ஞானகுரு பதில்
கேள்வி : நவகுஞ்சரம் என்ற விலங்கு உண்மையா..? மகாபாரதம் இதிகாசத்தில் இந்த விலங்கு சொல்லும் தத்துவம் என்ன?
- எம்.ஆராவமுதன், ஸ்ரீரங்கம்.
ஞானகுரு :
இயற்கையை முழுமையாக உணர்ந்துகொள்ளும் சக்தி மனிதரின் மூளைக்கு இல்லை என்பதை சொல்வதே நவகுஞ்சரம் என்ற விலங்கின் தத்துவம். வியாசர் எழுதிய பாரதத்தில் இந்த நவகுஞ்சரம் விலங்கு இடம்பெறவில்லை. ஒரிய மொழியில் சரளதாசர் எழுதிய மகாபாரதத்தில், ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகளைக் கொண்ட ஒரு விசித்திர விலங்காக நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானையின் தும்பிக்கை, புலியின் கால், மானின் கால் மற்றும் மனிதக் கையுடன் இருக்கும் விலங்கு ஒடிசா மாநிலத்தின் கலாச்சாரமான, படா சித்ரா ஓவியங்களில் இடம் பெற்றுள்ளது.
மகாபாரதத்தில் அர்ஜுனனின் தவத்தைச் சோதிப்பதற்கு நவகுஞ்சரம் மிருகத்தின் வடிவில் ஸ்ரீகிருஷ்ணர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அதிசய விலங்கைக் கண்டதும், அதை கொல்வதற்கு வில் எடுக்கும் அர்ஜூனன், அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்ததும், அது கிருஷ்ணரின் வடிவம் என்பதை உணர்ந்து வணங்குகிறார்.
மனிதர்களின் அறிவும் கற்பனையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதுதான்; ஆனால் இயற்கையின் படைப்பு எல்லையற்றது என்பதை நவகுஞ்சரம் மிருகத்தின் மூலம் அர்ஜூனனுக்கு ஸ்ரீகிருஷ்ணர் உணர்த்துகிறார் என்பதே இதன் தத்துவம்.
ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயிலின் வடக்குப் பகுதியில் நவகுஞ்சர சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என்று ஏற்கத் தேவையில்லை, பொய் என்று மறுக்கவும் தேவையில்லை. ரசித்து மகிழுங்கள். ஏனென்றால், இயற்கையின் அற்புதத்தில் இதைவிடவும் பெரிய அதிசயங்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
