பிப்ரவரி 9 ஹக் டே
அன்புக்கு எந்த எல்லையும் இல்லை. காதல் கொண்டவர்கள் மட்டுமின்றி எல்லோரும் எல்லோரையும் கட்டிப்பிடிக்கலாம், இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்கும் என்பதற்காகவே இன்றைய தினம் ஹக் டே என்று கொண்டாடப்படுகிறது
ஒருவரையொருவர் அன்பாகக் கட்டிப்பிடிக்கும்போது உடலில் ‘ஆக்ஸிடாசின்’ ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியைத் தரும் என்று உளவியலாளர்கள் உறுதியளிக்கிறார்கள்.
இது வெளிப்படையாக ஹக் டே என்பது காதலர் தின முன்னோட்டமாக இருக்கலாம். ஆனால் உண்மையில், ஹக் என்பது மனிதன் மனிதனாக இருப்பதற்கான ஆழமான உளவியல் தேவை.
மனிதன் பேசத் தொடங்குவதற்கு முன்பே அணைக்கக் கற்றவன். பிறந்த குழந்தை முதல் தேடுவது உணவு அல்ல… அணைப்பு. ஏனெனில், அணைப்பு என்பது வெறும் உடல் தொடுதல் அல்ல. அது “நீ தனியாக இல்லை” என்று சொல்லும் அமைதியான மொழி.
சில நேரங்களில் வார்த்தைகள் தோற்கும். ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில்
வார்த்தைகள் வலியைக் கூட்டும். அப்போது, ஒரு அணைப்பு மட்டும் போதும். நான் உன்னோடு இருக்கிறேன், உன் வலியை நான் புரிந்துகொள்கிறேன், நீ பாதுகாப்பாக இருக்கிறாய், ஒரு நல்ல அணைப்பு ஆயிரம் ஆலோசனைகளைவிட வலிமையானது.
இதனால் மன அழுத்தம் குறையும், பயம் தளர்ந்து போகும், தனிமை கரையும், நம்பிக்கை உருவாகும்.
அதனால் தான் நிஜமாக அணைக்கப்படாத மனிதர்கள், உள்ளுக்குள் வெறுமையாக உடைந்து கொண்டே இருக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் இன்று மனிதர்கள் ஒரே வீட்டில் இருந்தும் மனதளவில் தொலைவில் இருக்கிறார்கள். கைப்பேசியில் ஆயிரம் மெசேஜ்கள், ஆனால் உண்மையான அணைப்பு இல்லை. அதனால் தான், இன்றைய சமூகம்
தனிமை நிறைந்த கூட்டமாக மாறியுள்ளது.
அம்மாவை அணைப்பதற்கான நாள். அப்பாவை நன்றி சொல்லாமல் அணைப்பதற்கான நாள். நண்பனை “நான் இருக்கேன்” என்று சொல்லும் நாள். வாழ்க்கையால் உடைந்த ஒருவருக்கு அமைதியாக அருகில் நிற்கும் நாள்.
ஒரு அணைப்பு ஒருவரின் வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசை கொள்ளச் செய்யும். கட்டிப்பிடிப்பதை ஒரு சாதாரண செயல் என்று நினைக்காதீர்கள். நீங்கள் கொடுப்பது நம்பிக்கை, பாதுகாப்பு, மனிதநேயம், உயிர்க்காற்று. சில நேரங்களில், ஒரு அணைப்பு தான் ஒருவரை உயிரோடு வைத்திருக்கும்.
இன்று… வார்த்தைகளை விட அணைப்பை கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்துங்கள்.
உண்மையில, அணைப்புங்கிறது ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். கட்டிப் பிடிப்பதற்கு தயக்கம் இருந்தால் முதலில் அழுத்தமாக கையைக் குலுக்குங்கள், தோளைத் தட்டிக் கொடுங்கள், தோளுக்கு மேல் கை போட்டு ஆறுதல் சொல்லுங்கள். அதன்பிறகு இயல்பாக கட்டிப்பிடிக்கத் தொடங்கிவிடலாம்.
வார்த்தைகள் சொல்லாத பல விஷயங்களை ஒரு கட்டிப்பிடிப்பின் மூலம் சொல்லித்தந்துவிடலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
