மனசே மனசே குழப்பம் என்ன..?

ஸ்ட்ரெஸ் கண்டுபிடிக்கும் வழிகள்

மனசே சரியில்லை என்று எப்போதாவது ஒருவர் சொல்வது பிரச்னையே இல்லை. அடிக்கடி அப்படி சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்கவேண்டும். கோபம், சோகம், சோர்வு, பதட்டம் போன்ற எல்லாமே மனதில் ஏற்படும் சிக்கலின் ஒரு பகுதியாக இருக்கலாம்.

பொதுவாக மனநலப் பிரச்சினைகள் திடீரென்று ஒரே நாளில் வருவதில்லை. பல காரணிகள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து மனதைக் குழப்பி சிக்கலை உருவாக்கி மனநலனைப் பாதிக்கின்றன.

பொதுவான காரணங்கள்

குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு, பணம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருவது சகஜம். ஆனால், இதுவே நீண்ட காலமாக நீடிப்பது மனநலனுக்கு ஆபத்தாகலாம்.

அதேபோன்று பண நெருக்கடி, வேலை அழுத்தம், உறவுச் சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கும்போது மனம் மற்றும் மூளை இரண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நிறைய பேருக்குக் குழந்தைப் பருவ அனுபவங்கள் ஆழமான காயத்தை உண்டாக்குகிறது. அதாவது போதிய அன்பு கிடைக்காமை, பெற்றோர், ஆசிரியர், சக மாணவர் புறக்கணிப்பு, வன்முறை போன்றவை மனநலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சில மனநலக் கோளாறுகள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாகக் காணப்படலாம். ஆனால் மரபணு மட்டும் காரணம் அல்ல; வாழ்க்கை முறையும் சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

திடீரென நெருங்கிய ஒருவரது மரணம் கடுமையான பாதிப்பை உருவாக்குகிறது. இது, தவிர்க்க முடியாது என்றாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.

உடல்நலக் காரணிகள்

உடலில் ஏற்படும் சில பிரச்னைகள், நோய்கள் மனதை ஆழமாகப் பாதிப்பதுண்டு. அந்த வகையில் தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை, நீண்டகால நோய்கள், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் மனநிலையை பாதிக்கக்கூடும்.

மனிதர்கள் எப்போதும் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவர்கள். வேலை, சூழல் காரணமாக நம்பிக்கையுடன் பேசுவதற்கு யாரும் இல்லாத நிலை மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம்.

அறிகுறிகள்

மனநலப் பிரச்சினைகள் தொடங்கும் போது சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்படும். அதாவது காரணமில்லாத சோகம், கோபம், எரிச்சல், அதிக பயம், நம்பிக்கையின்மை, வேலையில் போதிய கவனம் செலுத்த முடியாமை, அதிகக் கவலை, எதிர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வருதல், தனிமையில் இருக்க விரும்புதல், முன்பு பிடித்த விஷயங்களில் ஆர்வம் குறைதல் போன்ற எல்லாமே மனநலக் குறைபாட்டில் ஆரம்ப அறிகுறிகளாக கருதப்படுகிறது.

ஒருவரிடம் உருவாகும் சிறிய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கவனித்தால், பல பிரச்சினைகளை எளிதாகக் கையாள முடியும்.

அடையாளம் காணுதல்

எல்லோருக்கும் கோபம், சோகம் வருவது இயல்பு என்றாலும் மனநலச் சிக்கலுக்கு ஆளானவர்களை எளிதில் வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலும்.

முதல் விஷயம் தூக்கம். நீண்ட நேரம் தூங்குவது அல்லது தூக்கம் வராமல் தவிப்பது மனம் சரியில்லை என்பதற்கு ஆரம்ப அறிகுறி. இரண்டு வாரத்திற்கும் மேல் ஒருவருக்கு தூக்கத்தில் தொடர்ந்து பிரச்னை இருப்பதை அறிந்தால், அவரது மனதை பரிசோதிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

இரண்டாவது உற்சாகக் குறைவு. மிகவும் பிடித்தமான ஒன்றை செய்வதற்கும் ஆர்வம் இருக்காது. கிரிக்கெட் போட்டிகளை ஆர்வமாகப் பார்க்கும் நபராக இருப்பார், அவரே கிரிக்கெட் போட்டி நடப்பது தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றால், அவருக்கு மனதில் சிக்கல் என்று அர்த்தம். இதேபோல் முன்பு மகிழ்ச்சியளித்த செயல்களில் ஆர்வம் இல்லாமல் போவதும், மனநிலை மாற்றத்துக்கான முக்கியமான அடையாளம்.

