மந்திரச்சொல்
தனியாக இருக்கும் நபர் அமைதியானவராக, நல்லவராக காட்சியளிக்கிறார். அவரே, கூட்டத்தினருடன் சேரும்போது ஆக்ரொஷமானவராக, வன்முறையாளராக மாறிவிடுகிறார்.
தனியாக இருக்கும் ஒருவர் பேருந்து கண்ணாடியை உடைக்க மாட்டார்.
ஆனால் கல்லெறியும் கூட்டத்தினருடன் இருந்தால், அவரும் ஒரு கல் எறிகிறார். ஏனென்றால், தன்னை யாரும் தனியாக அடையாளம் காண மாட்டார்கள் என்று நினைக்கிறார். வன்முறை நிறைய மனிதர்களின் அடியாழத்தில் ஒளிந்தே இருக்கிறது.
தனித்து நிற்கும் ஒரு கழுதைப்புலி, காட்டின் ராஜாவை அரிதாகவே அச்சுறுத்தும். ஆனால், ஒரு கழுதைப்புலிக் கூட்டம் என்பது வேறு கதை. தனித்தனியாக, அவற்றுக்கு ஒரு சிங்கத்தின் வலிமை, தைரியம் இருப்பதில்லை. ஆனால், அவை கூட்டமாக ஒன்றாக இணையும்போது யானையை வீழ்த்துகின்றன. சிறுத்தைகளிடமிருந்து அல்லது சிங்கத்திடமிருந்து உணவை பறித்துச் செல்லும் தைரியத்தைப் பெறுகின்றன.
இந்த வகையில் காடு ஒரு உண்மையைக் கற்றுத்தருகிறது. அதாவது, எண்ணிக்கை ஒரு பெரிய சக்தியாக உருவாக்க முடியும் என்பதைச் சொல்கிறது.
ஒரு மனிதன் தனியாக இருக்கும்போது எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வான். அதுவே, கூட்டத்தில் இருக்கும்போது தனிப்பட்ட சிந்தனை குறைந்து, குழு மனப்பான்மையில் எதையும் செய்யத் துணிகிறார்கள்.
கிரிக்கெட் போட்டியில் தங்களுக்குப் பிடித்த அணி தோல்வி அடைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத ரசிகர்கள் ஒன்று சேர்ந்து மைதானத்தை சேதப்படுத்துகிறார்கள், பேருந்துகளை உடைக்கிறார்கள். ஆனால், தனியாக இருக்கும் நபர் அப்படி செய்ய மாட்டார்.
ஒருவர் கோபப்பட்டால் அது அருகில் இருப்பவர்களுக்கும் பரவுகிறது. பயம், வெறுப்பு, வன்முறை, வெறியாட்டம் போன்ற உணர்ச்சிகள் கூட்டத்தில் காட்டுத்தீ போலப் பரவுகின்றன.
கூட்டத்தின் அழுத்தம் மிகவும் வலிமையானது. அதனால் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்கூட சில நேரங்களில் கூட்டத்தின் தவறான முடிவைப் பின்பற்றிவிடுகிறார்கள். பெரும்பான்மையினர் செய்கிறார்கள் என்பதற்காக அவர்களும் முட்டாளாகிறார்கள்.
சரியான பாதையில் சில நேரங்களில் தனியாக நடக்க வேண்டியிருக்கும். ஆனால் தவறான பாதையில் ஆயிரம் பேருடன் நடப்பதைவிட அது மேலானது.
முட்டாள்கள் வதந்திகள், பொய்கள், பொறாமை அல்லது சுயநலன்களுக்குப் பின்னால் ஒன்று சேரும்போது, பணியிடங்கள், அரசியல், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் கூட நிலைகுலைந்து போகலாம். அவர்களின் பலம் ஒருங்கிணைப்பில்தான் உள்ளது.
முட்டாள்களுக்கு அஞ்சக்கூடாது, ஆனால் அவர்கள் ஒன்றுசேரும்போது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை குறைவாக மதிப்பிடக் கூடாது. முட்டாள்கள் கூட்டமே கலவரம் செய்கிறது. முட்டாள் கூட்டமே வன்முறைக்கு ஆசைப்படுகிறது.
மனிதரின் உண்மையான குணத்தை அறிய வேண்டுமென்றால், அவர் தனியாக இருக்கும்போது எப்படி நடக்கிறார் என்பதை மட்டும் பார்க்கக் கூடாது. கூட்டத்தினருடன் எப்படி பழகுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
எப்போதும் ஒரே தன்மையுடன் இருப்பவரே தனித்தன்மை மிக்கவர். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
