ஞானகுரு பார்வை
கேள்வி : அறிவுரைகள் ஏற்கப்படுவதில்லையே ஏன்..?
- எஸ்.மாரிக்கனி, சாத்தூர்.
ஞானகுரு :
பொதுவாக அறிவுரைகளை யாரும் விரும்புவதில்லை. கேட்கப்படும் நேரத்தில் சொல்லப்படும் ஆலோசனைகளை மட்டுமே கேட்கிறார்கள். அதேநேரம், சரியான விதத்தில், சரியான நேரத்தில் சொல்லப்படும் அறிவுரைகள் நிச்சயம் ஏற்கப்படும்.
அதாவது சிகரெட் பழக்கம் இருக்கும் ஒரு நண்பரிடம் நிகோடின் கொடுமையைப் பற்றி அரை மணி நேரம் பொதுவாகப் பேசுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது. அதேநேரம், ‘நம்ம ஃப்ரெண்ட் ராதாகிருஷ்ணனுக்கு சிகரெட் குடிச்சதால் நுரையீரல்ல பாதி கெட்டுப் போச்சாம்… மூச்சுவிடவே சிரமப்படுறான்.. லட்சக்கணக்கில் செலவழிச்சாலும் காப்பாத்த முடியுமான்னு தெரியலை…’ என்று சரியான உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் அறிவுரை. அடுத்த முறை அவர் சிகரெட் புகைப்பதற்கு நிச்சயம் யோசிப்பார். .
கேள்வி : உலக அதிசயங்கள் என்று எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்..?
- பி.செந்தில்குமார், ரிசர்வ்லைன் காலனி, சிவகாசி.
ஞானகுரு :
மனிதர்களால் உருவாக்கப்பட்ட சாதனை கட்டுமானங்களையே உலக அதிசயங்களாக தேர்ந்தெடுத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையான உலக அதிசயம் என்னவென்று தெரியுமா..? மனிதன் உருவாக்கிய கடவுள், இந்த உலகை உருவாக்கினார் என்ற அவனுடைய நம்பிக்கை.
