இந்த உலகம் முழுவதுமுள்ள மனிதர்களின்
பொதுவான ஒரு மதம் என்றால், அது பணம் மட்டும்தான். எந்த அளவுக்கு பணம் இருக்கிறதோ, அந்த
அளவுக்கு மனிதனுக்கு நம்பிக்கை கிடைக்கிறது. ஆனால், பணத்தைக் கொண்டு என்ன வாங்குவது
என்பதில்தான் நிறைய பேர் தோற்றுப் போகிறார்கள்.
விவசாயி ஒருவன் முகம் நிறைய சந்தோஷத்துடன்
ஞானகுருவை சந்தித்தான். ‘’சாமி, நீங்க சொன்ன மாதிரியே எள்ளு போட்டேன், நிறைய காசு சேர்ந்திருக்கு.
அதை என்ன செய்றதுன்னு நீங்களே சொல்லுங்க” என்றான்.
’’கண்ணுக்குத் தெரியாததை வாங்கிப்போடு,
நிம்மதியாக இருக்கலாம்..”
‘’அப்படின்னா சாமி..?’’
‘’நகை, கார் என்று அனைவரது கண்ணுக்கும்
தெரிவதில் உன் பணத்தைப் போடாதே. அது எல்லா நேரமும் உனக்கு கர்வத்தைக் கொடுக்கும், மற்றவர்களுக்கும்
உன் செல்வத்தைக் காட்டிக்கொண்டே இருக்கும். அதனால், கண்ணுக்குத் தெரியாததை முதலீடு
செய்..”
‘’அதான் புரியலையே சாமி…”
‘’ஏதேனும் மரங்களுடன் கூடிய தோப்பு வாங்கு.
அது நீ தூங்கும்போதும் உனக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும். வீடு கட்டி வாடகைக்கு
விடு. அவை உன்னுடையவை என்றாலும், உன் கிரீடத்தில் இருக்காது.. ஆனால், பணம் சம்பாதிக்கும்”
’’இது மட்டும் அடுத்தவர் பார்வையில் படாதா..?’”
’’ஒரு நாள் மட்டுமே தெரியும். உன்னை பார்க்கும்
நேரத்தில் எல்லாம் அந்த சொத்துக்கள் தெரியாது. மேலும், பணம் எப்போதும் உன்னுடன் தங்கியிருக்க
வேண்டும் என்றால் நீ செய்ய வேண்டியது இரண்டே இரண்டுதான். தேவையானதை மட்டும் வாங்கு,
தேவை இல்லாததை வாங்காதே…” என்று புன்னகைத்தார்.
நல்ல அறிவுரையை வாங்கிச்சென்றார் விவசாயி.