ஞானகுரு பார்வை
கேள்வி : மனிதரிடத்தில் கர்வம் மிகுவதற்குக் காரணம் என்ன..?
- பி.யசோதா, சூலக்கரை மேடு.
ஞானகுரு :
சிரமப்பட்டு கிடைத்த வெற்றியைப் பற்றி பேசுவதை யாரும் கர்வம் என்று நினைக்க மாட்டார்கள். தற்செயல் வெற்றியைப் பற்றி, இயல்பாகக் கிடைத்திருக்கும் விஷயங்களை எல்லாம் தங்கள் சாமர்த்தியம் என்பதாகப் பேசுவதையே கர்வம் என்று வெறுக்கிறார்கள்.
அழகாக இருப்பதற்கு கர்வம் கொள்வதில் அர்த்தமே இல்லை. முதுமையிலும், விபத்திலும் அந்த அழகு காணாமல் போய்விடும். பணம், செல்வாக்கு குறித்து கர்வப்படுவதிலும் அர்த்தமில்லை, எந்த நேரத்திலும் அது மற்றவர் கைக்குப் போய்விடும். எவருக்கும் கிட்டாத மிகப்பெரும் திறமை உள்ளவர்கள் கர்வமாகப் பேசினாலும் மதிப்பார்கள். இளையராஜாவின் திறமை அளப்பரியது. அதனாலே அவருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அதே நேரம் இசையைத் தவிர வேறு விஷயங்கள் பேசும்போதே அவரை கர்வம் பிடித்தவர் என்று தூற்றுகிறார்கள். எதுவும் நிரந்தரமில்லை என்பது புரிந்துவிட்டால் கர்வத்தை தவிர்த்துவிட முடியும்.
கேள்வி : புனிதயாத்திரை சுற்றுலா ஸ்தலங்கள் மன அழுத்தத்தைப் போக்குமா..?
- ஏ.முனியசாமி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
எந்த ஓர் ஊரும், மலையும், நதியும், கடலும் மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்குவதில்லை. அதற்காக மேற்கொள்ளப்படும் பயணமே மனதை இலகுவாக்குகிறது. ஊட்டி, காஷ்மீர், காசி, ராமேஸ்வரத்தில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால், அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டும். அப்படித்தான் இருக்கிறார்களா என்று கேட்டுப் பாருங்கள்.