மூன்றாவது கோபம். எதற்கெடுத்தாலும் தேவைக்கும் அதிகமாகக் கோபப்படுவது, காரணம் இல்லாமலே கோபப்படுவது, சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுவது மன அழுத்தம் இருப்பதற்கு அறிகுறி.  

நான்காவது உணவுப் பழக்கம். மனச்சோர்வு, மனதில் பிரச்னை இருப்பவர்களுக்கு உணவு சாப்பிடுவதற்கு ஆர்வம் இருப்பதில்லை. சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் உடல் சக்தி குறையும், உடல் எடை மாற்றம் ஏற்படும். இது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஐந்தாவது முக்கியமான அறிகுறி தனிமை. என்னை புரிந்துகொள்ள யாரும் இல்லை, எனக்கு உதவ யாரும் இல்லை, என்னை யாரும் மதிக்கவில்லை என்றெல்லாம் கருதி தனிமையை விரும்புவார்கள். இப்படி தனிமையில் இருப்பதன் காரணமாக  சமூகத்தில் இணைந்து வாழ விரும்பாமல் தவிப்பார்கள்.

முக்கியக் குறிப்புகள்

மனதில் சோர்வு, அழுத்தம், சிக்கல் இருப்பதை முன்கூட்டியே அறியும்பட்சத்தில் பாதிப்புகளைக் குறைத்துவிட முடியும். இதற்கு குடும்ப உறவுகள், நண்பர்கள் ஆதரவு வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரும் இதனை உணர வேண்டும். இதற்குத் தேவையான உடற்பயிற்சி, போதிய உணவு, நல்ல தூக்கம், ஆரோக்கிய மனநிலை போன்றவை அவசியம். மனப் பதட்டம் என்பது வெறும் கவலை மட்டுமல்ல. அது ஒருவரின் அன்றாட வாழ்க்கை, வேலை, உறவுகள் மற்றும் உடல் நலத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு மனநல நிலையாகும்.

இதனை உடனடியாகக் கவனிக்கவில்லை என்றால், சிறிய விஷயங்களைக்கூட பெரிதாக எண்ணத் தோன்றும். அதேபோல் எதிர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.  உடல் சோர்வு, தலைவலி, உடல் வலி, இதயப் படபடப்பு அதிகரிக்கும்.

சிலருக்கு உயரமான இடங்களைப் பார்ப்பது, ரத்தத்தைப் பார்ப்பது, மூடப்பட்ட அறைக்குள் இருப்பது, விலங்குகள் அல்லது பூச்சிகளைக் கண்டு அச்சம் வரலாம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கடுமையான பயமும் பதட்டமும் ஏற்படும்.

அதனால் இதயத் துடிப்பு அதிகரித்தல், வியர்வை பெருகுதல், கை நடுக்கம், மூச்சுத்திணறல் போன்ற உணர்வு, பெரிய ஆபத்து நடக்கப் போகிறது என்ற பயம் ஏற்படலாம். இதனை பலர் இதய நோய் என்று நினைத்து அவசரமாக மருத்துவமனைக்குச் செல்வார்கள். பரிசோதனையில் உடல்நலப் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மீண்டும் இதுபோல் ஏற்படுமோ என்ற அச்சம் தொடர்ந்து இருக்கும்.

இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு பிறர் முன்னிலையில் பேசுவது, கருத்து தெரிவிப்பது, கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற சூழல்களில் அளவுக்கு அதிகமான பதட்டம் ஏற்படும். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள், நான் தவறு செய்து விடுவேனோ?, எல்லோரும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் புதிய நபர்கள், புதிய சூழலை எதிர்கொள்வதற்கு அச்சம் வரலாம்.

மனப் பதட்ட நோய்கள் பலருக்கும் ஏற்படக்கூடியவை. இது பலவீனம் அல்ல, சிகிச்சை பெறக்கூடிய ஒரு மனநல நிலை. இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் நீடித்தால் மனநல மருத்துவர் அல்லது உளவியல் ஆலோசகரை அணுகுவது மிகவும் அவசியம்.

Leave a Comment