பணம் செலவழிக்கும் தந்தையைவிட, நேரம் செலவழிக்கும் தந்தையை பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.

மந்திரச்சொல்

குழந்தைக்கு அன்பு, ஆறுதல், பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை அம்மாவால் வழங்கமுடியும். தாயின் பாசத்தைப் போலவே தந்தையின் அன்பு, நெருக்கத்தை பிள்ளைகள் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள்.

தந்தையின் நெருக்கம் கிடைக்கவில்லை என்றால், என்னை அவருக்குப் பிடிக்கவில்லை, அவரிடம் பேச பயமாக இருக்கிறது, அப்பாவுக்கு என்னை விட முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன என்ற எண்ணங்கள் பிள்ளை மனதில் உருவாகிறது.   

குழந்தைக்காகவே அப்பா கடுமையாக உழைக்கலாம். பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்க்கலாம், விலை உயர்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம், விரும்பியதை எல்லாம் செய்து கொடுக்கலாம். இவை அனைத்தும் குழந்தையின் வசதியை அதிகரிக்கலாம். ஆனால், பிள்ளை எதிர்பார்க்கும் பாதுகாப்பு உணர்வு கொடுக்காது.

அப்பா என்னுடன் இருக்கிறார், நான் பேசுவதை கேட்கிறார், எனக்கு வரும் அச்சத்தை அப்பாவால் போக்கமுடியும் என்ற எண்ணங்களே ஆழமான பாதுகாப்பு உணர்வை உருவாக்குகிறது. ஏனென்றால் சின்ன வயதில் அப்பாவை முதல் ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால், தந்தை தனது வேலையை ஒதுக்கிவிட்டு தன்னுடன் இருப்பதை குழந்தை பெருமையாக உணர்கிறது.

தந்தை வாங்கித்தரும் பொம்மை உடைந்து போகலாம். ஆடைகள் சிறியதாகிவிடலாம். ஆனால், அப்பா எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார். அப்பா என்னுடன் கிரிக்கெட் விளையாடினார். எனக்கு தெரியாத பாடத்தை சுலபமாகப் புரியவைத்தார் என்பது போன்ற நினைவுகள் காலம் முழுக்க நீடிக்கிறது. அதனால்தான் குழந்தை வளர்ப்பில் பொருட்களை விட அனுபவங்களும் உறவுகளும் நீண்டகால தாக்கம் ஏற்படுத்துகின்றன.

பிள்ளைகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பயம் வரும். சூழ்நிலை அச்சம்,  புரியாத பாடம், நண்பர் பிரச்சினை, ஃபெயில், மிரட்டும் ஆசிரியர், உடல் மாற்றங்கள் போன்றவைகளை அப்பாவிடம் பேசுவதையே பிள்ளைகள் விரும்புகிறது. என்ன நடந்தாலும் அப்பா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது.

ஒரு தந்தை தினமும் குழந்தையுடன் சில நிமிடங்கள் அக்கறையுடன் பேசினால் போதும். பிள்ளை மனதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும். தினமும் பேசும் அப்பாவிடம் பிள்ளை மனம் திறந்து பேசுகிறது.

சிறுவயதில் கொடுக்காத நேரத்தை, பின்னர் வாங்க முடியாது என்பதை ஒவ்வொரு அப்பாவும் நினைவில் வைக்கவேண்டியது அவசியம். விலையுயர்ந்த பரிசுகள், பணத்தால் தவறவிட்ட நேரத்தை மீண்டும் பெற முடியாது. அப்பா அருகில் இல்லாத ஏக்கத்தை எந்த பொருளும் ஈடுகட்டுவதில்லை.

டீன் ஏஜ் வயதில் பிள்ளைகள் மனம்விட்டுப் பேசுவதில்லை என்று நிறைய தந்தைகள் வருத்தப்படுகிறார்கள். சின்ன வயதில் பிள்ளை விரும்பிய நேரத்தில் அருகில் இருந்து பேசும் பழக்கத்தை ஊக்குவிக்காததே இதற்கு முக்கிய காரணமாக இருக்க முடியும். சின்ன வயதில் பேச வாய்ப்பு இல்லாத குழந்தை, டீன் ஏஜ் வயதில் சட்டென வாயைத் திறப்பதில்லை. எனவே, தினமும் சில நிமிடங்களாவது முழுமையாக பிள்ளைக்கு என ஒதுக்கவேண்டியது அவசியம்.

குழந்தையுடன் இரண்டு மணி நேரம் இருப்பதாக சொல்லிக்கொண்டு, அந்த நேரங்களில் அலுவலக விஷயமாக போன் பேசுவது, சோஷியல் மீடியாவில் மூழ்குவது சரியில்லை. செல்போன் இல்லாமல், குழந்தை பேசுவதை இடைமறிக்காமல் கேட்பதே முக்கியம். குழந்தையுடன் விளையாடுவதும், குழந்தைக்குப் பிடித்த நண்பர்களைக் கொண்டாடுவதும் மகிழ்ச்சி தரும்.

குழந்தைக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. சொத்தின் மதிப்பு புரியாது. தோல்வியின் வேதனை தெரியாது. ஆனால், தந்தை தரும் அன்பு புரியும். எனக்காக அப்பா இருக்கிறார் என்ற எண்ணம் குழந்தையின் மனதில் உருவாக்கிவிட்டால், எந்தத் தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனவலிமை குழந்தைக்கு கிடைத்துவிடும்.

அதனால் நல்ல தந்தை என்பவர் அதிகம் சம்பாதிப்பவர் மட்டுமல்ல. குழந்தைப் பருவத்தில் தன்னுடைய இடத்தை இழக்காதவர்.

அப்பாஎனக்காக எவ்வளவு செலவு செய்தார் என்பதைக் காட்டிலும், என்னுடன் எவ்வளவு நேரம் இருந்தார்என்பதையே பிள்ளைகள் நினைவில் வைத்திருப்பார்கள். குழந்தைக்காக சம்பாதிப்பது பொறுப்பு என்றால் குழந்தைக்காக நேரம் செலவிடுவதே அன்பு.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment