அமீர்கான் காதலுக்கு வயதாவதே இல்லை…

மீண்டும் ஒரு பெர்ஃபக்ட் திருமணம்

மிஸ்டர் பெர்ஃப்ஃக்‌ஷனிஸ்ட் என்று பாலிவுட்டில் புகழப்படும் அமீர்கான், தன்னுடைய 61வது வயதில் மூன்றாவது திருமணம் முடித்து, வாழ்க்கையில் ஒரு புத்தம் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

சினிமா குடும்பத்தில் 1965ம் ஆண்டு பிறந்த அமீர்கான், 1988ம் ஆண்டு வெளியான, ‘கயாமத் சே கயாமத் தக்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர். வெற்றி, கலெக்‌ஷன், ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ்க்கு ஆசைப்படும் வழக்கமான ஹீரோவாக இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தனித்துவமிக்க நடிகராகவே இன்று வரை இருக்கிறார்.

விழிப்புணர்வு நாயகன்

அவருடைய லகான், தாரே ஜமீன் பர், பிகே, தங்கல் போன்ற படங்கள் வசூல் ரீதியான வெற்றி பெற்றதுடன் சமூக மாற்றங்களையும் வலியுறுத்தின. குறிப்பாக கற்றல் குறைபாடுள்ள டிஸ்லெக்சியா குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை, ‘தாரே ஜமீன் பர்’ படமும் கல்வி அழுத்தம் குறித்த விவாதத்தை 3 இடியட்ஸ் படமும் உருவாக்கின.

நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் அமீர்கான் பல முக்கியமான முயற்சிகளை செய்துள்ளார். சத்யமேவ ஜெயதே தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் குழந்தைகள் மீதான வன்முறை, பெண்கள் பாதுகாப்பு, மருத்துவ மோசடிகள்
போன்ற விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்தார்.

வருடத்திற்கு நாலைந்து படங்கள் நடித்து எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்கும் எண்ணமில்லாமல், ஒரு கதையை தேர்வு செய்தால் அதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வார் என்பதாலே அவரை பாலிவுட்டில் மிஸ்டர் பெர்ஃப்ஃக்‌ஷனிஸ்ட் என்கிறார்கள். ஆனால், தான் ஒரு பெர்ஃப்ஃக்‌ஷனிஸ்ட் இல்லை, சாதாரண மனிதர் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் அமீர்கான்.

படங்கள் தோல்வி அடைந்தாலும் அமீர்கான் பாதை மாறுவதில்லை. நம்பிக்கையுடன் தன்னை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருப்பார். இன்னும் சிறப்பாக வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதே நம்பிக்கை கொண்டவர். முன்னேற்றத்துக்காக தன்னை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர் என்பதை அவரது திருமணங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

முதல் திருமணம்

அமீர்கான் 1986ஆம் ஆண்டு தனது குழந்தைப் பருவ தோழியான ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். குடும்ப எதிர்ப்புகளை மீறி நடந்த இந்த காதல் திருமணத் தம்பதிக்கு ஜுனைத் கான் மற்றும் ஐரா கான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுமார் 16 ஆண்டுகள் கழித்து 2002ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

இரண்டாவது திருமணம்

2005ஆம் ஆண்டு இயக்குநரும் தயாரிப்பாளருமான கிரண் ராவை அமீர்கான் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2011ம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஆசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். பின்னர் 2021ம் ஆண்டு இருவரும் பிரிவை அறிவித்தாலும், நண்பர்களாகவும், பெற்றோர்களாகவும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மூன்றாவது திருமணம்

2026 ஜூலை 5ம் தேதி அமீர்கான் தனது நீண்டநாள் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை எளிய குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் எளிமையாக, நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கௌரி ஸ்ப்ராட் முன்பு அழகு சாதனங்கள் துறையில் பணியாற்றிய கெளரிக்கு முந்தைய திருமணத்தில் ஒரு மகன் இருக்கிறார்.

அமீர்கானின் திருமண வாழ்க்கை ஒரு முக்கியமான உண்மையை காட்டுகிறது:
ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறவுகள் மாறலாம், அனுபவங்கள் மாறலாம், பாதைகள் மாறலாம். ஆனால், தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் மனநிலை இருந்தால், அவர் மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும்.

அமீர்கான் வாழ்க்கை, வெறும் சினிமா வெற்றிக் கதை அல்ல; மாற்றங்களை ஏற்றுக்கொண்டு முன்னேறும் மனிதரின் நம்பிக்கைப் பயணம். எத்தனை தடவை விழுந்தாலும், வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் திறன் மனிதருக்கு இருக்கிறது என்பதற்கான நம்பிக்கை இது.

Leave a Comment