ஞானகுரு அத்தியாயம் – 2
தெற்குப் பக்கத்து நகரங்களுக்குப் போகிற முக்கிய சந்திப்பில் இருந்தது, அந்த ஊர். கிராமமும் நகரமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டான் ஊர். அந்த ஊரின் போஸ்ட் ஆபீஸின் முன் வராந்தாவில் ‘எழுந்தருளி’ (ஊர்க்காரர்கள் பாஷையில்!) இருந்தேன். கையை மடக்கித் தலைக்கு வைத்தபடி படுத்தே கிடந்தாலும், வேளாவேளைக்கு யாராவது ஒருத்தர் பயபக்தியோடு ஏதாவது கொண்டுவந்து படைத்துக் கொண்டே இருந்தார்கள். காலையில் போஸ்ட் ஆபீஸைத் திறக்கும் போதும் மூடும் போதும், போஸ்ட் மாஸ்டரே உடம்பை வில்லாக வளைத்து எனக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் போவார்.
கல்யாணம் ஆகாத முதிர் கன்னியுடன் வந்த தாயார், வராக்கடன் வசூல் ஆகுமா என்று கேட்க வந்த ஈட்டிக்காரர் என்று விசிட்டர்கள் வரிசை தொடர்ந்து இருக்கத்தான் செய்தது. யாரிடமும் நான் எதுவும் பேசுவதே இல்லை. விட்டேத்தியாக என் தலை ஆடுகிற வகையில் ஆளுக்கொரு அர்த்தம் புரிந்துகொண்டு அகன்று போனார்கள்.
எதிர் ஹோட்டலில் இருந்து வைத்துவிட்டுப் போயிருந்த பரோட்டா பொட்டலத்தை அட்டணக்கால் போட்டு சப்புக்கொட்டித் தின்றுவிட்டு, ‘ஆராமாக’ ஒரு சுருட்டு எடுத்துக் கொளுத்திக் கொண்டபோது, அந்த கார் வந்து நின்றது.
விரல்களை மறைக்கும் சைஸில் மோதிரங்கள், கட்டைவிரல் தடிமனுக்கு கழுத்தில் செயின் என்று இறங்கினார் அந்தக் கருத்த மேனிக்காரர். பின்னாடியே திமிரும் தெனாவட்டுமாக ஓர் இளைஞன். அப்படி இப்படிப் பார்த்துவிட்டு, தன் பெரிய தேகத்தை என் முன் சரித்து விழுந்தது, கருமேனி. அந்த வாக்கிலேயே கஷ்டப்பட்டு காலை மடக்கிக் குந்திக் கொண்டது. அருகில் அசட்டையாக நின்ற இளைஞனைப் பார்த்து,
’ஏய்! சோத்துப் பிண்டமே… பராக்கு பாக்குறியே. விழுடா… சாமி கால்ல’ என்று இளைஞனுக்கு கட்டளை போட்டது. இவருடைய மகன்தான் அது என்பது புரிந்தது.
காரின் பின் கண்ணாடியில் போட்டிருந்த எழுத்துக்களை வைத்து, ரியல் எஸ்டேட் தொழிலில் வாரிச் சுருட்டுகிற ஆள் என்பதைப் புரிந்து கொண்டேன். இழுத்த சுருட்டுப் புகையை நிதானமாகக் கசியவிட்டபடி உற்றுப் பார்த்தேன். ஆன்மிகப் பாஷையில் சொல்வதானால், பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். மனசு முழுக்க அழுக்கு என்பது புரிந்துபோனது. கூப்பிய கையைப் பிரிக்காமல் பேசினார்.
’’சாமி, தொழில் ஜோரா நடக்குது. அதனால வருமானத்துக்கு வஞ்சனை இல்லை. சாமிக்கு முக்காலமும் தெரிஞ்சிருக்கும், அரசியல் பவர் இல்லாட்டி இந்தத் தொழில்ல நிக்க முடியாதுங்கிறது சாமிக்கும் தெரிஞ்சிருக்கும். கட்சி மாநாடு, காது குத்துனு கட்சிக்காரங்களுக்கு கொட்டிக் கொடுக்கிறப்பத்தான் வயிறு எரியுது… அதான்…” என்று இழுத்தார்.
நான் சுருட்டைத் தரையில் தேய்த்து அணைத்துவிட்டு, அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.
’’அதனால நாமளே அரசியலுக்குப் போயிட்டா பாதுகாப்பா இருக்கும்னு புரியுது. ஆனா எனக்கு இப்போ நாலு கழுதை வயசாகிப் போச்சு. இனிமேப்பட்டு புதுசா கரைவேட்டி கட்டி, ஊர்ஊரா ஊர்வலம் போனா தாங்குமா சாமி. அதனால…’’
இப்போது அந்தப் பையனைப் பார்த்தேன். குறுகுறுவென அப்பாவையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு இருந்தான். என் பார்வை போனபோக்கைப் பார்த்ததும், கருமேனியார் மிகவும் உற்சாகமாகி விட்டார்.
