காதல் என்பது உயிர் குடிக்கும் மிருகம்

சீரீஸ் எனும் வாழ்க்கை / முஸாஃபர் கஃபே musafir cafe.

காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் மிகப்பெரும் போதை. அதோடு மிகப்பெரும் அவஸ்தை. லட்சியம் இல்லாத இரண்டு பேர் எளிதாக காதலிக்கலாம், ஜெயிக்கலாம். ஒருவர் லட்சியத்துடன் இருக்கும்போது, மற்றவருக்கு லட்சியமில்லை என்றாலும், அந்த காதல் ஜெயித்துவிடும். ஆனால், இரண்டு பேருக்கும் லட்சியம் இருந்து, காதலும் இருந்தால்… அது உயிரைக் குடிக்கும் நோயாக மாறிவிடும் என்பதே நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் முஸாஃபர் கஃபே கதைச் சுருக்கம்.

காலம் காலமாக பார்த்துப் பழகிப்போன முக்கோணக் காதல் கதை. ஆனால், அதை திகட்டத் திகட்ட காதலுடன் வழங்கியிருக்கும் விதம் முஸாஃபர் கஃபேவுக்கு சுவையுட்டுகிறது.  

விக்ராந்த் மாஸி இந்த தொடரில் சந்தர் மோகன் சர்மாவாக வாழ்ந்திருக்கிறார். ஒரு  திட்டமிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை தெளிவாக நகர்த்தும் டிசிப்ளின் இளைஞன். காதலும், கல்யாணமும் முக்கியம் என்று நினைக்கிறான். அவன் வாழ்க்கையில் ஒரு புயலாக நுழைகிறாள் சுதா. விவாகரத்து வழக்குகளை கையாளும் சுதாவின் அட்டகாச என்ட்ரியும் அவளது வசனங்களும் அடடே ரகம்.

தம்பதியர்களை பிரிப்பதுதான் வேலையா என்று சந்தர் கேட்டதும், ‘என்னிடம் வரும்போதே அவர்கள் பிரிந்திருப்பார்கள். அதற்கு கோர்ட்டில் சர்டிஃபிகேட் வாங்கித்தருவதுதான் என் வேலை’ என்று விளக்கம் கொடுக்கும்போதே, அவளது புத்திசாலித்தனம் தெரிந்துவிடுகிறது. காதல் முக்கியம் அதை விட லட்சியம் முக்கியம், அதையடுத்தே கல்யாணம் என்று நினைப்பவள்.

நான்லீனியராக சொல்லப்படும் கதையில் சந்தருடன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறாள் ப்ரீத்தி. உலகத்தையே சுற்றிவருவதும் அதை பதிவு செய்வதும் ப்ரீத்தியின் லட்சியமாக இருந்தாலும், அதையெல்லாம் சந்தரின் காதலுக்காக தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கிறாள்.

இந்த மூன்று பேரின் லட்சியத்துக்கும் காதலுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறது முஸாஃபர் கஃபே. யாரும் யாரையும் ஏமாற்றவில்லை, அதேநேரம் மூன்று பேரும் மகிழ்ச்சியாகவும் இல்லை. 

திவ்யா பிரகாஷ் டுபே எழுதிய முஸாஃபர் கஃபே நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த தொடரின் முதல் எட்டு பாகம் மட்டும் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் கதை என்று சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு வசனமும் புதிது. மூன்று பேரும் காதலின் எல்லையைத் தொடுகிறார்கள் என்பதற்கு இந்த வசனங்களே சாட்சி.

  • உண்மையான காதல் என்றாலே அது நமக்கு சரியான காதலாக இருக்க வேண்டும் என்று யார் சொன்னது?
  • சில காதல்கள் உண்மையானவைதான். ஆனால் எல்லா உண்மையான காதல்களும் வாழ்க்கைக்கு ஏற்றவையாக இருப்பதில்லை.
  • சிலர் நம்முடன் வாழ்வதற்காக வருவதில்லை; நாம் யார் என்பதை நமக்கே உணர்த்திவிட்டு செல்வதற்காக வருகிறார்கள்.
  • காதல் தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அது பொய்யாகிவிடாது.”
  • வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களில், இரண்டு வெவ்வேறு மனிதர்களைக் காதலிக்கக் கூடாது என்று எங்கே எழுதப்பட்டுள்ளது?
  • சரியான நேரத்தில் கிடைக்கும் காதலை விட, தவறான நேரத்தில் கிடைக்கும் சரியான மனிதர் வாழ்க்கையை அதிகமாக மாற்றிவிடுகிறார்.
  • ஒருவரை மறந்துவிட்டு இன்னொருவரை காதலிப்பதல்ல வாழ்க்கை; சில நினைவுகளுடன் புதிய காதலை ஏற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை.
  • சில காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை; ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிட்டு முடிகின்றன.
  • காதல் என்பது யார் நம்முடன் இருக்கிறார்கள் என்பதல்ல; யார் நம்மை நாமாக மாற்றினார்கள் என்பதும்தான்.

