கவித்துவம்
ஆயிரம் வார்த்தைகளில் சொல்லவேண்டியதை, நான்கே வார்த்தைகளில் நறுக்கென சொல்வதே கவிதை. சில கவிதைகள் சிரிக்க வைக்கும். சில கவிதைகள் நெஞ்சைத் தொடும். சில கவிதைகளில் காதல் கொஞ்சம். சில கவிதைகளில் உண்மை சுடும்.
அதேநேரம், சில கவிதைகள் மட்டும் வாழ்க்கையின் சிக்கலான முடிச்சைத் தொட்டுப் பார்க்கும். அப்படிப்பட்ட கவிதைகள் கல் நெஞ்சையும் கலங்க வைத்துவிடும்.
அப்படிப்பட்ட கவிதையில் ஒன்று இங்கே உள்ளது. படித்து கொஞ்ச நேரம் உறைந்து நில்லுங்கள்.
அப்பா
அன்றைய இரவு உணவுக்கு
அப்பா குளிர் பானங்கள்
வாங்கி வந்திருப்பது குறித்து,
அந்த குழந்தைகள்
குதூகலத்துடன் காணப்பட்டனர்.
அப்பா மிகவும் கவலையுடனிருந்தார்.
மரணத்துகேதுவான துயரம்
அங்கே பீடித்திருந்தது.
அம்மா உட்பட
குழந்தைகள் அனைவருக்கும்
குளிர்பானங்களை லோட்டாக்களில்
ஊற்றிக் கொடுத்தார்.
அவர் கைகள் நடுங்கின
கண்கள் பனித்திருந்தன.
மனைவி ஏதோ புரிந்தவளாய்,
கோபமாய் எழ முயன்று
தடுக்கி கீழே வீழ்ந்தாள்
குழந்தைகள் ஏற்கனவே
வீழ்ந்து கிடந்தனர்.
அவர் மிக பயங்கரமாய்
சத்தமிட முயன்று,
தோல்வியுற்று வீழ்ந்தார்.
அவர்கள் யாவரும்
வீழ்ந்து கிடப்பது
யாருக்கும் உடனடியாகத்
தெரியப் போவதில்லை.
– ஜோசப் மரிய மைக்கேல்
