கவிதை என்பது கண்ணீரின் மூச்சு

கவித்துவம் – 2

நிறைய நிறைய எழுதவேண்டிய ஒரு வாழ்க்கையை, சில வரிகளில் அடக்குவதே கவிதை. இது, சொல்ல முடியாத வலிக்கு மொழி கொடுக்கும். மறந்துபோன நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும். கண்ணீரை வார்த்தைகளாக மாற்றிவிடும்.  

ஒரு நல்ல கவிதை படிக்கப்படுவதில்லை, அது மனதுக்குள் இறங்கி உணரப்படுகிறது. சொற்கள் முடியும் இடத்தில் தொடங்குவதுதான் கவிதை. அப்படிப்பட்ட சில கவிதைகள் இங்கே

ஏக்கம்

பாராமுகமாக இருக்கும் ஒருவனை

பார்த்துவிடமல் இருக்க முடியவில்லை

என்னையே பார்க்கும் இன்னொருவனை

பார்த்துவிடவும் மனம் வரவில்லை

இந்த மனம் பொல்லாதது

யாரை கடக்க யாரை சேர்க்க என்று

என்னுள் ஒரு பரமபதம்

விளையாடி கொண்டு இருக்கிறது

……….

ரசனை

ஒரு இறகை ரசிப்பது போல

பறவையையும் ரசியுங்கள்

ஒரு இலையை ரசிப்பது போல

மரத்தையும் ரசியுங்கள்

ஒரு கூழாங்கல்லை ரசிப்பது போல

மலையையும் ரசியுங்கள்

நெருக்கத்தை ரசிப்பதுபோல

தூரத்தையும் ரசியுங்கள்

ரசிக்கதானே இந்த வாழ்க்கை

ரசிப்போம்

Leave a Comment