ஞானகுரு பார்வை
கேள்வி : விருப்பமில்லா பெண்ணைத் தொட்டால் தலை வெடித்துவிடும் என்ற சாபம் பற்றி ராமனுக்குத் தெரிந்தும் சீதையின் மீது சந்தேகம் கொண்டது ஏன்..?
- டி.பாக்கியலட்சுமி, முத்தால்நகர்.
ஞானகுரு :
இன்று போலீஸ்காரர்கள் உங்களை கைது செய்து வழக்கு போட்டால், அந்த குற்றத்தை அவர்கள் தான் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் நீங்கள் நிரபராதி என்று அர்த்தம். ஆனால், பெண்களின் கற்புக்கு மட்டும் தலைகீழ் நிபந்தனை. ஒரு பெண் மீது களங்கம் சுமத்தப்பட்டால், அவளே தன்னுடைய பரிசுத்தத்தை நிரூபிக்க வேண்டும்.
ஏனென்றால், கற்புக்கு இலக்கணம் ஆண்களால் எழுதப்பட்டவை. ஆண்களின் உலகத்தில் பெண் என்பவள் ஒரு போகப் பொருள் மட்டுமே. அவள் நல்ல வேலைக்காரியாகவும், அடிமையாகவும், அழகியாகவும் இருந்தால் மட்டும் போதாது, பிறர் கை படாதவளாகவும் இருத்தல் வேண்டும். எனவே சந்தேகம் வரும் நேரத்தில் தீ குளித்து கற்பை நிரூபிக்கச் சொல்கிறான். இதையே விதியாகவும் நிர்ணயிக்கிறான். எல்லா இதிகாசங்களும் ஆண்களால் எழுதப்பட்டவை என்பதால் சீதைக்கும் அருந்ததிக்கும் இங்கு மதிப்பு கிடையாது.
ஆனால், இதனை பெண்களும் மனதார ஏற்றுக்கொள்வது தான் பேரதிசயம். அதைவிட அதிசயம், தங்களுக்கு ராமனைப் போல ஒரு கணவன் வேண்டும் என்று விரதமே இருக்கிறார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோடி ஆண்கள்.
பெண்கள் ராமனைப் போன்று ஒரு கணவனுடன் வாழ்வதை விட, ராவணனிடம் சிறையில் இருக்கலாம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். பெண்ணின் மதிப்பும், மரியாதையும் உணராத ஒருவர் நல்ல ஆண் இல்லவே இல்லை.
