துர்நாற்றத்தை விரட்டுங்கள்.
உடலில் அதிக துர்நாற்றம் வரும் பகுதியாக கருதப்படும் கை அக்குள் பகுதியை பராமரிக்க மறக்காதீர்கள்.
சின்ன வயதுக் குழந்தைக்கு கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டும் என்றால் என்னை, அதாவது கை அக்குளை லேசாகத் தொட்டாலே போதும், சிரிப்பாணி பொத்துக்கொண்டு வரும். ஆனால், நாளாக நாளாக என்னை ஏதோ அழுக்குப் பிரதேசமாக நினைத்து, கவனிக்காமல் ஒதுக்கிவிடுகிறார்கள்.
நான் இருக்கும் பகுதியை ஆங்கிலத்தில் ஆர்ம்பிட் அல்லது ஆக்ஸிலா என்று அழைக்கிறார்கள். என்னை ஆரோக்கியமாக, அழகாக, சுகமாக வைத்திருக்கும் வழிகளை சொல்லித்தருகிறேன்.
உடலில் சட்டை போட்டாலும், போடாவிட்டாலும் நான் மறைவுப் பிரதேசமாக இருக்கிறேன். எனவே, என் மடிப்புகளில் வியர்வை, உராய்வு, நுண்ணுயிர்கள் அதிகம் இருக்கும். என்னை சரியாக கவனித்துக்கொண்டால் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக இருப்பேன். பல நேரங்களில் என்னை கவனிக்காமல் விடுகிறார்கள். அதனால் வெவ்வேறு வகையில் என் இருப்பைக் காட்ட வேண்டிய அவசியம் நேர்கிறது.
சிறப்பு பராமரிப்பு
இயற்கையாகவே நான் இருக்கும் பகுதியில் ஈரப்பதம் இருக்கும். வெயில் காலங்களில் வியர்வை அதிகம் வரும். ஆடையில் உராய்வு ஏற்படுவது எனக்கு சிரமத்தைக் கொடுக்கும்.
நான் இருக்கும் இடத்தைப் பராமரிப்பதற்கு முடி முளைக்கிறது. அதோடு, தோலில் இயல்பான பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்கிறேன் என்று அதிகம் டியோடரண்ட், கிரீம், லோஷன் பயன்படுத்துவது எனக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, எனக்கு உடலின் மற்ற பாகங்களைவிட, கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
பராமரிப்பு வழிகள்
என் அருகில் யார் வந்தாலும் முகம் சுளிக்காமல் இருக்கவேண்டுமென்றால், என்னை ஆரோக்கியமாக வைத்திருந்தால் போதும். அதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். என்னை சுத்தப்படுத்துவதற்கு தண்ணீர் மற்றும் மென்மையான சோப்பு போதும். மெதுவாகவும் நிதானமாகவும் சுத்தம் செய்யுங்கள்.
அதிகம் அழுக்கு இருக்கும் பிரதேசம் என்பதற்காக அதிகம் சோப்புப் போட்டு அழுத்தித் தேய்க்க வேண்டாம். சிலர் உடலை சுத்தப்படுத்தும் நார் அல்லது பியூமிங் கல் கொண்டு அழுத்தமாகத் தேய்க்கிறார்கள். இது, என்னை அதிகமாக காயப்படுத்தவே செய்யும்.
என்னை சுத்தப்படுத்துவதை விட முக்கியமான செயல், என்னை நன்றாக துடைத்து காய வைப்பது. என்னிடம் நீண்ட நேரம் ஈரம் இருந்தால் எரிச்சல், துர்நாற்றம் அல்லது பூஞ்சை உருவாகலாம்.
வாசனை திரவியங்கள்
நிறைய நேரம் வாசனை நீடிக்கவேண்டும் என்பதற்காக என் மீது வாசனைத் திரவியங்களை பூச வேண்டாம். அதேபோல் என் பகுதியில் எரிச்சல், அரிப்பு அல்லது சிவப்பு வந்தால் ஏதேனும் மருந்துகள், களிம்புகளைப் பூச வேண்டாம். மருத்துவர் தரும் மருந்து மட்டுமே பயன்படுத்துங்கள். பொதுவாக என்னை தொந்தரவு செய்யாமல் உலர்ந்தபடி வைத்திருந்தால், எந்த மருந்துகளுக்கும் தேவையே இருக்காது.
மிகவும் இறுக்கமான உடைகள் என்னை மூச்சுமுட்டச் செய்யும். எனவே, காற்றோட்டமான உடைகள் அணியுங்கள். காட்டன் துணிகள் வியர்வை மற்றும் உராய்வைக் குறைக்கும்.
அதேபோல் முடியை தினமும் ஷேவ் செய்யவேண்டிய அவசியம் இல்லை. வாரம் ஒரு முறை காயம் ஏற்படுத்தாமல் நிதானமாகவும், சுத்தமாகவும் ஷேவ் செய்து என்னை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
தவிர்க்க வேண்டியவை
எதுவெல்லாம் எனக்கு தேவையோ, அதையே அளவுக்கு மீறி செய்யும்போது எனக்கு எரிச்சல் வரும், வியர்வை வரும், துர்நாற்றம் வரும். எனவே, அவ்வப்போது புதுப்புது டியோடரண்ட்கள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
முரட்டுத்தனமாக விருட் விருட்டென ஷேவிங் செய்வது என்னை புண்ணாக்கிவிடும். இந்த இடத்தில் ஈரப்பதம் காயாமல் இருப்பது நீங்களே விரும்பி அசுத்தத்தையும் துர்நாற்றத்தையும் வரவேற்பு கொடுப்பதாக இருக்கும். டிஷ்யூ வைத்து துடைப்பது நல்லது.
கருப்பு நிறம்
உங்கள் வெளிப்புற தோலின் நிறமே என்னுடைய உண்மையான நிறம் என்றாலும், கொஞ்சம் வித்தியாச நிறம் இருப்பதுதான் இயற்கை. ஏனென்றால் உராய்வு, வியர்வை காரணமாக நிறம் கொஞ்சம் மாறியிருக்கும். அதேநேரம், அதிக கருப்பு நிறம் என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோன்று என்னிடம் அவ்வப்போது மீண்டும் மீண்டும் வலி தரும் கட்டிகள் உருவானாலும் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
எத்தனை சுத்தமாக வைத்திருந்தாலும் சிலருக்கு அரிப்பும், துர்நாற்றமும் ஏற்படலாம். அதேபோல் கட்டிகளில் இருந்து சீழ் வடிதல், வெண் புள்ளிகள் தோன்றுதல் போன்றவை இயற்கையாகக் குணமடையும் வாய்ப்பு குறைவு. எனவே, இதுபோன்ற தருணங்களில் மருத்துவரை அணுகியே தீர்வு காணவேண்டும்.
பாலியல் உறவுகளில் சிலருக்கு என் மீது விபரீத ஆசை தோன்றுவதுண்டு. இது முறையான உறவுமுறை அல்ல. எனவே, இதனை ஆதரிக்க வேண்டாம்.
ஒருவரது ஆரோக்கியத்தின் அளவுகோலாக அக்குள் கருதப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தினமும் சில நிமிடங்கள் மட்டும் எனக்கு நேரம் ஒதுக்கினால், நான் நாள் முழுவதும் அமைதியாக இருப்பேன். எந்த வாசனையும் வராமல் இருப்பதுதான் ஆரோக்கியமான அக்குளுக்கு அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
