நம்பிக்கை துரோகம் செய்தவரை மன்னியுங்கள். ஆனால் அவரை மீண்டும் வாழ்க்கைக்குள் அனுமதிக்காதீர்கள். பாம்பின் குணம் ஒருபோதும் மாறாது.

மந்திரச்சொல்

மன்னிப்பு என்பது கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் நிம்மதி தரக்கூடியது. அதேநேரம், மன்னிப்புக்கும் மறந்துவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மனதில் இருக்கும் கோபம், வெறுப்பு, பழி வாங்கும் எண்ணத்தை விட்டுக்கொடுத்து நிம்மதியாக வாழ்வதற்கு மன்னிப்பு பயன்படுகிறது. அதேநேரம் நடந்த அனுபவத்திலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாமல் மீண்டும் அதே தவறு செய்வது, மறந்துவிடும் நிலை. 

நல்ல மனம் கொண்டவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மனப்பூர்வமாக மன்னிக்கலாம். ஆனால், துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து, வாழமுடியாது. ஏனென்றால், நம்பிக்கை ஒரு கண்ணாடி போன்றது. கண்ணாடி உடைந்துவிட்டால் அதை ஒட்டலாம். ஆனால் அந்த விரிசல்களை மறைக்கவே முடியாது. நம்பிக்கையும் ஒரு முறை உடைந்துவிட்டால், உறவு தொடர்ந்தாலும் மனம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும்.

இவர் மீண்டும் ஏமாற்றலாம், இவர் மாறிவிட்டாரா? இவர் சொல்வதை நம்பலாமா என்று நிறைய சந்தேகங்கள் மனதை குழப்பிக்கொண்டே இருக்கும்.

உண்மையான விருப்பம், அக்கறை, பொறுப்பு, குற்றவுணர்ச்சி இருந்தால் கெட்டவரும் நல்லவராக மாற முடியும். ஆனால் ஏமாற்றுவதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள் தங்கள் குணத்தை அத்தனை சீக்கிரம் மாற்றிக்கொள்வதில்லை. மீண்டும் ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்றே காத்திருப்பார்கள். பாம்பின் குணம் கொத்துவது. அதை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. அதேபோன்று நிறைய மனிதர்கள் தங்கள் குணத்தை எதற்காகவும், எப்போதும் மாற்றிக்கொள்வது இல்லை.

துரோகிகள் தங்கள் தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. அதற்கு பதிலாக நடந்த சம்பவத்திற்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணம் கூறி சமாதானப்படுத்துவார்கள்.

ஒரு நண்பர் கடன் வாங்கிவிட்டு திரும்பத் தராமல் ஏமாற்றியிருக்கலாம். அவர் சில ஆண்டுகளுக்குப் பிறகு வந்து மன்னிப்பு கேட்கிறார். மீண்டும் தவறு நடக்காது என்று சொல்லிவிட்டு, ஒரு தொகையை கடன் கேட்கிறார். பழைய கடனையும் சேர்த்துக் கொடுத்துவிடுவேன் என்று உறுதி கொடுக்கிறார்.

இந்த தருணத்தில், அவர் பணம் திரும்பத்தராத குற்றத்தை மன்னிப்பது பெருந்தன்மை. ஆனால், அவருக்கு மீண்டும் பணம் கொடுப்பது முட்டாள்தனம். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். 

ஒரு நபரை மீண்டும் வாழ்க்கைக்குள் அனுமதிக்காமல் இருப்பது, அவருக்குக் கொடுக்கும் தண்டனை அல்ல. அது, நிம்மதி, சுயமரியாதையைக் பாதுகாக்கும் செயல். இதனால் அந்த உறவு முறிந்துபோகலாம் என்றாலும் அதனால் உருவாகும் பாதிப்பை விட, நன்மையே அதிகம்.

திரையில் பற்றிய தீ வீடு முழுவதும் பரவக்கூடாது என்றால், தீப்பற்றிய திரையை வெளியே வீசுவதே சரியான நடவடிக்கை. உண்மையில் திருந்திய நபர் என்றால், அவரது செய்கையின் மூலம் நம்பிக்கையை உருவாக்குவார். புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருப்பார். ஆனாலும், அத்தனை சீக்கிரம் நம்புவதற்கு அவசியமில்லை.

மன்னிப்பு என்பது உயர்ந்த மனிதநேயம். அதேநேரம், எல்லையற்ற நம்பிக்கை துயரம் தரலாம். எனவே, அனுபவம் கற்றுக் கொடுத்த பாடத்தை மதிப்பதே உண்மையான முதிர்ச்சி. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment