சாதிப்பதற்கான கனவுடன் இருப்பவருக்கு ஒருபோதும் வயதாவதே இல்லை.

மந்திரச்சொல்

சாதிக்க வேண்டும் என்ற கனவு ஒரு தீப்பொறி போன்றது. மனதுக்குள் சுடர் விட்டு எரிந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஆசை இருக்கும் நபர், அந்த லட்சியத்தை அடையும் வரையில் சோர்வடைவதே இல்லை. அதனால் ஒருபோதும் முதுமை அடைவதில்லை.

அவருக்கு தலைமுடி நரைக்கலாம். உடல் சோர்வடையலாம். நடை மெதுவாகலாம். ஆனால் மனதுக்குள் இலக்கை நோக்கிச் செல்லும் முயற்சி குறையாமல் இருப்பவருடைய சிந்தனை என்றென்றும் இளமையாகவே இருக்கும்.

கனவு என்பது எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பாலம். “நான் சாதிக்க வேண்டும்”, “இதை கற்றுக்கொள்ள வேண்டும்”, “ஒரு புத்தகம் எழுத வேண்டும்”, “ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்”, “என் குடும்பத்திற்கு இதைச் செய்ய வேண்டும்” என்று ஒருவர் உறுதி எடுக்கும்போது, அவரது மனம் எதிர்காலத்தை நோக்கி ஓடத் தொடங்குகிறது.

எதிர்காலத்தில் வாழும் மனிதரிடம் உற்சாகம் இருக்கும். உற்சாகம் குறையாத இடத்தில் முயற்சி இருக்கும். முயற்சி தொடரும் இடத்தில் வாழ்க்கை இருக்கும். அதனால்தான் கனவு காண்பவர் வயதானவராக இருக்கலாம், ஆனால் மனதளவில் இளைஞராகவே இருப்பார்.

ஓய்வு பெற்ற ஒருவர், என்னுடைய பொறுப்புகள் முடிந்துவிட்டன. வாழ்க்கையில் இனி எதுவுமில்லை என்று நினைத்தால், அவரது நாட்கள் வெறுமையான புத்தகமாகிவிடும். அதே மனிதர், நீண்ட நாட்களாக எழுத நினைத்த புத்தகத்தை இனி எழுதப் போகிறேன், என் அனுபவத்தை பகிரப்போகிறேன், புதிய ஊர்களுக்குப் பயணிக்கப் போகிறேன் என்று சிந்தித்தால், அவருடைய வாழ்க்கையில் மீண்டும் ஒரு புதிய அத்தியாயம் உருவாகிறது.

கர்னல் ஹார்லண்ட் சாண்டர்ஸ் தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் கே.எஃப்.சி. எனும் உலகப் புகழ்பெற்ற பிராண்ட்டை வளர்த்தார் என்பது வரலாறு. அதாவது, தாமதமாகத் தொடங்குவது தோல்வி அல்ல; தொடங்காமலே இருப்பதுதான் தோல்வி. ஒருவரின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான கடைசி வயது என்று எதுவும் இல்லை. வேலைக்கு ஓய்வு வயது இருக்கலாம்; ஆனால் கனவுக்கு ஓய்வு வயது கிடையாது.

ஒரு குழந்தையிடம் எதிர்கால லட்சியத்தைக் கேளுங்கள். பத்து பதில்கள் வரும். முதியவரிடம் கேட்டுப் பாருங்கள். பெருமூச்சுதான் வரும். அதாவது வயதாகிவிட்டது என்று கதவை மூடிக்கொள்கிறார். குழந்தையை இளமையாக வைத்திருப்பது வயது அல்ல, எதிர்கால கற்பனை. அதே கற்பனை பெரியவரிடமும் இருந்தால், அவர் வயதான பிறகும் முதுமை அடைய மாட்டார்.

70 வயதில் ஓவியம் கற்றுக்கொள்ள முடியும். 60 வயதில் தொழில் தொடங்க  முடியும். 50 வயதில் புதிய கல்வியைத் தொடங்க முடியும். 40 வயதில் வாழ்க்கையை மாற்ற முடியும். எனவே, வயதை எண்ணாதீர்கள். புதிய வாய்ப்புகளை எண்ணுங்கள். 50 வயது என்றால் வாழ்க்கையின் பாதி முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டியதில்லை. அது 50 ஆண்டுகளின் அனுபவம் உங்களிடம் சேர்ந்துவிட்டது என்பதுதான் பலம்.  வயது நமக்கு அனுபவத்தைத் தருகிறது; கனவு அந்த அனுபவத்திற்கு திசையைத் தருகிறது.

கண்ணாடியில் தனது நரைத்த தலைமுடியைப் பார்க்கும்போது ஒருவர் முதுமை அடைவதில்லை. எனக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று வெறுமையைப் பார்க்கும்போதே முதியவர் ஆகிறார். அதனால் ஏதேனும் ஒரு கனவை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மனம் என்றென்றும் இளமையாக இருக்கும்.

உடல் முதுமையடைவது இயற்கை. மனம் முதுமையடைவது தேர்வு. கனவு உயிரோடு இருந்தால், அவருக்கு எத்தனை வயதானாலும் இளைஞனாக இருப்பார்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment