காதலர் தின ஸ்பெஷல்
நம்மை ஒருவர் காதல் செய்கிறார் என்ற மகிழ்ச்சியே, மனிதருக்குக் கிடைக்கும் மிகப்பெரும் ஆனந்தம். அதனாலே மனிதர்கள் காதலுக்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
இன்று நூறு பேர் காதல் செய்கிறார்கள் என்றால் 90 சதவீதம் காதல் தோற்றுப் போகிறது. 10 சதவீத காதல் மட்டுமே திருமணம் வரையிலும் வருகிறது. அப்படி திருமணம் முடித்துக்கொண்ட காதல்களிலும் சுமார் 10 சதவீதம் பேர் விவாகரத்து கேட்கிறார்கள். 50 சதவீதம் பேர் சண்டை போட்டுக்கொண்டே வாழ்கிறார்கள்.
மகிழ்ச்சி தரக்கூடிய காதலே நிறைய துன்பம் தருவது ஏனென்று தெரியுமா..? காதலுக்கும் இலக்கணம் உண்டு என்பது தெரியாமல் காதலித்து ஏமாந்து போகிறார்கள்.
காதலை ஜெயிக்க வைக்கும் ஐந்து இலக்கணம் தெரிந்துகொள்வோம்.
- பொய்யில் பிறக்கும் காதல் நிலைப்பதில்லை. அதாவது விரும்பியவரை எப்படியாவது காதலிக்க வேண்டும் என்பதற்காக விதவிதமாக பொய் சொல்வார்கள். உண்மை தெரியவரும்போது பெரும் ஏமாற்றமாகி தோல்விக்குக் காரணமாகிவிடும்.
- கருத்துவேறுபாடு, பிரச்னை, சண்டை வரும்போது அதற்கான காரணங்களை ஆராயும் பக்குவமே முதல் இலக்கணம். திருமணத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அசட்டையாக இருந்தால் தோல்வியே கிடைக்கும்.
- தன்னை விட தான் விரும்புபவர் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவது தான் காதல். தன் சந்தோஷத்துக்காக, தன் நன்மைக்காக காதல் செய்பவர்கள் தோற்றுப் போவார்கள்
- காதல் என்பது விட்டுக்கொடுத்தல். தன்னை விரும்பும் நபருக்காக தன் விருப்பத்தை தியாகம் செய்வதே உண்மை காதல். இதற்காக காதலையும் தியாகம் செய்யவேண்டி வரலாம்.
- பொருந்தா காதல் நிலைப்பதில்லை. அதாவது டீச்சர் – மாணவன், பணக்காரர் – ஏழை, வயதானவர் – இளையவருக்கு இடையில் வரும் காதல் கொஞ்ச நாட்களில் காணாமல் போய்விடும். ஏனென்றால் ஒருவரது எதிர்பார்ப்பை இன்னொருவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.
தன்னை விட தான் நேசிப்பவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையே காதலுக்கு அடிப்படை. இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் திருமணத்தில் சேரமுடியாமல் போனாலும், அந்த காதல் அழகான ஓவியமாக மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும், நினைத்தாலே இனிக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
