தம்பதிக்குள் ஈகோ மோதல் வருகிறதா..?

ஞானகுரு பதில்

கேள்வி : கணவன், மனைவிக்குள் ஏன் ஈகோ வருகிறது, அதை அகற்றுவது எப்படி?

  • எம்.முத்துப்பாண்டி, லட்சுமிபுரம்.

ஞானகுரு :

ஒரே ஒரு வார்த்தை ஈகோவை தூண்டிவிடலாம். ‘சாதத்துக்கு உப்பு போட மறந்துட்டேன்னு சொல்ற… நீயெல்லாம் ஒரு பொம்பளையா?’ என்ற கணவனின் கோபம் மனைவியின் மனதை ஆழமாகப் புண்படுத்திவிடலாம். அதேபோல், ‘உங்களை விட வயசுல சின்னவன் உங்க தம்பி கார் வாங்கிட்டான், உங்களுக்கு வாங்கத் துப்பு இல்லே’ என்று மனைவியின் குத்தல் பேச்சு கணவனை காயப்படுத்திவிடலாம்.

பொது இடங்களில் மரியாதைக் குறைவாக நடத்துவது, தான் சொல்வதே சரி என்று பிடிவாதம் பிடிப்பது, பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது போன்ற காரணங்களாலே பெரும்பாலும் தம்பதிகளுக்குள் ஈகோ வருகிறது. இந்த ஈகோவை உடனடியாக உடைக்கவில்லை என்றால் இருவருக்கும் சண்டை நடந்துகொண்டே இருக்கும். வீடு நரகமாக மாறிவிடும். சின்ன சண்டை பெரிய இடைவெளியை உருவாக்கிவிடும்.

ஒரு வார்த்தை ஈகோவை தூண்டுவது போன்று, ஒரே ஒரு வார்த்தை ஈகோவை உடைக்கவும் செய்துவிடும். ‘ஸாரி’, ‘மன்னிச்சிடு’, ‘என் மேலதான் தப்பு’ என்பது போன்ற வார்த்தைகள் ஈகோவை அகற்றி இருவருக்கும் இடையில் அழுத்தமான அன்புச்சங்கிலி உருவாக்கிவிடும்.

இருவரில் யார் பெரியவர், இருவரில் யார் புத்திசாலி, இருவரில் யார் வல்லவர், இருவரில் யார் அழகு என்றெல்லாம் தம்பதியருக்குள் போட்டி வரக்கூடாது. வாழ்க்கை என்பது ஒரு பயணம். சக பயணி போன்று ஒருவரையொருவர் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொண்டால் அங்கே ஈகோவுக்கு இடம் இல்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment