அடிக்கும் கணவர் உண்மையில் அன்பானவரா..?

உளவியல் உண்மைகள்

அடிக்கிற கைதான் அணைக்கும், கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதேபோன்று கொஞ்சம் முன்கோபி, எதையும் எடுத்தெறிந்து பேசுவார், நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார்… ஆனால் உண்மையில் ரொம்பவும் நல்லவர் என்றும் சொல்வார்கள்.

ஆண்களின் கோபத்தை நியாயப்படுத்தும் இந்த விஷயங்கள் எதுவுமே உண்மை இல்லை.

ஒருவரது இயலாமையே கோபமாக மாறுகிறது. தங்கள் இயலாமையை மறைப்பதற்கு அடிக்கிறார்கள், கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். இதனால் மனைவி துன்பப்படுவதை மனதுக்குள் ரசிக்கிறார்கள். அடிக்கடி மனைவியை அடிக்க வேண்டும் என்பதற்காகவே, கொஞ்ச நேரத்தில் மனம் மாறி அன்பாக இருப்பது போன்று நடிக்கிறார்கள்.

கோபத்தில் கணவன் அடிப்பது தொடர்கிறது என்றால் மனைவி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

  • கோபத்தில் அடிப்பதும் அதன் பிறகு சமாதானம் செய்வதும் இயல்பான செயல் இல்லை. அடிப்பதால் உயிருக்கும், உடலுக்கும் ஆபத்து நேர்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.  
  • கோபத்தில் இருக்கும் கணவருடன் சண்டை போடுவது, கத்துவது, பதிலுக்கு வன்முறையைக் கையில் எடுப்பது நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே சண்டை வன்முறையாகும் என்று உணரும்போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுங்கள்.
  • மனைவி என்றால் அடிமை, அடித்தால் மட்டுமே மனைவியை கட்டுப்பாடுடன் வைத்திருக்க முடியும் என்ற மனநிலை நிறைய ஆண்களிடம் உண்டு. அடிப்பது தவறு, இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று உறுதியுடன் சொல்லுங்கள்,
  • அடிக்கும் கணவரைக் கண்டு அச்சம் வருகிறது, நம்பிக்கை குறைகிறது எனவே குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நேரடியாக நிர்ப்பந்தம் கொடுங்கள்.
  • கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகுப்புகளுக்குச் சென்று மனதை மாற்றிக்கொள்வதற்கு கட்டாயப்படுத்துங்கள்.
  • அவராக மாறிவிடுவார், குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்றெல்லாம் சமாதானம் செய்துகொள்வது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்.

கணவர் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் உங்கள் பாதுகாப்பு, உங்கள் நலன், உங்கள் மதிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுங்கள். யாரையும் திருத்த வேண்டியது மனைவியின் வேலை இல்லை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment