பிறந்த நாள் குறிப்புகள்
இசையால் அரசியல் உணர்வு, விடுதலை வேட்கையைத் தூண்டிய ஏழைக் கலைஞன் பாப் மார்லே. 1945ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி பிறந்த பாப் பார்லே எனும் கலகக் கலைஞன் நம்பிக்கையின் ஒளிவிளக்கு.
பாப் மார்லே என்றாலே வித்தியாசமான தலைமுடி, சிரிக்கும் முகம், வசீகரிக்கும் குரல் மட்டுமே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். ஜமைக்காவில் ஒரு காதல் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் மார்லே.
மார்லே பிறந்த கொஞ்ச நாள்களிலேயே தந்தை பிரிந்துவிட்டார். எனவே தன் தாயுடன் வசித்துவந்த பாப் மார்லேவுக்கு ஏழ்மை, அதிகார வர்க்கம், ஆளுமைகளின் கோரமுகம், தொழிலாளர்கள் வர்க்கத்தின் வலி என எல்லாமே நேரடியாகக் கிடைத்தது.
அத்தனை கஷ்டங்களுக்கும் நடுவில் இசை அவனுக்கு புத்துணர்வு கொடுத்தது. கிடைக்கும் நேரங்களில் தன் இசைப்பயிற்சியைத் தொடர்ந்துகொண்டேதான் இருந்த பாப் மார்லே யாரிடமும் முறையாக இசைப் பயிற்சி எடுக்கவில்லை.
தான் அனுபவித்த வலிகளையும் மக்கள் படும் வலிகளையும் இசை வாயிலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். இவர் வெளியிட்ட `Judge not’, `One cup of coffee’ போன்ற பாடல்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. இருப்பினும், தன் முயற்சியைக் கைவிடாமல் போராடிக்கொண்டே இருந்தார்.
1964ம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘Simmer down’ என்ற பாடல், ஜமாய்க்கா ஹிட் லிஸ்ட் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. அது பாப் மார்லேவுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.
1966-ல் ரீடா ஆண்டர்சன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில்தான் அவருக்கு `ரஸ்தஃபரி’ என்கிற மதம் அறிமுகம் ஆனது. பார்த்ததும் அவர்களின் கொள்கைகள் பிடித்துப்போனது. அதற்குப் பிறகு, தன் தலைமுடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினார். அது மட்டுமில்லாமல் அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடி புனித மூலிகையாகப் பார்க்கப்பட்டது. அதையும் புகைக்கத் தொடங்கினார்.
இந்த நேரத்தில் அவர் வெளியிட்ட `Get up stand up’ என்ற பாடல், இவரின் புகழை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. கறுப்பின மக்களைப் பார்த்து `எழுந்து நில்லுங்கள், உங்களுக்கான உரிமையை மீட்கப் போராடுங்கள், உங்களுக்கான உரிமையைப் பெற நீங்கள்தான் போராட வேண்டும்’ என்று அர்த்தம் வரும் இப்பாடலின் மூலம் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் குவிந்தார்கள்.
உலகம் முழுக்க மார்லே பிரபலமாகத் தொடங்கினார். பாடல் மூலம் புரட்சி செய்த மார்லே, உலகம் முழுக்க நீக்ரோ மக்களுக்கு ஆதரவாகத் தன் குரலை உயர்த்தினார். மக்கள், இவரது கொள்கைக்கு மட்டுமின்றி, குரலுக்கும் ரசிகர்களாக மாறத் தொடங்கினர். ஒருபக்கம் மக்கள் ஆதரவு முழுவதும் பாப் மார்லேவுக்குக் கிடைத்தது. கூச்சல் போடவில்லை, போராட்டம் செய்யவில்லை, கலவரம் வெடிக்கவில்லை. ஆனால், அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களை எழுச்சிபெற வைத்தார். அதிகார வர்க்கம் நடுங்கியது.
இதற்கு இவர் பரிசாக 1976-ல் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து சில காயங்களுடன் அவர் தப்பிவிட்டார். இரண்டு நாள்கள் கழித்து `ஸ்மைல் ஜமாய்க்கா’ என்ற ஓர் இசை விழாவில் கலந்துகொண்டார் மார்லே. `இந்த நிலையில் எதற்குக் கலந்துகொண்டீர்கள்’ எனப் பலரும் கேட்ட கேள்விக்கு, `இந்த உலகுக்குக் கேடு விளைவிக்கும் அவர்களே ஒரு நாள் கூட விடுமுறை எடுப்பதில்லை, அவர்களே அப்படியென்றால் நல்லது செய்யும் நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று உத்வேகமாகப் பதிலளித்தார்.
1990-ல் நிறுவப்பட்ட ஒரு சட்டத்தில், இவரின் பிறந்தநாளான இன்று ஜமாய்க்காவில் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது.
மார்லேயைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரின் வரலாற்றைப் படிக்கத் தேவையில்லை. அவரின் பாடல்களைக் கேட்டாலே போதும். ஏனென்றால் அவர் வாழ்க்கையின் அனுபவங்களைத்தான், அவரது பாடல் வரிகளும் பிரதிபலிக்கும்.
பாப் மார்லே ஒரு பாடகர் மட்டும் அல்ல. அவர் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்,
பயந்த மனங்களுக்கான துணிவு, வலியால் மௌனமான உலகத்திற்கான இசை. அவர் பாடல்கள் கேட்கப்படுவதற்காக எழுதப்படவில்லை. உயிர்களை எழுப்புவதற்காக எழுதப்பட்டவை.
அவரது ஒவ்வொரு ஆல்பமும் தனித்தன்மை வாய்ந்தவை.
“Get Up, Stand Up” – அடிமைத்தனத்துக்கு எதிரான போர்க்குரல்
“Redemption Song” – மன அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
“No Woman, No Cry” – வலிக்குள்ளும் நம்பிக்கை
“One Love” – பிளவுகளுக்கு மருந்து
சங்கிலி கைகளில் இல்லை, மனதில் தான். உள்ளது என்பது அவரது புகழ்பெற்ற வரிகள். அவர் எதிரி பற்றி பாடவில்லை, அடிமைத்தனம் பற்றி பாடினார். அவர் பழி வாங்கச் சொல்லவில்லை – விழித்தெழச் சொன்னார். அவர் வெற்றி பேசவில்லை, மன சுதந்திரம் குறித்துப் பேசினார்
மனிதர்களுக்கு பாப் மார்லே காட்டும் மருந்து:
- உன் மனத்தை விடுதலை செய்
- உண்மை பேச பயப்படாதே
- அன்பை அரசியலாக்காதே
- இசை இல்லையென்றாலும் உன் குரலை இழக்காதே
அவர் வாழ்ந்தது 36 ஆண்டுகள். ஆனால் அவர் விதைத்த நம்பிக்கை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழும்.
