மகளிர் தினம் சிந்தனை
’’மகளிர் தினத்துக்கு பெண்களை வாழ்த்துங்கள்… இனி ஆண்களும் பெண்களும் சமம் எனும் நிலை உலகம் முழுவதும் வரவேண்டும்’’ என்று ஞானகுருவிடம் கேட்டாள் சுஜா.
’’ஆண்கள் இருக்கும்வரை, பெண்களுக்கு அப்படியொரு நிலை வராது.’’ என்றார் ஞானகுரு.
’என்ன இப்படி அச்சானியமா சொல்லிட்டீங்க… விண்வெளிக்குக்கூட பெண்கள் போயிட்டு வந்தாச்சு, எந்த விதத்தில் ஆணைவிட பெண் குறைந்தவள்..…?
‘‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் இப்படிச் சொல்கிறேன். அதாவது, பெண் மட்டுமே குழந்தை பெறுவார் என்ற நிலை இருக்கும் வரை சமமாக முடியது…’’ என்றேன்.
’’என்ன சொல்றீங்கன்னே புரியலை?’’
’’பெண் இயல்பிலேயே தாய்மைக்கு அதிக மதிப்பு கொடுப்பவள். தன்னுடைய பிள்ளைக்காக எந்த தியாகத்தையும் செய்யக்கூடியவள். அதனால், எத்தனை திறமையான பெண் என்றாலும், அவருக்குக் குழந்தை பிறந்ததும் தனது ஆசைகளை எல்லாம் அழித்துக் கொண்டு குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். தான் அடைய முடியாத உயரங்களை எல்லாம் தன் பிள்ளை தொட்டுவிடத் துடிக்கிறாள். இந்த வகையில் தன் பிள்ளைக்கே பெண் அடிமையாகி விடுகிறாள்…’’ என்றார் ஞானகுரு.
’’அப்படியென்றால் காலம் முழுக்க பெண் அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா?’’
’’இல்லை… ஆண்களை வெல்ல வேண்டும். தன்னுடைய நலனுக்காக, தன்னுடைய சந்தோஷத்திற்காக கணவன், பிள்ளையைக் கூட தூக்கிப் போடுவதற்குப் பெண் தயங்கக்கூடாது. பாசத்துக்கு அடிமை என்ற நிலையில் இருந்து பெண் நகர்ந்தால் மட்டுமே ஆணை வெல்ல முடியும். ஆனால், எல்லா பெண்களுக்கும் குடும்பம் என்ற அமைப்பும், அம்மா என்ற சொல்லும் ரொம்பவே பிடித்தமானவை. அதனால், பெண் அடிமையாக இருக்கவே ஆசைப்படுகிறார்’’
‘’அப்படியென்றால் லிவிங் டுகெதர் போன்று வாழ வேண்டுமா..?’
’’இல்லை. பிடித்த ஆண்களுடன் எல்லாம் வாழ்வது, லிவிங் டுகெதர் என்பது ஆண்களுக்கே சாதகம். சுதந்திரமான பெண்களிடம் நட்பு பாராட்டுவது ஆண்களுக்கு எளிது. அப்படிப்பட்ட பெண்ணை அவள் வழியிலே ஏமாற்றி எவ்விதபொறுப்பும் இன்றி இன்பம் அனுபவிக்க முடியும். அவன் அனுபவிக்கும் பெண்ணின் குழந்தைக்கோ, எதிர்காலத்திற்கோ எவ்விதமான பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல் வெவ்வேறு பெண்ணிடம் தாவிக்கொண்டே இருப்பான். ஆனால், என்றுமே பெண்களால் இப்படி வண்டு மாதிரி ஒவ்வொரு பூவாக சென்று கொண்டிருக்க முடியாது என்பதால் நஷ்டப்படப் போவது சுதந்தரமான பெண்கள்தான்…’’
’’அப்படின்னா பெண்கள் என்னதான் செய்யணும் சாமி..?’’
’’ஆணும் பெண்ணும் வெவ்வேறு உலகம். ஆணும் பெண்ணும் இரு துருவங்கள். ஆனால், இரண்டும் ஈர்க்கப்படுவதுதான் அழகு, இணைவதுதான் இயற்கை. இதில், ஆண் எப்போதும் ஆணாக, பெண் எப்போதும் பெண்ணாகவே இருக்கவேண்டும். ஒருவரையொருவர் பயன்படுத்தும் நிலை வரக்கூடாது. ஒருவரையொருவர் மதிக்கும் அன்பு இருத்தல் வேண்டும். சுயநல ஆணிடம் இருந்து பெண்ணும், சுயநல பெண்ணிடம் இருந்து ஆணும் விலகியே இருத்தல் வேண்டும்.
பெண்ணை போகப் பொருளாகவும், தன்னுடைய சொத்தாகவும் மதிக்கும் ஆண் அயோக்கியன் என்றால், ஆணை பணம் காய்ச்சி மரமாகவும், தன்னுடைய அடியாளாகவும் நினைக்கும் பெண்ணும் மோசம்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவும், அன்பு பாராட்டவும் வேண்டும். இந்த நிலை வருவது பெண்ணின் கையில்தான் இருக்கிறது. ஆம், ஆண் பிள்ளையை உயர்வாக நினைத்து வளர்க்கக்கூடாது. அது தான் பெண் சுதந்திரத்தின் ஆரம்பமும் முடிவும். பிள்ளை பெறும் விருப்பமும், வளர்க்கும் விதமும் பெண்ணுக்கும் ஆணுக்கும் சமமாக இருக்க வேண்டும்…. அதற்கு பெண்களும் ஆண்களும் பெரும் மாற்றத்தை சந்திக்க வேண்டும்’’ என்றார் ஞானகுரு.