பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்ளுமா..?

ஞானகுரு தரிசனம்

முதல் பார்வையில் மின்சாரம் பாய்வது போன்று காதல் நுழையும் என்று சிலர் நம்புகிறார்கள். முதல் காதலில் ஆண் அல்லது பெண் மீது ஏற்படும் ஈர்ப்பு என்பது  காதலுக்கான அறிகுறி அல்ல. அதன் பெயர் பிரமிப்பு.

ஊட்டிக்கு சுற்றுலா போகும்போது பச்சைக் கலரில், நீலக் கலரில் ரோஜாப்பூவைப் பார்த்து மெய் மறந்து நிற்பீர்கள். அடுத்த கணம் அதை மறந்துவிட்டு தலையில் சூடிக்கொள்வதற்கு இயல்பான ஊட்டி ரோஸ் போதும் என்றுதான் நினைப்பீர்கள். அப்படித்தான் முதல் பார்வையில் மனதைக் கவர்ந்தவர் நிச்சயம் காதலுக்கு உகந்தவர் என்று சொல்லமுடியாது.

ஏனென்றால் ஒருவருக்கு மட்டும்தான் முதல் பார்வையில் மின்சாரம் பாய்ந்திருக்கும், மனசுக்குள் பூ மலர்ந்திருக்கும். எதிர்ப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதே தெரியாது. ஜொள் விட்டதைப் பார்த்து எரிச்சலோ, கோபமோ கூட வந்திருக்கலாம். அதனால் முதல் பார்வையில் பிடித்துப் போனவரைக் காதலிக்க வேண்டும் என்று அலையும் பலரும் தோற்றுத்தான் போகிறார்கள். முதல் பார்வையில் கண்ணுக்குத் தெரிவது அழகு, உடை, நடை மற்றும் பேச்சு போன்ற புறத் தோற்றம்தான். மனதை முதல் பார்வையில் யாராலும் படிக்க முடிவது இல்லை. காதல் மனசு சம்பந்தப்பட்டதே தவிர உடல் சார்ந்தது இல்லை.

திருமணம் போன்ற விழாக்களில் இது போன்ற நிகழ்வுகள் நிறையவே நிகழும். ஏனென்றால் வயசுப் பெண்கள் அம்சமாக அலங்காரம் செய்துகொண்டு சந்தோஷமாக பட்டாம் பூச்சியைப் போன்று சுற்றித் திரிவார்கள். அந்த சூழலில் பெண்ணைப் பார்க்கும் எந்த இளைஞனுக்கும் மனம் படபடவென அடிக்கத்தான் செய்யும். திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் ஏகப்பட்ட இளைஞர்களுக்கும் முதல் பார்வை சுர்ரென்றுதான் இருக்கும். இதை ஒரு ஈர்ப்பு, அனுபவம் என்று எடுத்துக்கொள்ளும் மனநிலை வேண்டும். அதனால் முதல் பார்வையில் இழுத்தவரைக் காதலித்தே தீரவேண்டும் என்று அலையாதீர்கள். ஏனென்றால் உங்களை இழுத்தது காம உணர்வாகவும் இருக்கலாம்.

Leave a Comment