மருத்துவ விசித்திரம்
ஒயிட் காலர் ஜாப் எனப்படும் பணியாளர்கள் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வது உடலுக்கு ஆபத்து என்று மருத்துவம் சொல்கிறது. அதேபோன்று நீண்ட நேரம் நின்றுகொண்டே வேலை செய்யும் டிராஃபிக் போலீஸ், கண்டக்டரையும். ‘அப்படி நிக்காதீங்க’ என்று சொல்கிறது.
அப்படின்னா என்னதான் செய்றது..?
உட்காருவதற்கும், நிற்பதற்கும், உடற்பயிற்சிக்கும், தூங்குவதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை கண்டிப்பாக ஒதுக்குவதே சரியான தீர்வு என்கிறார்கள்.
மருத்துவப்படி தினமும் 6 மணி நேரம் வரை உட்கார்ந்திருக்கலாம், 5 மணி நேரம் வரை நிற்கலாம். 10 மணி நேரம் வரையிலும் படுத்திருக்கலாம். மற்ற நேரங்களை நடப்பது, ஓடுவது, விளையாடுவது, அரட்டையடிப்பது என்று ஒதுக்கலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நேரம் உட்காருவதைக் குறைத்து நிற்பது, நடப்பது என மாற்றம் செய்தால் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவது உறுதி என்கிறார்கள். ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல்நலம், உடல் திறன், வேலை மற்றும் தனிப்பட்ட விருப்பம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
நமது முன்னோர்கள் தெளிவாகவே சொல்லி வைத்திருக்கிறார்கள், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகிவிடும். எனவே, அவ்வப்போது உட்கார்வது, நடப்பது, படுப்பது என்று மாற்றிக்கொண்டே இருங்கள். எல்லாம் நலமாகும்.
