காதலர் தின ஸ்பெஷல்
அண்ணலும் நோக்கினான்… அவளும் நோக்கினாள்’என்பது ராமர் – சீதையின் இதிகாசக் காதல். முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது, மனசுக்குள் மழை அடிப்பது, பட்டாம்பூச்சி பறப்பது போன்ற அறிகுறிகளை காதல் என்று நினைக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், பொதுவாக யாராவது ஒருவருக்கு மட்டும்தான் முதல் பார்வையில் மின்சாரம் பாயும், மனசுக்குள் பூ மலரும். இன்னொரு நபரிடம் அப்படிப்பட்ட உணர்வே தோன்றியிருக்காது. அந்த நபரை பார்க்காமல் போயிருக்கலாம் அல்லது ஜொள்ளு விடுவதைப் பார்த்து எரிச்சல் அடைந்திருக்கலாம்.
காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் – ஷாலினிக்கு ஏற்படுவது போன்று இரண்டு பேருக்கும் முதல் பார்வையில் மின்சாரம் பாய்வதற்கு நூற்றுக்கு ஒரு சதவீதம் வாய்ப்பு மட்டுமே உண்டு.
முதல் பார்வையில் காதல் என்பது அட்டையைப் பார்த்து புத்தகத்தைத் தீர்மானிப்பது. முழுமையாகப் படித்தால் மட்டுமே உண்மை தெரியும். அதாவது பழகினால் மட்டுமே புரியும்.
பொதுவாக முதல் பார்வையில் அழகு, உடை, நடை, சிரிப்பு போன்ற புறத் தோற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். திருமணம், குடும்ப விழா, அலுவலக டூரில் இது போன்ற முதல் பார்வை காதல் நிறைய வரும். இந்த உணர்வுகளை காதல் என்று நம்பி சொல்லிவிடக் கூடாது.
காதலை சொல்வதற்கு முன்பு இந்த 5 அறிகுறிகள் தெரிகிறதா என்று கவனியுங்கள்.
- முதல் பார்வையில் மனம் கவர்ந்தவரை, மீண்டும் மீண்டும் பார்க்கும்போதும் அதே பட்டாம்பூச்சி உணர்வு வருகிறதா..?
- அவர் என்ன செய்தாலும் அவர் மீதும் மதிப்பும், மரியாதையும், மகிழ்ச்சியும் உயர்ந்துகொண்டே போகிறதா..?
- கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பேசிப் பழகிய பிறகும் அந்த சிலிர்ப்பு இருக்கிறதா..?
- நீண்ட நாட்கள் பார்க்கவில்லை என்றால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பு வருகிறதா..?
- அவருக்கும் உங்களைப் பார்த்ததும் பட்டாம்பூச்சி பறக்கிறது என்று நம்புகிறீர்களா..?
இதுதான் காதல். இப்போது தைரியமாக காதலைச் சொல்லுங்கள். ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி. ஏற்காவிட்டால் அனுபவம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
