பரீட்சை என்றாலே பயமா..?

தைரியம் முக்கியம் மாணவர்களே…

தேர்வில் தோற்றவர்கள் வாழ்க்கையில் ஜெயித்துள்ளார்கள். எனவே தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே போதும், வெற்றி நிச்சயம்.

தேர்வில் அதிக மார்க் வாங்கவில்லை என்றால் அடித்தே விரட்டிவிடுவேன் என்று சில பெற்றோர்கள் மிரட்டுவதுண்டு. இது மதிப்பெண் மீதுள்ள பாசம் அல்ல, மாணவர் மீதுள்ள பாசம் என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

 சில மாணவர்கள் இரவெல்லாம் கண் விழித்துப் படிக்கிறார்கள். காலையில் தேர்வெழுதி தோற்றுப் போகிறார்கள். காரணம் என்ன தெரியுமா..?  

இரவெல்லாம் தூங்காமல் கண் விழித்தால், எப்படி காலையில் புத்துணர்ச்சியுடன் தேர்வு எழுத முடியும்?  நன்றாக தூங்க வேண்டிய நேரத்தில் படித்துக் கொண்டிருந்தால், காலையில் உடலும் மனமும் சோர்வாக இருக்கும். எனவே, தூக்கமும் முக்கியம். போதிய அளவுக்குத் தூங்கினால் மட்டுமே உற்சாகத்துடன் பரீட்சை எழுத முடியும். அதிக மதிப்பெண் வாங்கவும் முடியும்.

பெரும்பாலான மாணவர்களுக்கு பரீட்சை என்ற வார்த்தையே கடும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதயத் துடிப்பு அதிகரிப்பது, மனதில் பதட்டம் தோன்றுவது, என்னால் முடியாது என்ற எண்ணம் வருவது போன்றவை எல்லாம் பரீட்சை பயத்தின் வெளிப்பாடுகள். இதையெல்லாம் வெளிப்படையாகப் பேச முடியாமல் உள்ளுக்குள் வைத்திருக்கவும் முடியாமல் தடுமாறுவார்கள்.

உண்மையில் பரீட்சை என்பது மாணவர்களின் அறிவை அளக்கும் ஒரு சாதாரண அளவீட்டு முறையே தவிர வாழ்க்கையை தீர்மானிக்கும் இறுதி தீர்ப்பு அல்ல.

பரீட்சை பயம் உருவாகுவதற்கு முக்கிய காரணம் தயார் இல்லாமை, அதிக எதிர்பார்ப்பு மற்றும் தோல்வி பற்றிய அச்சம். முதல் ரேங்க் எடுக்க வேண்டும், அனைவரையும் விட சிறப்பாக எழுத வேண்டும், பெற்றோரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற அழுத்தம் மாணவர்களின் மனதில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதன் விளைவாக படித்த விஷயங்கள்கூட நினைவில் வராமல் போகும்.

இந்த பயத்தை குறைக்க சில எளிய வழிகள் இருக்கின்றன. முதலில், திட்டமிட்ட படிப்பு மிகவும் முக்கியம். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி படிப்பதை பழக்கமாக்கினால், கடைசி நேர பதட்டம் இருக்காது.

 இரண்டாவது, புரிந்து படிக்கும் பழக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனப்பாடம் செய்வதற்குப் பதிலாக கருத்தை புரிந்து கொண்டால் அது நீண்ட நேரம் நினைவில் இருக்கும். மூன்றாவது, மாதிரி வினாத்தாள்களை எழுதிப் பயிற்சி செய்வது நம்பிக்கையை அதிகரிக்கும். இது பரீட்சை சூழலை முன்கூட்டியே அனுபவிக்க உதவும்.

மேலும், மாணவர்கள் தங்களுடைய உடல் மற்றும் மனநலத்தையும் கவனிக்க வேண்டும். போதுமான தூக்கம், சீரான உணவு, சிறிய உடற்பயிற்சி ஆகியவை மனஅழுத்தத்தை குறைக்கும். பரீட்சையை ஒரு சோதனை என்றே பார்க்க வேண்டும்; வாழ்க்கையின் முடிவாக அல்ல.

மிக முக்கியமாக, தோல்வியை பயமாக பார்க்காமல் ஒரு பாடமாக பார்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலரும் ஒருகாலத்தில் தோல்விகளை சந்தித்தவர்களே. எனவே, பரீட்சையை பயமாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டால் அது ஒரு பெரிய வாய்ப்பாக மாறும்.

பயத்தை விட முயற்சி பெரியது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டால், பரீட்சை என்ற வார்த்தை அவர்களுக்கு நம்பிக்கையை தான் அளிக்கும். இதற்கு அடிப்படைத் தன்மையாக ஆசிரியர் கற்றுக் கொடுக்கும் பாடங்களை அவ்வப்போது படிப்பது தான் நல்லது.

மாணவர்களுக்கு இருக்கவேண்டிய ஒரே குறிக்கோள், பரீட்சையில் தேர்ச்சி அடைவது மட்டுமே. இந்த குறிக்கோளை அடைவதற்கு மேற்கொள்ளும்  செயல்களில் தான் மாணவரின் வெற்றி அடங்கியுள்ளது. 

 யார் ஒருவர் பயிற்சியும் முயற்சியும் எடுத்துக்கொண்டு தேர்வுக்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ, அவரது வெற்றியைத் தடுத்து நிறுத்துவதற்கு யாராலும் முடியாது.  வெல்லுங்கள் மாணவர்களே…

– எம். கோமதி, நூலகர்,  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம்,

அரும்பாக்கம் , சென்னை 106. செல்போன் : 9840738048

Leave a Comment