கொர் கொர் குறட்டைக்கு புதிய தீர்வு

மருத்துவ ஆச்சர்யம்

குறட்டை என்பது ஒரு நோய் என்பதை பலரும் புரிந்துகொள்வதே இல்லை. குறட்டைக்குப் பின்னே எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.  

அண்மையில் ‘குட்நைட்’ என்றொரு நடிகர் மணிகண்டன் நடித்த திரைப்படம் வந்தது. குறட்டை பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது அந்தப் திரைப்படம்.  குறட்டை விடும் பழக்கம் உள்ள ஒரு நடுத்தர வர்க்க ஐ.டி இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது அந்தக் கதை. குடும்பத்தில் ஒருவருக்கு குறட்டைப் பிரச்னை இருப்பது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை இந்தப் படம் சுவாரசியமான திரைக் கதையுடன் சொன்னது. பல குடும்பங்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்னையே குறட்டை.

குறட்டை ஏன் ஏற்படுகிறது? இது ஆபத்தானதா? இதற்கு என்னதான் தீர்வு… என்று சில கேள்விகள் பலரிடம் இருக்கிறது.

உறங்கும்போது தொண்டையில் மூச்சுக்குழல் தசைகள் தளர்ந்துவிடும். அப்போது சுவாசப் பாதையின் அளவு குறுகிவிடும். இப்படி குறுகிய பாதை வழியாக சுவாசக் காற்று பயணிக்கும்போது சத்தம் எழுகிறது. இதுதான் குறட்டை. இது புல்லாங்குழல் தத்துவத்தை சார்ந்த இயல்பு நிலை தான்.

 சிலவேளை மல்லாந்து உறங்கும்போது தளர்வு நிலையில் உள் நாக்கும் சிறிது உள்வாங்கி தொண்டைக்கு வந்துவிடும்.  இதனாலும் குறட்டை வரும். கீழ் தாடை சிறிது உள்வாங்கி இருந்தாலும் குறட்டை வரக்கூடும்.  உடற்பருமன், தைராய்டு பிரச்னை, சைனஸ் தொல்லை, சளி ஜலதோஷத்துடன் கூடிய மூக்கடைப்பு, டான்சில், அலர்ஜி, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்றவை குறட்டைக்கு பாதை போடும்.

இவற்றை தவிர்த்தால் குறட்டை குட்பை சொல்லிவிடும். குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல் கூடி குறைவதோடு திடீரென்று அறவே சத்தமில்லாமல் போவது உரக்க மூச்சின்மை (Sleep Apnea) எனப்படுகிறது. குறட்டை நிலையில் இதுதான் ஆபத்தானது. இதை உறுதி செய்ய ‘உறக்கப் பரிசோதனை’ (Sleep Study) இருக்கிறது.குறட்டையினால் சுவாசம் தடைபடுகிறதா? ஆக்சிஜன் அளவு குறைகிறதா? இதயத்துடிப்பு பாதிக்கப்படுகிறதா என்பது போன்ற விவரங்களை உறக்கப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உறக்கமூச்சின்மை ஆரம்பகட்டத்தில் இருந்தால், லேசர் அறுவை சிகிச்சையில் குணப்படுத்தி விடலாம். பாதிப்பு தீவிரமாக இருந்தால் ‘சிபாப்’ (Continous Positive Airway Pressure – CPAP) என்னும் முகமூடியை உறங்கும்போது அணிந்து கொள்வதுதான் சிறந்த வழி. தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, பலத்த காற்றை செலுத்தினால் அடைப்பு விலகி விடுகிறது அல்லவா? இந்த இயற்பியல் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது ‘சிபாப்’ கருவி. இதிலிருந்து வெளிப்படும் காற்று தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மூச்சுப்பாதைக்குள் செல்வதால் குறட்டை விலகிவிடும்.

மருத்துவம் ரொம்பவே முன்னேறிவிட்டது.

Leave a Comment