முஸாஃபர் கஃபே என்பது சந்தரின் கனவு என்றாலும், அதை நனவாக்குவதற்கு காரணமாக இருந்தவள் சுதா. அதேநேரம், முஸாஃபர் கபே சிறப்பாக நடப்பதற்குக் காரணமாக இருக்கிறாள் ப்ரீத்தி.

கதை நிகழ் காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் பயணிப்பதால், முதல் பகுதியிலே சந்தரும் சுதாவும் பிரிந்துவிட்டார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் அவர்கள் எப்படி காதலித்தார்கள், முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் உறவு என்று எல்லாமே அட்டகாச ரசனை.  

சுதாவின் கனவை நிறைவேற்றுவதற்காக தன்னுடைய லட்சியத்தை விட்டு அவளுடன் வாழ்வதற்கு சந்தர் தயாராக இருக்கிறான். ஆனால், காதலை விட லட்சியமே பெரிது என்று சந்தரை விரட்டுகிறாள் சுதா.

’நீ எனக்காக உனது கனவுகளை விட்டுட்டு வராதே. எனக்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே. அதற்குப் பின்னால் மறைந்து இருக்கும் பொறுப்புகளை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது…’ என்று உறுதியாகச் சொல்கிறாள்.

சந்தரின் மனதில் சுதாவின் இடத்தை தன்னால் பிடித்துவிட முடியாது என்பது ப்ரீத்திக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்கள் பிரிந்து எட்டு வருடங்கள் ஆயிற்று ஆனாலும் என்றேனும் ஒருநாள் சுதா திரும்பி வந்துவிடுவாள் என்ற அச்சத்தில்தான் இருக்கிறாள். அவள் நினைத்தபடியே திரும்ப வருகிறாள் சுதா. சந்தரின் பழைய காதலியும் புதிய காதலியும் சந்தித்துப் பேசுகிறார்கள். 

‘’நான் இந்த நாட்டை விட்டு சிங்கப்பூருக்குப் போகிறேன். இதை அவனிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்று தோன்றியது அதனால்தான் வந்தேன். நீ ஏதும் கவலைப்படாதே.  நான் வேறு எதற்காகவும் இங்கு வரவில்லை. அவன் வாழ்வில் நான் ஒரு சின்ன அத்தியாயம்தான். ஆனால் நீதான் அவனுக்கு முழு வாழ்க்கையும்…’’ என்று வெறுமையாக சிரிக்கிறாள் சுதா.

அதற்கு ப்ரீத்தி, “ஆமாம் நீ சின்ன அத்தியாயம்தான் ஆனால் மிக மிக முக்கியமான அத்தியாயம். நீ இல்லையென்றால் இந்த முஸாஃபர் கஃபே இல்லை, அவன் இல்லை. அவனுக்கு உன்னைத்தான் அதிகம் பிடிக்கும்’’ என்று உண்மையை ஒப்புக்கொள்ளும் போது ப்ரீத்தி பலவீனமாகி விடுகிறாள். ஒருவரையொருவர் காயப்படுத்தக் கூடாது என்று மிகவும் கவனமாகப் பேசுகிறார்கள். ஆனாலும், இருவரும் காயப்படுகிறார்கள்.

இந்த குழப்பங்களுக்கு இடையில் சுதாவின் புதிய காதலன் அங்கு வருகிறான். இனி, என்ன ஆகும் என்பது அடுத்த சீசனில் தெரியவரும். முப்பது நிமிடங்களே கொண்ட குட்டிக் குட்டி எபிஸோடு என்பதால் விரைந்து பார்த்துவிடலாம்.

ரத்தம், வெட்டுக்குத்து இல்லாமல் ஒரு நல்ல காதல் கதையை பார்க்க விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். 

Leave a Comment