’’அதான் சாமி, இவனை அரசியல்ல இறக்கிவிடலாம்னு பார்க்கிறேன். வெயிட்டா நிதி கொடுத்துட்டா நேரா மாவட்டப் பொறுப்புக்கே சேர்த்துக்கிடறதா ரெண்டு பெரிய கட்சிக்காரங்களும் சத்தியம் செய்றாங்க. உள்ளே நுழைஞ்சிட்டா பிழைக்கிறது இவன் சாமர்த்தியம்… இவனை வெச்சி தொழிலையும் பணத்தையும் காப்பாத்திக்கிறது என் சாமர்த்தியம். எந்தக் கட்சியில சேர்க்கலாங்கிறதை, சாமிதான் சொல்லணும்’’ சொல்லிக் கொண்டே, இடுப்புப் பாக்கெட்டைத் துழாவி மொறுமொறுவென நோட்டுக் கற்றையை என் முன்னால் வைத்தார்.
‘புளிச்’சென்று பக்கவாட்டில் காறி உமிழ்ந்துவிட்டு, மறுபடி பையனைப் பார்த்தேன்.
’’தம்பிக்கு மக்கள் சேவை செய்ற ஆசை இருக்கோ?’’
நான் கேட்டு முடிப்பதற்குள்,
’’எம்.எல்.ஏ., மந்திரின்னு ஆயிட்டா அதையும் செஞ்சிட வேண்டியதுதான் சாமி. நமக்கும் நல்லது செஞ்சது போல, ஊருக்கும் என்னத்தையாவது செஞ்சி கொடுத்திடலாம். பெரிய பெரிய ஜோசியரை எல்லாம் பார்த்தேன்… எதுவும் உருப்படியா சொல்லத் தெரியலை. உங்க வாக்கு பலிக்குதுன்னு ஊருக்குள்ள பேச்சு, அதான் சாமி கையோட கூட்டி வந்துட்டேன்…’’ என்று மீண்டும் நெளிந்து நாட்டியமாடியது கருமேனி. விளையாண்டு பார்க்க ஆசை வந்தது.
’’பேசாம உன் பிள்ளையை கம்யூனிஸ்ட் கட்சியில சேர்த்துவிடேன்…’’
யாரோ கன்னத்தில் அறைந்தது போன்று அதிர்ந்து வெகுண்டு விட்டார் அவர்.
’’அப்பா… கம்யூனிஸ்ட் கட்சின்னா என்ன கலர் கொடிப்பா?’’ என்று பையன் கேட்க…
’’சுத்தம்! பெரிய ஆளா வர்றதுக்கான எல்லாத் தகுதியும் இவன்கிட்ட இருக்குது!’’ என்றபடி என் தாடியை சொரிந்து கொண்டு சிரித்தேன்.
’’டேய், இருக்கிறவன்கிட்ட உள்ளதைப் புடுங்கி, இல்லாதவனுக்குக் கொடுக்கிற கட்சிடா அது. பாரு… சாமி உன்னயப் பார்த்து எப்படி சிரிக்கிறார்ன்னு…’’ என்று மகன் தலையில் நச்சென்று கொட்டினார் அவர்.
’இல்லாதவனுக்குக் கொடுப்பது’ என்ற நினைப்பே அவரை இந்தப் பாடு படுத்துவது கண்டு, மனதுக்குள் ருத்திரம் வந்தது. முகத்தில் தெரியாதபடி அடக்கிக் கொண்டு, எப்படியாவது இவனை சிக்கவைக்க நினைத்தேன்.
‘’இந்த ஊருக்குள்ளே கவர்மென்ட் ஆஸ்பத்திரி இருக்கா?’’
’’அட, பேருக்குன்னு ஒரு கட்டடம் மட்டும் இருக்கு சாமி. டாக்டரும் கிடையாது, நர்ஸும் கிடையாது…’’ என்றார்.
’’அப்புறம் என்ன… நாளைக்கே ஊர்க்காரர்களுக்கு சோத்துப் பொட்டலம் வாங்கிக் கொடுத்து, கூட்டு ரோட்டுக்கு வந்து சாலை மறியல் பண்ணச் சொல்லு. ஊருக்கு நாலு டாக்டர்கள் வேணும்னு அரசாங்கத்தை எதிர்த்துக் கேட்கச் சொல்லு! எவ்வளோ கூட்டம் சேர்க்கிறியோ, அவ்வளவு வேகமா எல்லா கட்சிக்காரனும் உன்னைத் தேடி வருவான். அப்போ நீ சேரவேண்டிய கட்சி எதுன்னு தானாவே தெரியும்!’’ என்றேன்.
