கலோரிகள் ஜாக்கிரதை
பரோட்டா சூரி காமெடி ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு ஹோட்டல்களில் பரோட்டா சாப்பிடும் போட்டி வைக்கிறார்கள். இதை ஜாலியாக எடுத்துக்கொண்டு எக்கச்சக்க புரோட்டாக்களை மக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க ஆசைப்பட்டு பிராக்டீஸ் போன்றும் எக்கச்சக்க பரோட்டா சாப்பிட்டுப் பழகுகிறார்கள். உணவு என்ற வகையில் எப்போதாவது ஒரு முறை இரண்டு அல்லது மூன்று புரோட்டா சாப்பிட்டால் அது ஆபத்து இல்லாத ரகம். ஆனால், தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிக்கலோ சிக்கல்.
அப்படி என்னாகும்..?
பரோட்டா விஷம் அல்ல. ஆனால், அதிகமாகவும், அடிக்கடியும் சாப்பிடும்போது அது உடலுக்கு மெதுவாக ஆபத்தாக மாறுகிறது. ஏனென்றால் பரோட்டா பொதுவாக செய்யப்படுவது மைதா, வனஸ்பதி, டால்டா, ரிபைன்டு எண்ணெய், உப்பு போன்ற கலவை அதிக எண்ணெயில் சுடப்படுகிறது.
மருத்துவ ரீதியில் மைதா குடலுக்கான எதிரி. ஏனென்றால் மைதா என்பது நார்ச்சத்து இல்லாத உணவு. எனவே ஜீரணம் மெதுவாகும். மலச்சிக்கல், வயிறு உப்புசம், குடல் இயக்கம் அழற்சியாக்கிவிடும்.
அதேபோல் வனஸ்பதி, மீண்டு மீண்டும் பயன்படுத்திய எண்ணெய் உபயோகிப்பது இதயத்திற்கு ஆபத்து. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகம். இதனால் கொலஸ்ட்ரால் உயர்வு, ரத்த நாள அடைப்பு, மாரடைப்பு அபாயம், ஸ்ட்ரோக் ரிஸ்க் போன்ற பல அபாயங்கள் உள்ளன. மது அருந்துபவரின் கல்லீரல் எப்படி பாதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பரோட்டோ சாப்பிடுபவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவை எல்லாவற்றையும் விட பரோட்டா சர்க்கரை நோய்க்கு நேரடியாக அழைத்துச்செல்கிறது. ஏனென்றால் இதில் கிளைசெமிக் இன்டக்ஸ் மிக அதிகம். இது, ரத்த சர்க்கரையை திடீரென உயர்த்தும். இதனால் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், டைப்–2 டயாபட்டீஸ் உருவாகும். ஏற்கனவே சர்க்கரை உள்ளவர்களுக்கும் ஆபத்து
சிறு வயதினர் அளவுக்கு அதிகமாக அடிக்கடி பரோட்டோக்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் நீரிழிவு (சர்க்கரை) நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.
ஒரு ஒரு பரோட்டாவில் கிட்டத்தட்ட 300 – 400 கலோரி இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. இதனை அடிக்கடி சாப்பிட்டால் தொப்பை, கல்லீரல் பிரச்னையுடன் ஹார்மோன் தொந்தரவும் ஏற்படலாம்.
பரோட்டாவில் எந்த சத்தும் இருப்பதில்லை. எனவே, இதனை எடுத்துக்கொள்வதன் காரணமாக சோர்வு, கவனக்குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படலாம். எனவே, எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொள்வது தவறு இல்லை, அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆபத்தை நாமே வரவழைப்பதற்கு சமம்.
