வழக்கறிஞர் நிலா விளக்கம்.
சொத்துக்கு பட்டா வாங்குவது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பட்டா இருக்கிறது என்பதாலே சொத்தின் உரிமையாளர் என்று பலரும் நினைக்கிறார்கள். பட்டா என்றால் என்ன, பட்டா இருந்தால் மட்டும் சொத்தின் உரிமையாளராக மாற முடியுமா என்பது போன்ற சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் வழக்கறிஞர் நிலா.
பட்டா என்பது என்ன..?
பட்டா என்பது தமிழ்நாடு வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம். இது வரிவிதிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வருவாய் பதிவேடுகளுக்காக அரசாங்கம் ஒருவரை நில உரிமையாளராக அங்கீகரிக்கிறது என்பதை இது குறிப்பிட்டாலும், அது சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்டுவதில்லை.
பட்டா செலுத்துபவர் அல்லது பட்டாவில் பெயர் இருப்பதால் அவரால் சொத்துக்கு உரிமையாளராக சொந்தம் கொண்டாட முடியாது. பட்டா என்பது அரசாங்கத்தின் வருவாய்ப் பதிவேடு. வரி வசூல் மற்றும் நில வகைப்பாடு போன்ற நிர்வாக நோக்கங்களுக்காக இது அதிகாரிகளுக்கு உதவுகிறது. நில வருவாயை யார் செலுத்துகிறார்கள் என்பதை மட்டுமே பட்டா காட்டுகிறது. பட்டா இருப்பதால் அந்த நிலம் சொந்தமாகிவிடும் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.
சொத்தின் உரிமை
யார் வேண்டுமானாலும் நில வரி செலுத்தலாம். அதனால் பட்டா இருப்பது மட்டும் சொத்தின் உரிமைச் சான்றாக கருதப்படுவதில்லை. சொத்தின் உண்மையான உரிமை யாருக்குரியது என்பதை உரிமை ஆவணங்கள் மட்டுமே நிரூபிக்கின்றன. நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையானது உண்மையான ஆவணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதனல் நிலம் குறித்து பிரச்னைகள் எழும்போது, பட்டாவை உரிமைக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்று நீதிமன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன.
தேவையான ஆவணங்கள்
சொத்து உரிமையை நிலைநாட்டுவதற்கு முக்கிய ஆவணங்கள் தேவை. அதாவது பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம், தாய்ப் பத்திரம், பெற்றோர் அல்லது தாய் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள். இ.சி. எனப்படும் பொறுப்புச் சான்றிதழ், பாகப்பிரிவினைப் பத்திரம் போன்றவை மூலமே சொத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும்.
சொத்தின் சட்டப்பூர்வ உரிமையாளர் யார் என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றங்கள் இந்த ஆவணங்களையே ஆராய்கின்றன. பட்டா துணை ஆதாரமாக மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பட்டா என்பது முதன்மையாக ஒரு வருவாய்ப் பதிவேடு என்றும், நிலத்தின் உரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்றும் நீதிமன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன.
பட்டாக்களை வருவாய்த் துறை அதிகாரிகளால் திருத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும் என்பதால், அவற்றை நிரந்தரமான உரிமைச் சான்றாகக் கருத முடியாது. விற்பனைப் பத்திரங்கள் மற்றும் மூல ஆவணங்கள் போன்ற பதிவு செய்யப்பட்ட உரிமை ஆவணங்கள் மூலமாகவே உரிமை நிரூபிக்கப்பட வேண்டும்.
