வீட்டுக்குள் கெட்டவர், வெளியே நல்லவர்..?

குடும்பத்தில் பூகம்பம்

யார் மீது அதிக நம்பிக்கை வைக்கிறார்களோ, அவர்கள் மீதே மனிதர்கள் அதிகம் கோபப்படுகிறார்கள். கணவன், மனைவி, குழந்தை, பெற்றோர், உடன் பணியாற்றுபவர்கள், வேலைக்காரர்கள் என்று நெருக்கமான நபர்களிடமே பலரும் கோபம் காட்டுகிறார்கள். தெரிந்தவர்கள் செய்யும் சின்னச்சின்ன தவறுகளுக்கு எரிமலை போன்று கொதிக்கிறார்கள்.

அதேநேரம், வீட்டுக்கு வெளியே ரொம்பவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதாவது, ஹோட்டலில் உணவு தாமதமாகும்போது, பஸ் லேட்டாக வரும்போது, யாரேனும் வந்து மோதும்போது, அவற்றை சாதாரண தவறுகளாக மன்னித்துவிடுகிறார்கள், அதாவது முகம் தெரியாத மனிதர்கள் மீது கோபப்படுவதில்லை.

அதேபோன்று, அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அவர்கள் மீது கோபப்படுவதில்லை. கைதவறி பொருளை உடைத்துவிட்டால், பணத்தை தொலைத்துவிட்டால், முக்கியமானதை செய்ய மறந்துவிட்டால், கொஞ்சம் வருத்தப்படுவார்களே தவிர, அவர்கள் மீது கோபப்படுவதில்லை, அவர்களே அவர்கள் தண்டித்துக்கொள்வதில்லை.

அவர் செய்யும் தவறுகளை மன்னித்துவிடுகிறார். ஆனால், பிறர் செய்யும் தவறுக்கு மட்டும் தண்டிக்கவும் கண்டிக்கவும் செய்கிறார். இது எப்படி சரியாக செயலாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

கோபப்படுபவர்களும் கோபத்துக்கு ஆளாகும் நபர்களும் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு. இதனால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், டென்ஷன், உடல் நடுக்கம் உண்டாகிறது. ஒருவரது கோபம் இரண்டு பேரையும் காயப்படுத்துகிறது, ஆரோக்கியம் கெட்டுப் போகிறது.

மூன்றாம் மனிதர்களை மன்னிக்கும் மனப்பக்குவம் வீட்டுக்குள்ளும் அலுவலகத்திற்குள்ளும் வரவேண்டும். வெளியே நல்லவராகவும் வீட்டில் கோபக்காரராகவும் இருக்கத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் நல்லவராக இருங்கள். யார் தவறு செய்தாலும் மன்னித்துப் பழகுங்கள்.

மன்னிப்பு மற்றவருக்கு மட்டுமல்ல, கோபப்படுபவருக்கும் நன்மை செய்யும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment