விளக்கம் தருகிறார் வழக்கறிஞர் நிலா
அப்பா திடீரென மரணம் அடையும்போது, அவரது சொத்துக்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமாகிறது. அதேபோல் கடன் வாங்கியிருந்தால், அதனை பிள்ளைகள் கட்ட வேண்டுமா என்று வழக்கறிஞர் நிலாவிடம் கேட்டோம்.
அதற்கு அவர், ‘’பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு சொத்து, பணம், நிலம் போன்றவை வாரிசுரிமையாகக் கிடைக்கிறது என்றால், அந்த சொத்து மதிப்புக்கு உட்பட்டு கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அதேநேரம், பெற்றோரிடமிருந்து எந்தச் சொத்தும் வாரிசுகளுக்கு வரவில்லை என்றால், வாரிசுகள் தங்கள் சொந்தப் பணம் அல்லது சொத்துக்களை விற்று கடனை அடைக்கத் தேவையில்லை. தனிநபர்கள் மட்டுமின்றி வங்கிகளும் பிள்ளைகளை வலியுறுத்த முடியாது.
தனிநபர் கடன் அல்லது கிரெடிட் கார்டு கடன்களுக்கு, வாரிசுகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக மாட்டார்கள். காப்பீடு இருந்தால் அதன் மூலம் வங்கி ஈடுகட்டும். காப்பீடு இல்லை என்றால் அத்தொகையை ‘வாராக்கடன்’ (NPA) என தள்ளுபடி செய்துவிடுவார்கள்.
வீடு, கார் அல்லது தங்கம் போன்றவற்றை அடமானம் வைத்து வாங்கிய கடன்களுக்கு, வங்கி அந்தப் பொருட்களை ஏலம் விட்டுப் பணம் வசூலிக்க சட்டப்படி உரிமை உண்டு. வாரிசுகள் அந்தச் சொத்தை வைத்திருக்க விரும்பினால் கடனைக் கட்டி மீட்க முடியும்
கடன் வாங்கும்போது பிள்ளைகள் ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தா பெற்றோரின் மறைவுக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
