மூச்சில் விசில் சத்தம் கேட்குதா..?

டாக்டர் ராமசுப்ரமணியன், ஹோமியோபதி மருத்துவர்

நுரையீரல் இயல்பாக சுருங்கி விரிவதில் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. அவற்றில் முக்கியமான ஆஸ்துமா அவஸ்தைகளை அறிந்துகொள்ளுங்கள்.

ஆஸ்துமா என்பது நுரையீரலில் உள்ள மூச்சுக்குழாய்களில் ஏற்படும் ஒரு நாள்பட்ட அழற்சி நிலை. இது மூச்சுத் திணறல், இருமல், மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். காற்றுப்பாதைகள் குறுகுவதால், குறிப்பாக மூச்சை வெளிவிடுவதில் சிரமம் ஏற்படும். இந்த நிலை புகையிலை, வாசனை திரவியங்கள், மற்றும் மகரந்தம் போன்ற பல்வேறு  ஒவ்வாமை காரணங்களால் தூண்டப்படலாம்.

ஆஸ்துமாவின் அறிகுறிகள்

இருமல், மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், மார்புப் பகுதியில் இறுக்கம்  ஆகியவற்றை குறிப்பிடலாம். ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வரும்.

நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தாலும் ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்னைகளும் ஆஸ்துமாவை வரவேற்கும்.

காரணங்கள்:

மகரந்தம், தலை பொடுகு போன்றவையால் அலர்ஜி ஏற்பட்டு, அதுவே ஆஸ்துமாவுக்கு தொடக்கமாக அமைந்துவிடலாம். சிகரெட் புகை, சமையல் புகை, வாகனப் புகை போன்றவை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அதேபோல சிலருக்கு வாசனை திரவியங்கள், பாடி ஸ்பிரே, சமைக்கும் வாசனைகள் ஒவ்வாமையை ஏற்பத்தும்.  சில வைரஸ் தொற்றுகளும் ஆஸ்துமாவுக்கு காரணமாக உள்ளன. பெற்றோரில் யாருக்காவது ஆஸ்துமா இருந்தால், குழந்தைகளுக்கும் வரலாம். பனிக்காலத்தில் ஆஸ்துமா அதிக அவஸ்தை தரும்.

மேற்சொன்ன காரணங்களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகளைச் சுருக்கிவிடும். அப்போது மூச்சுச் சிறுகுழல்கள் இன்னும் அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதேவேளையில் மூச்சுக்குழலில் உள்சவ்வும வீங்கிவிடும். இதனால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் வீங்கிய மூச்சுக்குழல் சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற்கெனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. குறிப்பாக அதிலும் மூச்சை வெளிவிடுவதில்தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் ஏற்படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது ‘விசில்’(வீசிங்) போன்ற சத்தம் கேட்பதும் உண்டு.

ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா?

ஆஸ்துமாவை முழுவதுமாக கட்டுப்படுத்தவே வழிகள் உள்ளன. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்ஞ்.. இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும். தூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை அப்புறப்படுத்தவேண்டும். வீட்டில் தேவையில்லாமல் சாமான்களை அடுக்கி வைக்கக் கூடாது. சுவர்களில் ஒட்டடை சேர வாய்ப்பு தரக்கூடாது.  ஒட்டடை இவர்களுக்குப் பரம எதிரி.

படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் அடிக்கடி மாற்றவேண்டும். இந்த இரண்டும் சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கி ஆஸ்துமாவைத் தூண்டும். இவர்கள் கம்பளியைப் பயன்படுத்தக் கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால்கூட ஆஸ்துமா அதிகரிக்கலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. பூக்களின் மகரந்தம் ஆஸ்துமாவைத் தூண்டும். வளர்ப்புப் பிராணிகளான பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில உயிரினங்களின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவுக்கு வரவேற்பு சொல்லக்கூடியவை. பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமெண்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை.

உணவு எச்சரிக்கை:

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்த உணவால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அந்த உணவைத் தவிர்த்தால் ஆஸ்துமா  தொல்லை தராது. பால், தயிர், முட்டை, மீன், கருவாடு, நண்டு, கடல் மீன், கடலை, பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்காய், கத்திரி, கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள், சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்களை சாப்பிடக்கூடாது. எளிதாகச் செரிக்கும் வகையில்  இளஞ்சூடான தண்ணீரை அருந்தினால் நுரையீரலில் சேருகின்ற சளி உடனுக்குடன் வெளியேறும். நீராவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

‘ஸ்பைரோமெட்ரி’ எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை முறைகளை அமைத்துக் கொள்வது  நல்லது.  ஒருவருக்கு ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் அந்த  ஒவ்வாமைப்பொருட்களை கண்டுபிடித்து அவற்றை தவிர்ப்பதுடன், அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்துகள் உள்ளன. முழுமையாக குணம் என்பது எந்த மருத்துவ முறையினாலும் பெற முடியாத நிலையில், ஆஸ்துமா பாதிப்பின் உச்ச நிலையை மட்டுப்படுத்தி, அந்த தொந்தரவு நீடிக்காமல் ஹோமியோபதி மருந்துகள் பார்த்துக்கொள்ளும்.

 ஆஸ்துமா ஒரு குணப்படுத்த முடியாத நோய் அல்ல. முறையான சிகிச்சையும், வாழ்க்கை முறை மாற்றங்களும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும்

Leave a Comment