ஞானகுரு தரிசனம்
காதல் என்பது ஒரே ஒருவர் மீது, அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் என்று சொல்லப்படுவதை நிறைய பேர் நம்புகிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. வயிற்றில் உணவு இல்லாத நேரத்தில் எல்லாம் பசி எடுப்பது போலவே, மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்துசேரும் போதெல்லாம் காதல் வந்துகொண்டே இருக்கும்.
டீன் ஏஜ் தொடங்கி மரணம் வரையிலுமான எல்லா கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் காதல் வருவது இயல்புதான். ஆனால், குற்ற உணர்வு காரணமாக பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவது இல்லை. குறிப்பாக ஒரு முறை காதலில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் மனதுக்குள் காதல் மலரும் போது தங்களைத் தாங்களே அற்பமாக எண்ணிக் கொள்கிறார்கள். தங்கள் முதல் காதலுக்குத் துரோகம் செய்துவிட்டதாகத் துடிக்கிறார்கள். புதிய காதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் எதிர்காலத்தைத் தொலைத்து விடுகிறார்கள். காதல் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும் என்ற உண்மை தெரிந்துவிட்டால், இவர்கள் குற்ற உணர்வின்றி புதிய வாழ்க்கையைத் தொடங்கமுடியும்.
காதலில் தோல்வி அடைந்த பலர் வேறு எவரையேனும் திருமணம் செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால் தங்கள் துணையின் மீது அன்பைப் பொழிவது இல்லை. தன்னுடைய துணையின் மீது பாசமும் காதலும் தோன்றினாலும் அதைச் சொன்னால், தன்னுடைய காதலுக்குச் செய்யும் அவமரியாதை என்று நினைக்கிறார்கள். அதனால் தோல்வி அடைந்த முதல் காதல்தான் முக்கியம் என்பது போல் புதிய வாழ்க்கையில் வாழ்வது போல் நடிக்கிறார்கள். நடித்து… நடித்து தங்கள் வாழ்க்கையை முழுவதுமாகத் தொலைத்து விடுகிறார்கள்.
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டுமல்ல வெற்றி அடைந்தவர்களுக்கும் இன்னொரு நபர் மீது காதல் வரலாம். இப்படி வரும் காதலை உடனடியாக மனதுக்குள் புதைக்கத் தெரியவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு காதல் போதும் என்ற உறுதியுடன் இருக்கவேண்டும். காதல் கிடைக்கிறதே என்பதற்காக ஒரே நேரத்தில் இருவரைக் காதலிப்பதன் காரணமாக மூன்று பேரின் வாழ்க்கை பாழாகிறது. அதனால் காதல் வந்துகொண்டே இருக்கும்… ஒரு காதல் முறிந்துபோனதும் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள்.
