பணமே மந்திரம்.
மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் முழு தொகை கிடைப்பதில்லை. அதோடு கிளைம் செய்து பணம் வாங்குவதில் நிறைய சிரமம் இருக்கிறது. எனவே, மருத்துவக் காப்பீடு அவசியம் வேண்டுமா என்ற குழப்பம் நிறைய பேரிடம் உள்ளது.
குடும்பத்தில் நான்கு பேர் மற்றும் பெற்றோர் இருக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை ஆண்டுக் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. மருத்துவமனையில் யாரும் சேரவில்லை என்றால் அந்த பணம் வீணாகிறது. ஏதேனும் நோய் வந்து கிளைம் செய்தாலும் முழு தொகை கிடைப்பதில்லை. எனவே, அதற்குப் பதிலாக அந்த பணத்தை சேமித்து வைத்தாலே போதும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது.
இதற்கு ஞானகுரு என்ன சொல்கிறார்..?
இந்த குழப்பம் மிகவும் நியாயமானது. அதாவது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொடுத்து காப்பீடு எடுத்தாலும், மருத்துவச் செலவு முழுயாக கவர் ஆவதில்லை. பிறகு எதுக்கு காப்பீடு என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.
மருத்துவக் காப்பீடு பற்றி அடிப்படைப் புரிதல் இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற குழப்பங்கள் நேராது. எல்லோருக்கும் மருத்துவச் செலவு முழுமையாக திரும்பக் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இதற்கு வாய்ப்பு இல்லை என்பதே உண்மை.
பாலிசி என்பது எல்லா செலவுகளையும் திரும்பத் தருவதில்லை. அறை வாடகை, மருத்துவம் சாராத சில செலவுகள் அதாவது பஞ்சு, கையுறை போன்ற மருந்து சாராத பொருட்களின் செலவு ஒருபோதும் மருத்துவப் பாலிசியில் அடங்காது. அதேபோன்று குறிப்பிட்ட மருத்துவமனை காப்பீடு கையாள்வதற்குத் தகுதி வாய்ந்ததா என்பதை அறிந்தே சேர வேண்டும். காப்பீடு எடுப்பதற்கு முன்பே இருக்கும் ஒருசில நோய்களுக்கு காப்பீடு கிடைக்காது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையிலும் மருத்துவமனையில் தங்குவது, மருத்துவ காப்பீட்டில் சேராது.
அதனால் மருத்துவக் காப்பீட்டில் முழு தொகையும் கிடைக்கும் என்று ஒருபோதும் நம்பிக்கை வைக்கவேண்டாம். திடீரென ஏற்படும் மருத்துவச் செலவில் இருந்து ஓரளவு பாதுகாக்கும் கேடயமாகவே இதனை பார்க்க வேண்டும்.
விபத்து அல்லது அறுவை சிகிச்சை காரணமாக ஐசியுவில் சில நாட்கள் இருந்தாலே லட்சங்களில் செலவாகிவிடும். இத்தனை பெரிய தொகையை சமாளிக்க சேமிப்பு அல்லது கடன் வாங்கிக் கொடுப்பது சரியான நிதி மேலாண்மை அல்ல.
செலவு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலை இருந்தால் மருத்துவச் செலவுக்கு வீடு, நகை விற்பனை செய்யவேண்டிய சூழல் வரலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். இதனால் குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்துக்கான சேமிப்பு போன்றவை சிக்கலாகலாம்.
ஒரே ஒரு மருத்துவச் செலவு ஒட்டுமொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிடும். எனவே, மருத்துவக் காப்பீட்டில் முழு தொகையும் கிடைக்கவில்லை என்பதற்காக காப்பீடு எடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.
ரோட்டில் விபத்து நடக்கிறது என்பதற்காக யாரும் நடக்காமல் இருப்பதில்லை, வாகனத்தில் செல்லாமல் இருக்க முடியாது. தகுந்த பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணிக்க வேண்டும்.
பணம் பற்றிய பயம் இல்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வதே மன அழுத்தம் இல்லாத செயல். ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு முன்பு முழுமையாக பாலிசியைப் படியுங்கள். சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.
ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தாலும், மருத்துவச் செலவை சமாளிக்க குறிப்பிட்ட தொகை கையில் வைத்திருப்பதே சரியான நிதி ஆலோசனை.
இன்சூரன்ஸ் என்பதை லாபமான வியாபாரம் என்ற பார்வையில் பார்க்காமல் அவசர நிதியுதவி என்றே ஏற்றுக்கொள்ளுங்கள். மிகவும் குறைவான பிரிமியம் கட்டிவிட்டு அதிகம் நிதி எதிர்பார்க்காதீர்கள்.
இந்த காப்பீட்டில் ஏமாந்த ஒருசிலர் ஹெல்த் இன்சூரன்ஸ் என்றாலே ஸ்கேம் என்று சொல்வார்கள். அதை நம்ப வேண்டாம். மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான பணத்தை இழப்பீடாகக் கொடுத்துவருகின்றன.
நம்பிக்கையான அனுபவம் உள்ள ஏஜென்ட் மூலம் பாலிசி நிபந்தனை பற்றி அறிந்து பாலிசி எடுத்தால் கிளைம் பிரச்சனை அதிகம் இருக்காது. பிரிமியம் குறைவு என்பதற்காகவும், எதுவும் தெரியாமலும் பாலிசி எடுத்துக்கொள்பவர்களே பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, ஆரோக்கியம் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க ஒருபோதும் மறக்காதீங்க.
