பணக்கார மணமகனுக்கு ஐந்து பரீட்சை

பாதுகாப்பு நம்பிக்கை

கல்யாணத்துக்குப் பிறகு தங்கள் மகள் கஷ்டப்படக்கூடாது என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. அதனால் வசதியான மாப்பிள்ளை தேடுகிறார்கள். இந்த நேரத்தில், மாப்பிள்ளைக்கு நிறைய சொத்து இருக்கிறது, வீட்டு வாடகை வருகிறது, முதலீட்டில் இருந்து வட்டி வருகிறது. அதனால் வேலைக்குப் போவதில்லை, பெண்ணும் வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என்று சொன்னால், உடனடியாக கல்யாணத்துக்கு சம்மதித்து விடுகிறார்கள்.  

இது ராஜ வாழ்க்கை என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். இதற்குப் பின்னே ஒளிந்திருக்கும் ஐந்து ஆபத்துகளை அறிந்துகொள்ளுங்கள்.

  1. பணத்தின் மதிப்பு தெரியாத ஆணால் சொத்து, பணத்தைக் காப்பாற்ற முடியாது. யாரேனும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திவிடலாம். எனவே, பணத்தின் மதிப்பு புரிந்தவரா என்று சோதித்துப் பாருங்கள்.
  2. எல்லாமே என் சொத்து, என் பணம் என்ற எண்ணத்தில் இருப்பவர் பெண்ணை அடிமையாக நடத்துவார். எனவே, பெண்ணுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் கொடுப்பவரா என்பதைப் பேசி புரிந்துகொள்ளுங்கள்.
  3. வெளியே போகவேண்டிய அவசியம் இல்லாத ஆணுக்கு வீட்டில் மனைவியுடன் சண்டை போடுவதுதான் முக்கிய பொழுதுபோக்காக இருக்கும். எனவே, எவ்வளவு நேரம் வீட்டில் இருப்பார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். 
  4. பணத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் இருக்கிறாரா அல்லது பணத்தை பெருக்கும் எண்ணம் உள்ளவரா என்று பாருங்கள். காப்பாற்றினால் போதும் என்று நினைக்கும் சோம்பேறி என்றால் விலகிவிடுங்கள்.
  5. அவர்களை நம்பி எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன என்று கணக்கு போட்டுப் பாருங்கள். நான்கு குடும்பத்துக்காவது வேலை தரவில்லையென்றால் அவ்வளவு பணம் இல்லை என்பதே அர்த்தம்.

பணம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். ஆனால், பணத்துக்காக எந்த ஆணையும் திருமணம் முடிக்கத் தேவையில்லை. அது, பணத்துக்கு உடலை விற்பதற்கு சமம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment