மன அழுத்தத்திற்கு முதல் காரணம் பொறாமை..?

டாக்டர் பரூக் அப்துல்லா

பொறாமை எல்லா மனிதர்களுக்கும் இருக்கவே செய்கிறது. நம்மிடம் இருப்பதை மற்றொருவருடன் ஒப்பிடுவது, பிறர் வைத்திருப்பதைப் பார்த்து நமது நிலையை ஒப்பிடும்போதும் பொறாமை தோன்றுகிறது. இதுவே, மன அழுத்தத்தை அதிகரிக்கும் முதல் காரணியாக அடையாளம் காட்டப்படுகிறது.

.குழந்தைகள் பிறக்கும் போது பொறாமை இருப்பதில்லை. எப்போது குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடத் துவங்குகிறோமோ அப்போதே பொறாமை ஆக்டிவேட் ஆகிறது. அது மெல்ல மெல்ல மனங்களை ஆட்கொள்கிறது. தன்னை விட சிறந்த விசயங்களை வைத்திருக்கும் யாரைப் பார்த்தும் முதலில் பொறாமை எண்ணமே தலைதூக்குகிறது.

இந்த எண்ணம் உள்ளுக்குள் இருந்து அழுத்தத்தை உருவாக்கி தானும் அந்த நிலையை அடைய வேண்டும் அல்லது பிறர் கொண்டிருக்கும் பொருளை வாங்க வேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. சில நேரங்களில் நன்மையில் இது முடிவது போன்று தோன்றினாலும் தனக்கான தேடல் எது, தனக்கான விருப்பம் எது என்ற பயணத்தை விட்டு வேறொரு பாதையில் பயணம் செய்ய இத்தகைய பொறாமை வித்திடுகிறது.

நான் பிறரைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை என்று யாரேனும் கூறினால் அது முழு உண்மையாக இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான். எனென்றால் சிறந்த ஒரு விஷயத்தை ஒரு மனிதன் பெற்றிருக்கும் போது தன்னிச்சையாக நமது மூளை பொறாமைக்கான ரசாயனங்களை சுரக்கச் செய்கிறது. முக்கியமாக கார்டிசால் எனும் அழுத்தத்துக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது

இதன் விளைவாக நமது மூளை வலியை உணர்கிறது, ரத்தக் குழாய்கள், சுருங்குகின்றன. ரத்த அழுத்தம் கூடுகிறது. இதயம் பல துடிப்புகள் வேகமாகத் துடிக்கிறது.

பொறாமை என்பது நமது எண்ணங்களுக்கும் நமது உணர்வுகளுக்கும் இடையே சரிசம தன்மை போதாமையால் நிகழ்கிறது.

பொதுவாக ஒரு அழகை ரசிக்கும் போது மனம் மகிழ்ச்சியைத் தானே உணர வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, “ச்ச… அவரைப் போன்று நான் அழகாக இல்லையே.. ” என்று வருத்தத்தை உணர்ந்தால் அங்கு பொறாமை வெளிப்படுகிறது என்று அர்த்தம்.

ஒரு இண்ஸ்டா ரீல் பார்க்கும் போது, இணையர் சேர்ந்து ரீல்ஸ் போடுவதை ரசிக்கிறோம். ஆனால் மனதுக்குள் நாம இப்டி இல்லையே.. என்ற எண்ணம் தலை தூக்குமாயின் அங்கே இருப்பது பொறாமை.

இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் மனதில் பொறாமைப்படும் நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் அழுத்தம் கூடுகிறது. பொறாமைப் படச் செய்த ஒன்றை நாமும் அடைய வேண்டும் என்ற ஆர்வம் சில நாட்களில் வேட்கையாகி பிறகு வளர்ந்து வெறியாகிறது.

பல நேரங்களில் நம்மைப் பொறாமைப்படச் செய்யும் நபர்கள் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாத நிலையிலும் அவர்களை மனதால் வெறுக்கும் நிலை வருகிறது. உண்மையில் பொறாமை எனும் இந்த உணர்வு நிலை தொடர்ந்து தன்னகத்தே ஆற்றல் புரிந்து நமது வெளிப்புற குணாதிசியத்தை நாளடைவில் மாற்றி அமைக்கிறது.

இதை வெல்வது மிகக் கடினம் ஆயினும் நம்மால் இந்த குணத்தை உணர்வை மட்டுப்படுத்திட இயலும். கட்டுப்படுத்தப்பட்ட பொறாமை என்பது நாம் பொறாமைப்படும் நபர் நம்மை பொறாமைப்பட வைக்க செய்த /செய்யும் விசயங்கள் யாவை? அந்த விசயங்களை அற விழுமியங்களுக்குள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குள் நடந்து செய்கிறாரா? அல்லது அதை மீறி செய்கிறாரா?

அவரைப் போல நாமும் உயர/முன்னேற அவர் வழியில் சென்று அவரைப் போலவே உழைத்து முன்னேறலாம் என்ற வழியைக் காட்டும் இத்தகைய பொறாமையால் தீங்கு குறைவு நன்மை அதிகம். எனினும் இதையும் அளவுக்குள் கட்டுப்படுத்தி பேராசை கொள்ளாமல் நமது சக்திக்கு நமது இயல்புக்கு நமது சூழலுக்கு ஒத்துவரும் வகையில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

எனினும் காண்போர் அனைவரிடத்திலும் கட்டற்ற பொறாமை கொண்டு அவரைத் தூற்றி / அவரை துன்புறுத்தி அவரை ஒழிக்க வேண்டும் என்ற அளவில் வன்மம் வளர்ப்பது நோய் நிலையாகும். இதற்கு கட்டாயம் மனநல மருத்துவ சிகிச்சை தேவை. உடனே மன நல மருத்துவரை நாடினால் சிறப்பாகக் கட்டுப்படுத்திட முடியும்.

உண்மையில் தன்னிடம் உள்ளதில் திருப்தி அடையாதவர்களே, அதிகம் தீவிர பொறாமை நோய்க்கு உள்ளாகிறார்கள். இருப்பதை விடுத்து எப்போதுமே இல்லாததை எண்ணி உழல்கிறார்கள்

எப்போதும் ஒரு விரக்தியும் பாதுகாப்பின்மையும் அவர்களை சூழ்ந்து கொள்கிறது. நான் மீண்டும் கூறுகிறேன். இங்கு இப்புவியில் வாழும் நாம் ஒவ்வொருவருமே தனித்தன்மை மிக்கவர்கள்.எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அமையும். அனைவருக்கும் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் கிடையாது.

ஒரே புள்ளியில் துவங்கி ஒரே மாதிரி செயல்திறன் அறிவு கொண்ட இருவர்,ஒரே மாதிரி முன்னேற்றத்தை தான் அடைய வேண்டும் என்ற எந்திர சூத்திரங்கள் நிகழ் வாழ்வில் நடக்காது.

எப்போதும் நமக்கு கிடைத்திருக்கும்,நமக்கு வழங்கப்பட்டிருக்கும்,அனைத்துக்காகவும் நன்றியுடன் திருப்தியுடனும் வாழ வேண்டும்.நாம் அடைய விரும்பும் விஷயங்களுக்காக ஆக்கப்பூர்வமாக உழைத்து முன்னேற்றம் காண வேண்டும்

பொறாமை எண்ணம் தலைதூக்கும் போதெல்லாம் திருப்தி எனும் எண்ணம் கொண்டு அதை முறித்து விட வேண்டும்.

  • Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

Leave a Comment