அப்பாவும் பிள்ளையும் மலங்க மலங்க முழித்துக் கொண்டு இருக்க, என் முன்னே சிரித்துக் கொண்டிருந்த நோட்டுக் கற்றையை எடுத்து என் ஜிப்பாவுக்குள் திணித்துக் கொண்டேன்.
’’நீ கொடுத்த காணிக்கை, சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும். உன் மகனையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சரியாகக் கொண்டுபோய் சேர்க்கும்’’ என்று சொல்லிவிட்டு அந்த ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
தங்களை மீறிக்கொண்டு ஒருத்தன் செல்வாக்கும் கூட்டமும் சேர்ந்தால் கட்சிக்காரர்கள் சும்மா இருப்பார்களா? அடி உதையோ, மிரட்டலோ நடக்கும். இந்த ஜென்மங்களுக்கு கதிமோட்சம் நிச்சயம் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன..?
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போயிருக்கும். சென்னை பார்த்தசாரதி கோயில் மண்டபத்தில் புளியோதரை பொட்டலம் தந்த மயக்கத்தில் லேசாகக் கண்ணயர்ந்து கிடந்தபோது நிழலாடியது. ஒரு கரைவேட்டி ஆசாமி சுதாரித்து நிமிர்வதற்குள், வேரறுந்த மரமாக தொபீரென்று முன்னால் விழுந்து எழுந்தார்.
மறக்குமா அந்த முகம். ரியல் எஸ்டேட்காரரின் பிள்ளையாண்டான்தான்! நான் சொன்னபடியே ஆட்களைத் திரட்டிப் போராடினானாம். ஆளும்கட்சிக்காரர்கள்தான் முதலில் வந்து சமாதானப்படுத்தி அரவணைத்துக் கொண்டார்களாம். அரசியல்வாதியாகி விட்டானாம்!
’’கட்சியில் நல்ல பொறுப்பு குடுத்திருக்காங்க சாமி. சீக்கிரமே தொகுதியைப் புடிச்சிடுவேன். எல்லாம் உங்க வாய் முகூர்த்தம்’’ என்று அவன் புல்லரித்தபோது, என்னையே செருப்பால் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
’’ஆஹா… ஆளும் கட்சியே நீதானா… அதுசரி. அந்த ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் வருகிறார்களா?’’ என்று கேட்டேன்.
ஒரு கணம் யோசித்தவன், ‘‘இல்லையே சாமி’’ என்றான்.
’’அதானே… நல்ல அரசியல்வாதி நீ!’’ என்று அவனைப் பார்த்து சிரித்தேன்.
‘’சாமி… நான் அடுத்து என்ன செய்யணும்?’’ என்று கேட்டான்.
’’நீ ஆளும் கட்சியில் பெரிய இடத்துக்கு வரவிடாமல் தடுக்க ஒரு கும்பல் இருக்கிறது. ஆனால், அவர்களை அடக்கி வைக்காமல் உன் எதிர்காலம் சிறப்பாக அமையாது. அதனால் அவர்களையும் அவர்களது திட்டங்களையும் தடுத்து நிறுத்த ஒரு பூஜை செய்யவேண்டும். தோஷத்தைக் கழிக்கும் பூஜை என்பதால், பணம் காசு செலவு பார்க்கக் கூடாது. உன் பையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை அப்படியே மொத்தமாக எடுத்து எண்ணிப் பார்க்காமல் கொடு. நானே பூஜை செய்து கொள்கிறேன். எதிரிகளுடன் இனி தைரியமாக நீ மோதலாம்… சின்னச் சின்ன சிக்கல்கள் வந்தாலும், இறுதி வெற்றி உனக்கே கிடைக்கும்!’’ என்று கொம்பு சீவி விட்டேன்.
மடத்தனமாக இனி பெரிய ஆட்களுடம் மோதுவான். ஜெயித்தால் அவனுக்கு நல்லது, தோற்றால் மக்களுக்கு நல்லது. பார்வையை அவன் கண்களுக்குள் செலுத்தினேன்.
ஒரு கணம்கூட யோசிக்காமல் அப்பனை மாதிரியே மொறுமொறுவென இவனும் சட்டைப் பையிலும், அண்டர்வேரிலும் இருந்த பணத்தை அப்படியே உருவிக் கொடுத்தான். அப்பா கருமேனியார் கொடுத்த காசில்தான் முதல் தடவையாக காசிக்குப் போய் வந்தேன். பிள்ளை காசில் மறுபடி போனால், காசி துரத்தவா போகிறது! அன்றிரவே காசிக்கு ரயில் ஏறினேன்.
– – ஞானகுரு வருவார்