மந்திரச்சொல்
அழித்துவிடுங்கள் என்பது எதிரிகளை அழிப்பது இல்லை. அதற்குப் பதிலாக நம் முன்னேற்றத்தை அழிக்கும் எதிரிகளை அழிப்பது. ஏனென்றால் உண்மையான எதிரிகள் வெளியே இருப்பதில்லை. அவர்கள் நமக்குள்ளேயே இருக்கிறார்கள்.
சொகுசு முதலில் இதமாக இருக்கும். சொகுசு அனுபவிப்பது தவறல்ல. வாழ்க்கையில் வசதியாக வாழ்வதும், உழைப்பின் பலனை அனுபவிப்பதும் அவசியம்தான். ஆனால் வசதி நம்மை வளர்க்காமல், நம்மை பலவீனப்படுத்தத் தொடங்குவது ஆபத்தாகிறது.
தினமும் அதிக நேரம் தூங்குவது சுகமாக இருக்கலாம். தொடர்ந்து பொழுதுபோக்கில் மூழ்குவது மகிழ்ச்சியாக இருக்கலாம். இன்று வேண்டாம், நாளை பார்க்கலாம் என்று தள்ளிப்போடுவது மனதுக்கு நிம்மதியாக இருக்கலாம். ஆனால் அந்த “நாளை” என்பது மீண்டும் மீண்டும் தள்ளிப்போய்க்கொண்டு இருப்பது ஆபத்து.
பயம் என்பது மிகப்பெரிய கண்ணுக்குத் தெரியாத எதிரி. பயம் உங்களைத் தாக்க வேண்டியதில்லை. உங்களை எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கச் செய்துவிடும். ஒரு பறவையை கூண்டில் அடைக்க கதவை பூட்ட வேண்டியதில்லை. அது வெளியே பறக்க முடியாது என்று அதற்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டால் போதும். அதேபோல, “என்னால் முடியாது” என்ற எண்ணம், “முயற்சி செய்து தோற்றுவிடுவேன்” என்ற பயம், பல நேரங்களில் உண்மையான தோல்வியைவிட ஆபத்தானது.
பயத்தைப் போலவே சோம்பல் ஒரு அமைதியான கொலைகாரன். வாழ்க்கையை அழிக்க வந்திருக்கிறேன் என்று சோம்பல் சொல்வதில்லை. அது மிகவும் இனிமையாகப் பேசும். ‘இன்னும் கொஞ்சம் ஓய்வெடு…” என்று சொல்லும். ஒரு நாள் தள்ளிப்போடுவது பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் அந்த ஒரு நாள் நூறு நாட்களாக மாறும்போது? எல்லாமே கைவிட்டுப் போய்விடும்.
அதனால், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான மிகப்பெரிய போராட்டம் மற்றவர்களுடன் அல்ல. தங்களுடன் மட்டும்தான். மனித மூளை இயல்பாகவே வசதியான பாதையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறது. அதனால் புதிய முயற்சி செய்வதைவிட பழக்கமான வாழ்க்கையில் செல்வது வசதியாகவும் எளிதாகவும் தோன்றும். ஆனால் வளர்ச்சி பெரும்பாலும் நமது வசதியான வாழ்க்கைக்கு வெளியேதான் நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்பது தவறு. வெற்றி பெற எதையெல்லாம் விட வேண்டும் என்பதுதான் சரியான கேள்வி.
அளவுக்கு மீறிய தூக்கம். தேவையற்ற பொழுதுபோக்கு. எல்லாவற்றையும் நாளைக்கு தள்ளிப்போடும் பழக்கம். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற பயம். தொடர்ந்து தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவது. தோல்வி பற்றிய சுயசந்தேகம். அளவுக்கு மீறிய சொகுசு. இவை அனைத்தும் சிறிய விஷயங்களாகத் தோன்றலாம்.
ஆனால் சிறிய துளை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்துவிடும். எனவே, நம்மை அழிக்கும் விஷயத்தை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், ஒரு நாள் அது நம்மையே கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். பயம், சோம்பல், சொகுசு, கோபம் போன்றவை உங்களை அழிக்கும் வரை காத்திருக்காதீர்கள். அதை முன்பே வென்றுவிடுங்கள். இதுதான் வெற்றிக்கான உண்மையான போராட்டம்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
