சிறிய செயல்களில் வெளிப்படும் பொறுப்பு போதும்.

அன்பு என்பது நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்வதில் மட்டும் இல்லை. யார் மனதையும் நோகடிக்காமல் இருப்பதே உண்மையான அன்பு.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment