மந்திரச்சொல்
குழந்தைக்கு சாக்லேட் ரொம்பவே பிடிக்கும். அதேநேரம், காய்கறியை சாப்பிடச் சொன்னால் முகம் சுளிக்கும். இதனால் சாக்லேட் நல்லது, காய்கறி கெட்டது என்று அர்த்தமாகாது. சாக்லேட் சுவையாக இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலுக்குப் பாதிப்பு ஏற்படலாம். காய்கறி சுவையாக இல்லையென்றாலும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அது வழங்கலாம்.
எனவே வாழ்க்கையில், மனம் விரும்புவது எல்லாம் நல்லதல்ல, மனம் எதிர்ப்பது எல்லாம் கெட்டதல்ல. பிடித்தல் என்பது உணர்வு. நல்லது என்பது மதிப்பு. இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பும்போதுதான் வாழ்க்கையில் பல தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. யாராவது பாராட்டினால் அவர்களை விரும்புகிறோம். தவறை யாராவது சுட்டிக்காட்டினால் அவரைப் பிடிக்காமல் போகிறது.
நோய் காலத்தில் மருத்துவர் கொடுக்கும் மருந்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சில மருந்துகள் கசப்பாக இருக்கலாம். ஊசி போடுவது வலிக்கலாம். ஆனால் அந்தக் கசப்பும் வலியும் குணப்படுத்துபவை. உடனடியாக இன்பம் தரும் சில விஷயங்கள் நீண்ட காலத்தில் நமக்கு தீமையை ஏற்படுத்தலாம். இதுதான் வாழ்க்கையின் முக்கியமான விதி.
உடனடி இன்பம் எப்போதும் நன்மை அல்ல, உடனடி அசௌகரியம் எப்போதும் தீமை அல்ல. மக்கள் விரும்புவது வேறு, மக்கள் நலனுக்கு தேவையானது வேறு.
தத்துவஞானி சாக்ரடீஸ் மக்கள் நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. கேள்வி கேட்டார். விவாதித்தார். சிந்திக்க வைத்தார். அதனால் அவருடைய கருத்துகள் பலருக்குப் பிடிக்கவில்லை. ஒரு கருத்து பிரபலமாக இருப்பதால் அது உண்மையாகிவிடாது. ஒரு விஷயத்தை நிறைய பேர் ஆதரிப்பதால் அது சரி என்று அர்த்தமில்லை.. இதுதான் உண்மையின் ஆழமான அர்த்தம்.
வளர்ச்சி பெரும்பாலும் பிடித்த இடத்தில் தொடங்குவதில்லை. பிடிக்காத உண்மையை ஏற்றுக்கொள்ளும் நேரத்திலே தொடங்குகிறது. உறவுகளிலும் இதே உண்மை. பிடித்த ஒருவர் நல்லவர் என்ற உத்தரவாதம் இல்லை.. ஒருவர் மிகவும் பாராட்டலாம். எல்லா ஆசைகளையும் நிறைவேற்றலாம். எப்போதும் இனிமையாகப் பேசலாம். ஆனால் அது மட்டுமே நல்ல உறவின் அடையாளம் அல்ல.
மாறாக, தவறுகளை சுட்டிக்காட்டும் ஒருவர் சில நேரங்களில் நமக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அவர் நம்முடைய வாழ்க்கையை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடும்.
பொதுவாக மனிதர்கள் தங்கள் கருத்துக்கு ஆதரவான விஷயங்களையே அதிகம் ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் பிடித்த தகவல்களை உண்மை என்று நம்பவும், பிடிக்காத தகவல்களை தவறு என்று நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதுதான் உளவியல் உண்மை. அதனால் ஒருவரை மதிப்பிடும்போது, அவரை பிடிக்கிறதா என்று கேட்காமல், அவரால் வாழ்க்கையில் முன்னேறுகிறேனா என்றே பார்க்க வேண்டும்.
விதை மண்ணுக்குள் புதைக்கப்படுவதை விரும்பாமல் போகலாம்.. ஏனென்றால், அங்கு இருட்டு, அழுத்தம், தனிமை இருக்கிறது. ஆனால் அந்த இருட்டையும் அழுத்தத்தையும் கடந்து வந்தால்தான் அது ஒரு மரமாகிறது. விதைக்கு அந்தச் சூழல் பிடித்ததாக இருக்காது. ஆனால் அது அதன் வளர்ச்சிக்கு தேவையானதாக இருக்கும்.
மனிதர்களுக்கு தோல்வி, தனிமை, விமர்சனம், மாற்றம், காத்திருப்பது பிடிக்காது என்றாலும், அவையே ஒருவரை வலிமையானவர்களாக மாற்றுகின்றன.
விருப்பங்கள் ஏமாற்றலாம். அதாவது சோம்பேறித்தனமாகப் படுத்திருப்பது எல்லோருக்கும் பிடிக்கும். ஜாலியாக செலவு செய்வது பிடிக்கும். பிறரிடம் குறை கண்டறிவது பிடிக்கும், பிறரை கேலி செய்வது பிடிக்கும். அதற்காக இவை நன்மை என்று அர்த்தமில்லை.
அதேபோல், உடற்பயிற்சி பிடிக்காமல் இருக்கலாம். சேமிப்பது பிடிக்காமல் இருக்கலாம். கடினமாக உழைப்பது பிடிக்காமல் இருக்கலாம். உண்மையை ஏற்றுக்கொள்வது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடியவை.
அதனால் முதிர்ச்சியான சிந்தனை என்பது, எனக்குப் பிடிப்பதால் சரி என்று சொல்லாமல், எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இதில் உண்மை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புவதுதான். இதுதான் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையிலான வித்தியாசம்.
வாழ்க்கையில் சில நேரங்களில் பிடித்ததை விட்டுவிட வேண்டியிருக்கும். பிடிக்காததை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால் வாழ்க்கையின் நோக்கம் பிடித்ததை மட்டும் சேகரிப்பது அல்ல; நமக்கு நல்லதைத் தேர்ந்தெடுப்பதுதான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
