கோடக்ஸ் கிகாஸ்
உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கையெழுத்து நூல்களில் ஒன்றான கோடக்ஸ் கிகாஸ் Codex Gigas என்பது சாத்தானின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இன்றைய செக் குடியரசின் (Czech Republic) போஹீமியா பகுதியில் இந்தப் பிரம்மாண்டமான கையெழுத்து நூல் உருவாக்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்
* லத்தீன் மொழியில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
* இந்த புத்தகத்தின் உயரம் சுமார் 3 அடி, எடை சுமார் 75 கிலோ.
* 320 பக்கங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது 310 பக்கங்கள் இருக்கின்றன.
* உலகின் மிகப்பெரிய இடைக்கால கையெழுத்து நூல்களில் ஒன்று.
* சுமார் 160 கன்றுகளின் தோல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* இந்தப் புத்தகத்தில் சாத்தானின் முழு உருவம் வரையப்பட்டுள்ளதால் சாத்தானின் பைபிள் என்று அழைக்கப்படுகிறது.
* இப்போது இந்த புத்தகம் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்கோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
யார் எழுதிய புத்தகம்
கிறிஸ்தவ பாதிரியார் செய்த தவறுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையில் இருந்து தப்பிக்கவேண்டுமென்றால், பைபிள் போன்ற வேதத்தை ஒரே இரவில் எழுதவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
ஆண்டவனிடம் உதவி கேட்கையில் அவர் சம்மதிக்கவில்லை. அதனால், சாத்தானிடம் உதவி கேட்டதாகவும், சாத்தான் இதை எழுதிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது செவிவழி செய்தி மட்டுமே. அறிவியல் ரீதியாக அல்லது வரலாற்று ரீதியாக இது நிரூபிக்கப்படவில்லை.
என்ன எழுதப்பட்டுள்ளது?
உலகம் எப்படி உருவானது என்று பைபிளில் இருப்பது போன்ற குறிப்புகள். வரலாறு, மருத்துவம், காலக்கணிப்பு, மந்திரச் சடங்குகள் தொடர்பான எழுத்துகள் எனப் பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கிறிஸ்தவ பைபிளின் பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் ஆதியாகமம், யாத்திராகமம் உள்ளிட்ட நூல்கள் இதில் உள்ளன. மனிதப் படைப்பு, கடவுள், மனிதர்களின் வாழ்க்கை, பாவம், தண்டனை, நம்பிக்கை போன்ற மதக் கருத்துகள் இடம்பெறுகின்றன.
அதேபோல் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, போதனைகள், அவருடைய சீடர்கள், கிறிஸ்தவ நம்பிக்கை, மீட்பு, அன்பு, மன்னிப்பு போன்ற கருத்துகளை உள்ளடக்கிய புதிய ஏற்பாடும் இதில் இடம்பெற்றுள்ளது.
பண்டைய யூத வரலாற்றாசிரியரான ஃபிளாவியஸ் ஜோசபஸ் எழுதிய இரண்டு முக்கிய நூல்கள் இதில் உள்ளன. இசிடோர் ஆஃப் செவில்லே எழுதிய Etymologiae என்ற நூலும் இதில் உள்ளது. காஸ்மாஸ் ஆஃப் பிராக் எழுதிய Chronica Boemorum என்ற நூலும் இதில் உள்ளது. போஹீமியா என அழைக்கப்பட்ட பகுதியின் வரலாறு, அரசர்கள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பதிவு செய்கிறது.
இடைக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ நூல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. நோய்கள் பற்றிய விளக்கங்கள், உடல் நலத்தைப் பாதுகாக்கும் முறைகள், நோய்களுக்கான அன்றைய சிகிச்சை அணுகுமுறைகள், மருத்துவ அறிவு மற்றும் மருத்துவ நடைமுறைகள் எழுதப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்தில் நோய், திருட்டு, தீய ஆவிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்பட்ட சில மந்திரச் சூத்திரங்களும், பேயோட்டுதல் தொடர்பான பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.
அன்றைய காலண்டர், மத விழாக்கள், முக்கியமான நாட்கள், இறந்தவர்களை நினைவுகூரும் பதிவுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதை ஒரு மத நூல் என்று சொல்லமுடியாது. இடைக்கால ஐரோப்பிய அறிவின் தொகுப்பு என்றே சொல்லலாம்.
கையெழுத்து ஆய்வுகளின்படி, புத்தகம் ஒரே எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் இவ்வளவு பெரிய நூலை எழுதுவதற்கு குறைந்தது 20 முதல் 30 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம் என்று ஸ்வீடன் தேசிய நூலகம் மதிப்பிடுகிறது.
கோடக்ஸ் கிகாஸ் புத்தகம் சேதமடையாமல் இருப்பதற்காக, பிரத்யேக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட கண்ணாடிக் கூண்டுகளுக்குள் பாதுகாக்கப்படுகின்றன. அதேநேரம், இதை படிக்க விரும்புபவர்கள், ஸ்வீடன் தேசிய நூலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையவழி டிஜிட்டல் பிரதிகளைப் (Digital Facsimile of Codex Gigas) படிக்கலாம்.
