ஞானகுரு தரிசனம்
மனித குலத்துக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம் என்று மறதியைச் சொல்லலாம். அதனால்தான் நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர் மரணம் அடைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு மூன்றாம் நாள் அவரது நினைப்பை மறந்து அடுத்த வேலையில் ஈடுபட முடிகிறது. எத்தனை பேருக்கு இன்னமும் தங்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைப் பற்றிய நினைவு இருக்கிறது? எத்தனை பேருக்கு வீட்டை மாற்றிவிட்டுப் போன பக்கத்துவீட்டுக்காரருடன் தொடர்பு இருக்கிறது?
பெற்றோரை விட்டு ஒரு நாள் கூட பிரியாமல் இருந்த மகள், திருமணம் ஆன பிறகு பெற்றோரை நினைத்துக்கூட பார்க்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கமுடிவதற்குக் காரணமும் பார்க்காமல் இருப்பதுதான். இது, காதலுக்கும் பொருந்தவே செய்யும்.
செல்போன், இமெயில் போன்ற சாதனங்கள் உதவி புரியும் நிலையிலும் அடிக்கடி சந்திக்காத காதல் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து காணாமல்தான் போகும். இந்த உண்மை புரியாமல், ‘மூணு மாசம்தான் பிராஜெக்ட்டுக்காக ஃபாரின் போயிட்டு வந்தேன். அதுக்குள்ள என்ன நடந்துச்சுன்னே தெரியலை. கண்டுக்கவே மாட்டேங்கிறா… போன் கூட வேண்டாவெறுப்பாத்தான் பேசுறா’ என்று சொல்வார்கள்.
‘நாங்க நேரில் சந்திக்கணும்னு அவசியமே இல்லை. எங்க காதல் தெய்வீகமானது. நாங்கள் பார்க்காமல் இருந்தாலும் காதலுடன்தான் இருக்கிறோம்’ என்று சொல்வது காதலை வளர்க்கும் வழி அல்ல. அது அழிவுப் பாதைதான். அதனால் காதலில் விழுந்தவர்கள் எந்த வகையிலாவது சந்திக்கவும் பேசவும் செய்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் காதல் குறைந்துகொண்டேதான் போகும். இது இயல்பு என்று புரியாதவர்கள்தான் சிக்கலை உருவாக்கிக் கொண்டு சீரழிந்து போகிறார்கள்.
