ஹெர்னியாவுக்கு அச்சம் வேண்டாம்…

வயிறுக்குள் ஒரு கலாட்டா

வயிற்றுப் பகுதியில் ஏதேனும் வலுவிழந்த ஒரு பகுதியில் குடல் பிதுங்கி வெளியேறுவதே ஹெர்னியா எனப்படும் குடல் பிதுக்கம். இதனை குடல் இறக்கம் என்றும் சொல்வார்கள். முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைக்கும் இந்த நோய்வரலாம்.

முக்கியக் காரணங்கள்

முதுமையே முக்கியமான காரணமாக இருக்கிறது. முதுமை காரணமாக வயிற்றறைச்சுவர் தளர்ந்து போகலாம். இதனால் வயதானவர்களுக்கும் குடல் இறக்கம் ஏற்படலாம். அதுபோல் அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் போது குடல் இறக்கம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது, மலச்சிக்கலின் போது முக்கி மலம் கழிப்பதால், வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது. இது நாளடைவில் வயிற்றறை உட் சுவரைத் தளர்ச்சி அடையச் செய்கிறது. இது குடல் இறக்கத்துக்கு வழி அமைக்கிறது.

இதையடுத்து உடற்பருமன் அல்லது தொப்பை உள்ளவர்களுக்கு வயிற்றுத்தசைகளில் கொழுப்பு சேர்வதால் தசைகள் வலுவிழக்கின்றன. எனவே, இவர்களுக்கு குடல் இறக்கம் உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம்.

அதேபோல் வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் அவற்றின் அழுத்தம் காரணமாக குடல் இறக்கம் ஏற்படுவதுண்டு. ஆஸ்துமா, தீராத இருமல், அதிக பளுவான பொருளை திடீரெனத் தூக்குதல், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், சிறுநீர்த்துளை அடைத்துக் கொள்வது, புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்வது போன்ற நிலைமைகளில் குடல் இறக்கம் உண்டாகும்.

எப்படி கண்டுபிடிப்பது

வயிறு, தொப்புள் போன்ற பகுதிகளில் புடைப்பு தெரிவது இந்த நோயின் ஆரம்ப அறிகுறி. இதனால் வலி இருக்காது. இந்த புடைப்பு தானாகவே வயிற்றுக்குள் சென்றுவிடும், மீண்டும் வெளியே வரும் என்பதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இதை கவனிக்காத பட்சத்தில் அந்த புடைப்பில் வலி தொடங்கும். வயிற்றிலும் வலி உண்டாகும். மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும். இந்த நிலையில் கவனிக்கத் தவறினால், குடலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் அழுகிவிடும் சூழல் உருவாகலாம்.

குடல் இறக்கத்துக்கு மருந்து, மாத்திரை மூலம் தீர்வு காண்பதற்கு சாத்தியம் இல்லை. எனவே, அறுவை சிகிச்சை ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கும். ஆரம்பநிலையில் அறுவை சிகிச்சை செய்வது மிக எளிது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள தாமதம் செய்கிறவர்களுக்கு ஆபத்துகளும் அதிகம்; மீண்டும் குடல் இறக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் அதிகம்

Leave a Comment