காதலர் தின ஸ்பெஷல்
காதல் புனிதமானது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். அதேநேரம், எது காதல் என்பதில் குழப்பமும் இருக்கிறது.
குறிப்பாக பப்பி லவ், ஃபர்ஸ்ட் லவ் பற்றிய குழப்பம் எல்லோருக்கும் இருக்கிறது. டீன் ஏஜ் வயதில் வருவது பப்பி லவ். பொதுவாக பையன்களுக்கு டீச்சர் தேவதையாகத் தெரிவார். பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியர் ஹீரோவாகத் தெரிவார். அப்பா, அம்மாவைத் தாண்டி புதிய நபரிடம் கூடுதல் அறிவு, அழகு, டிசிப்ளின், ஆளுமையைப் பார்த்ததும் பப்பி லவ் வருகிறது.
சினிமா நடிகர், நடிகை, சக மாணவர், மாணவியிடம் உருவாகும் கிளுகிளுப்பும் பப்பி லவ்தான். இந்த உணர்வுகள் எல்லாமே பருவ வயதில் உண்டாகும் ஹார்மோன் விளையாட்டு. அதனாலே, வேறு ஒருவரை பார்த்தவுடன் இந்த லவ் மாறிவிடும்.
பள்ளி வயதில், கல்லூரி காலகட்டத்தில் மனதுக்குள் லவ் தோன்றினாலும் எல்லோரும் காதலை தைரியாக சொல்வதில்லை. ஆர்வக்கோளாறு அல்லது தோழமை அழுத்தம் காரணமாக தைரியமாக ஒருசிலரே லவ் சொல்கிறார்கள். சொல்லப்பட்ட காதலை பரிசீலனை செய்வதற்கு அல்லது நிராகரிக்கத் தெரியாமல் காதலை ஏற்றுக்கொள்கிறார்கள். இப்படித்தான் பெரும்பாலான நபர்களுக்கு முதல் காதல் அமைகிறது.
ஒருவர் மீது மட்டுமே காதல் வரும், முதல் காதல் முக்கியமானது என்று காலகாலமாக சொல்வதை நம்பி, முதல் காதலை வாழவைப்பதற்கு ஆணும், பெண்ணும் போராடுகிறார்கள். உண்மையில் பப்பி லவ் போலவே ஃபர்ஸ்ட் லவ் என்பதும் நிஜமான காதல் அல்ல. எனவே முதல் காதலை இழப்பதற்கு எந்த குற்றவுணர்ச்சியும் அவசியம் இல்லை. இது காதல் தோல்வி அல்ல, காதல் புரிதல்.
பள்ளி ஆசிரியை, ஆசிரியரிடம் தொடங்கும் காதல் முதுமைக் காலத்தில் நர்ஸ், டாக்டர் வரையிலும் வந்துகொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் காதல் வரும் என்பதே உண்மை.
எனவே, முதல் காதலில் தோற்றுப்போனவர்கள் மீண்டும் ஒருவரை காதலிப்பதற்குத் தயங்க வேண்டியதில்லை. காதல் முறிந்துபோனால் வாழ்க்கை முடிந்ததாக அர்த்தம் இல்லை. மீண்டும் ஒரு காதல் வரும், காத்திருங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
