மாரி செல்வராஜ் (பைசன் காளமாடன்)
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், எப்படி பெரியவனாகி தனது லட்சியக் கனவை அடைந்தான் என்ற கதையை கிராமங்களில் நிலவும் சாதிச் சூழல்களுக்கு நடுவில் சிறப்பாகச் சொன்ன இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த ஆண்டும் ஒரு சிறந்த படத்தை தமிழ் திரையுலகுக்கு கொடுத்துள்ளார்.
பாரதிராஜாவுக்கு பிறகு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நகர்ந்த தமிழ் சினிமாவை தன் படங்களின் மூலம் மீண்டும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்கிறார் மாரி செல்வராஜ்.
பைசன் படத்தில் ஜாதியால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன், தன்னைவிட ஜாதியில் உயர்ந்த ஒருவரின் பைக்கில் பயணிப்பதும், பேருந்தில் ஒரு ஆடு எதிர் தரப்பினரின் காலில் சிறுநீர் கழிப்பதும் எப்படி மிகப் பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். ஒரு நூல் பிசகினாலும் சாதிப் பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கதையை எடுத்து கத்தி மேல் நடண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். ஜாதியை தாண்டி தங்கள் துறையில் சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் ஒரு படமாகவும் ‘பைசன் காளமாடன்’ படத்தைத் தந்த மாரி செல்வராஜ், இந்த ஆண்டின் சிறந்த இயக்குநராக உயர்ந்து நிற்கிறார்.
