மந்திரச்சொல்
மனிதர்கள் மற்றவர்களுக்கு மிகவும் அற்புதமாக ஆறுதல் சொல்கிறார்கள். தோல்வியடைந்த நபரிடம், “பரவாயில்லை… அடுத்த முறை முயற்சி செய், நிச்சயம் ஜெயிக்கலாம்” என்று நம்பிக்கை கொடுக்கிறார்கள். கவலையில் இருப்பவரிடன், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா? தூக்கிப்போடு’’ என்று உற்சாகம் தருகிறார்கள்.
ஆனால், அவர் தோல்வி அடையும்போது, அவருக்கு ஒரு துன்பம் வரும்போது, “என்னால் எதுவுமே முடியாது. எனக்கு திறமை இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார்கள். எதிர்காலம் இருண்டுவிட்டது என முடங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அன்பு அள்ளிக்கொடுப்பவர்களுக்கு, தங்களுக்கு அன்பு கொடுக்கத் தெரிவதில்லை.
உடலும் மனமும் ஒன்றுதான்
மனஅழுத்தம் என்பது மனதை மட்டும் பாதிப்பதில்லை. நீண்டகால மனஅழுத்தம் உடலிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். தூக்கக் கோளாறு, தசை இறுக்கம், தலைவலி, சோர்வு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை மனஅழுத்தம் தொடர்புடையவை. அதனால், மனதை அமைதிப்படுத்துவதும் உடலைப் பராமரிப்பதும் ஒன்றுதான். அன்பாகப் பேசுவது, நம்பிக்கையுடன் பேசுவது, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வது மனதுக்கும் உடலுக்கும் மருந்து போன்று ஊக்கம் தரும்.
நம்முடைய முதல் மருத்துவர் நாம் மட்டுமே. எனவே தினமும் சில நிமிடங்கள் நம்முடன் நாமே பேசுவது ஒரு நல்ல மனநலப் பழக்கம்.
நான் முக்கியமானவன், இன்றைய தினம் சிறப்பாக இருக்கும், என் எதிர்காலம் வெளிச்சமானது என்றெல்லாம் மனசுக்குள் பேசிக்கொள்வது ஆழ்மனதில் பதிகிறது. இதுவே, நம்பிக்கையான வார்த்தைகளாக வெளிப்படும்.
நம் வாழ்க்கையில் ஆயிரம் பேர் இருக்கலாம். ஆனால் 24 மணி நேரமும் நம்முடன் இருக்கும் ஒரே ஒருவர், நாம் மட்டும்தான். எனவே, அந்த ஒருவருக்கு நாம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரவேண்டும்.
நம்மையே நாம் அவமானப்படுத்தி, குற்றம் சாட்டி, பயமுறுத்திக் கொண்டிருந்தால், வாழ்க்கை அமைதியாக இருக்காது. எனவே, பிறரிடம் பேசும்போதும், நம்மிடம் பேசும் போதும் நம்பிக்கை விதியை கடைபிடியுங்கள்.
நம்முடன் மகிழ்ச்சியாகப் பேசுவது என்றால், வாழ்க்கையில் துன்பமே இல்லை என்று நடிப்பது அல்ல. அழ வேண்டிய நேரத்தில் அழலாம். பயப்படலாம். தோல்வியை ஒப்புக்கொள்ளலாம். கோபப்படலாம். சோர்வடையலாம்.
ஆனால், அந்த உணர்வுகளுக்குள் நீண்ட நேரம் சிக்கிக்கொள்ளக் கூடாது. அழுதவுடன் தெளிவடைந்துவிட்டேன். கோபப்பட்டதும் மனம் லேசாகிவிட்டது என்று சரியான வார்த்தைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
மருந்து உடல் நோயை எதிர்கொள்ள உதவலாம். மருத்துவர் நோயை கண்டறிந்து வழிகாட்டலாம். அதேநேரம், வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் நம்முடன் இருக்கும் சொந்த மனம் நட்பாக, தோழமையாக, அன்பாக இருக்க வேண்டும். மனதை எதிரியாக மாற்றிவிட்டால், சோகக் கிடங்காக மாற்றிவிட்டால் வெளியிலும் உள்ளுக்குள்ளும் அமைதி கிடைக்காது. எனவே, உங்களுடன் நீங்கள் மகிழ்ச்சியாகப் பேசத் தொடங்குங்கள்:
உலகம் முழுவதும் நம்மை யாரும் புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால் குறைந்தபட்சம் நாமாவது நம்மை புரிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். நமக்குள் நாம் நிகழ்த்தும் உரையாடல் ஒரு மிகப்பெரும் மாற்றத்தைக் கொடுக்கலாம்.
மனதின் மருந்தகம்
பிறர் பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, நாம் பேசும் வார்த்தைகளும் நம்முடைய நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது. நாம் பேசும் வார்த்தைகளை மூளை கேட்கிறது. அதனை உண்மை என்று நம்புகிறது. அதன் வழியில் நடக்கத் தூண்டுகிறது.
அதாவது, ‘எனக்கு காய்ச்சல் அடிக்கிறது’ என்று ஒருவரிடம் சாதாரணமாக சொல்வதற்கும், ‘எனக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சலா அல்லது வேறு பெரிய நோய் அறிகுறியா என்று தெரியவில்லை’ என்று பேசுவதற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது.
வெறுமனே காய்ச்சல் என்பது சமாளிக்கக்கூடிய சாதாரண பிரச்னை. அதுவே, வேறு ஒரு நோய் என்று சந்தேகப்படுவது அச்சத்தை உருவாக்கும், செலவுகளை அதிகரிக்கும் மனநிலை. எனவே, பேசும் மொழியை பாசிடிவாக மாற்றுவது முக்கியம்.
நான் தோற்றுவிட்டேன் என்பதற்குப் பதிலாக, ‘இந்த முறையும் தோற்றுவிட்டேன். ஆனால், திரும்பவும் முயற்சி செய்வேன்’ என்று சொல்வது மனதுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுக்கும்.
எனவே, நம்பிக்கையுடன் பேசிப் பாருங்கள். புதிய கதவுகள் திறக்கும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
