மகிழ்ச்சிக்கு நோ வெயிட்டிங்
ஒருவர் மனநல மருத்துவரிடம் போய், ‘ரொம்ப கவலையா இருக்கு டாக்டர்’ என்றார்.
’’அட. நம்ம ஊருக்கு புதுசா ஒரு சர்க்கஸ் வந்திருக்கு. அந்த சர்க்கஸில் ஒரு கோமாளி இருக்கார். அவரை ஒருமுறை பார்த்தால் போதும். உங்க கவலைகள் பறந்தோடி விடும்’ என்றார் டாக்டர்.
‘அந்த கோமாளியே நான்தான் டாக்டர்!’ என்றார் வந்தவர்.
ஒரு சாலை விபத்து நடைபெற்றது. ஒரு வாகனத்துக்கு அடியில் சிக்கிக் கிடந்த ஒருவர் ‘ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ்’ என்று கத்தினார்.
‘கத்தாதேப்பா. உன் மேலே ஏறி நிற்கிறதே ஆம்புலன்ஸ் தான்!’ என்றார் அருகில் இருந்த ஒருவர்.
பிள்ளையில்லாத ஒருவர் சாமியாரிடம் போனார்.
‘ராமேஸ்வரம் போ. குழந்தை பிறக்கும்’ என்றார் சாமியார்.
‘என் ஊரே ராமேஸ்வரம்தாங்க’ என்றார் அவர்.
மகிழ்ச்சி, ஆனந்தம் எல்லாம் எங்கோ தொலைவில், தூரத்தில் எல்லாம் இல்லை. நம்மைச் சுற்றி, ஏன் நமக்குள்ளேயே இருக்கின்றன. நாம்தான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் அதை தேடித் திரிந்து அலைகிறோம். தொலைந்த இடத்தில் தேடாமல் வேறு எங்கெங்கோ தேடுகிறோம்.
மகிழ்ச்சி என்பது சென்று சேர வேண்டிய இலக்கு அல்ல. அது ஒரு பாதை. ‘சென்று சேர்வதை விட சிறந்த பயணம் நல்லது’ என்றார் புத்தர்.
‘இலக்கு முக்கியம் தான். அதேவேளையில் அதற்கான வழிகளும் முக்கியம்’ என்றார் அண்ணல் காந்தியடிகள்.
அதேதான். மகிழ்ச்சியை இலக்காக கொள்ளாமல், மகிழ்ச்சி என்ற பாதையில் நாளும் நடப்போம். முடிவில்லாத முயற்சிகள் மூலம் இருக்கிற மகிழ்ச்சியை அழித்துக் கொள்ளாமல் நாளும் நாம் நடைபோடுவோம்.
– மோகன ரூபன்
